ஈழத்தின் யாழ்ப்பாணம் நெடுந்தீவினைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு அழகப்பா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பினை நிறைவு செய்தவரும், புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் வசிப்பவருமாகிய படைப்பாளர் ஈழபாரதி எழுதிய ‚பனைமரக்காடு‘ ஐக்கூ நூல், ‚புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்‘ கவிநூல் ஆகியவற்றின் அறிமுக விழாவானது, 02.03.2019 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு காலையடி மறுமலர்ச்சி கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது.
நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற அதிபர் சரோஜினி கனகரத்தினம் தலைமை வகித்தார். முதன்மை அழைப்பாளராக தென்மராட்சி மற்றும் யாழ்ப்பாணம் வலயக் கல்விப்பணிப்பாளர் சு.சுந்தரசிவம் மற்றும் ஆசிரியை திருமதி கலைவாணி சுந்தரசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.
வரவேற்புரையினை இளைஞர் கழக உறுப்பினர் யாதவன் மாதங்கி வழங்கினார். தமிழ்மொழி வாழ்த்தினை பண்டத்தரிப்பு யோகி அறநெறிப் பாடசாலை மாணவிகள் இசைத்தனர். தலைமையுரையினைத் தொடர்ந்து நூல்களின் அறிமுக உரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை கலாபூஷணம் ஆ.கனகரத்தினம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வற்சலா துரைசிங்கம் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து பிரான்ஸ் ஈழபாரதி எழுதிய ‚பனைமரக்காடு‘ மற்றும் ‚புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்‘ ஆகிய இருநூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் நூல்களை அறிமுகம் செய்துவைக்க முதலாவது பிரதியினை நகையக உரிமையாளர் பீற்றர் ஆனந்தன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பங்கேற்றோர் நூல்களைப் பெற்றனர்.
‚புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்‘ நூலின் விமர்சனப் பகிர்வினை சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.நிகேஷ் நிகழ்த்தினார். ‚பனைமரக்காடு‘ நூலின் பார்வையை வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா நிகழ்த்தினார். நூலாசிரியரின் சகோதரனாகிய பீற்றர் ஆனந்தன் தனது வாழ்த்தினை அளித்தார்.
ஏற்புரையினை நூலாசிரியர் பிரான்ஸ் ஈழபாரதி வழங்கினார். நன்றியுரையினை மின்னூல் வெளியீட்டாளர் யாழ்பாவாணன் வழங்கினார்.
நிகழ்ச்சித் தொகுப்பு: சஜீத்.
ஈழபாரதி அவர்கள் ‚நாட்குறிப்பு‘ எனும் நூலினையும் வெளியீடு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.