மருதாணியிட்ட கரங்களால்
மாலை நேர மேற்கு வான்மங்கை
செங்கம்பளம் விரித்திருக்கிறள்…
நீண்டு பரந்து கிடக்கும்
இந்தக் கடற்கரை வெளிதான்
என் தேடல்களுக்கு எப்போதும்
தீனி போட்டுக்கொண்டிருக்கிறது…
எந்தன் சிந்தனைகள்
நினைவுகளைக் கடந்த
நிஜங்களை மட்டுமே
தேடிக்கொண்டிருக்கின்றன…
காரிருள் மெல்ல மெல்லக்
கவர்ந்திழுத்துப் போகிறது
என்னோடு துணைக்கு வந்த
அந்தச் செம்பவளக் கதிரவனை…
அகப்பட்டுக் கொண்டேன்
தனிமையின் அடர் வனத்தில்…
என் உள்ளத்து வேதனைகள்
ஊற்றெடுக்கத் தொடங்கிவிட்டது…
தேற்றித் தேற்றியே
போராடித் தோற்றுப் போகிறேன்…
தனிமையில் நிஜங்களை விட
நினைவுகளுக்கே பலம் அதிகம்…
தவிர்க்க முடியாமல்
உணர்வின் ரணங்களுக்குள்
சிக்கக் கொண்டது சிந்தனை…
துயர் சூழ்ந்த அடர் இருட்டில்
தனித்திருக்கிறேன்
ஒற்றைப் பறவையாய்…
என்னைச் சுற்றிலும்
நிசப்தமே வியாபித்திருக்கிறது…
ஆனாலும் எப்போதும் போலவே
தமிழும் சில வார்த்தைகளும்
இப்போதும் துணையாகியிருக்கிறது…
– வேலணையூர் ரஜிந்தன்.