பனிப்பொழுதில்…

பாலைவனத்தில் மலர் பறித்து சூடிட வாவென்றேன்
காலைப்பனித்துளியில் என் முகத்தை தேடுகின்றாய்
ஓலையெழுதிய சங்ககாலக்காதலை ஓசையின்றி ஒட்டியாணமாக்குகிறாய்..

ஓசோன் படலத்தில் ஒரு ஓட்டை
மனசுப்படலத்தில் பல ஓட்டைகள்
வலசை போகும் பறவைகளாய்
பால்வீதிவரை தொடரும் கனவுகள்
தாராளம்…

பால் நிலாவில் மேடையமைத்து
பாலோடு கவிச்சோறு உண்ணவாவென்றழைத்தேன்
போதாது என்றே புது உலகம் தேடிப்போகிறாய்
பால்வீதியில் ஒரு வீடு உன் உச்சக் கனவு என்றாய்

போலி உலகை வெறுக்கிறாய் பனிப்படலம் தாண்ட
பாஸ்போர்ட் கேட்கிறாய்
லைலா மஞ்னு கல்லறை தட்டியே
ஏழாம் நூற்றாண்டு காதலை கேட்கிறாய்..

பல நூறாண்டுகள் வாழும் நம்காதலை எழுத மறுக்கிறாய்
நயத்தோடு கவிச்சோறு
நித்தம் படைத்திடுவோம் பனிப் பொழுதுகளில் என்றழைத்தேன்…

நீயோ வெண்மேகத்தில் நட்சத்திரங்களை தேடுகிறாய்
கானல் நீரில் நீந்திடத் துடிக்கிறாய்
கைகளை அசைத்துவிட்டு கடந்து
செல்கிறேன் நான்..
கற்பனைக்குதிரைகளுக்கு கடிவாளங்கள் போட்ட படி..

ரதிமோகன்