‚நேற்று இன்று‘, ‚இரவும் பகலும் வரும்‘, ‚போக்கிரி மன்னன்‘ ஆகிய படங்களை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் தற்போது ஈழத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‚ஒற்றைப் பனைமரம்‘ என்ற படத்தை தயாரித்துள்ளார்.படத்தின் கரு
போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் இப்படத்தில், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும், மக்களும் முகம் கொடுத்து சொல்லத் துணியாத கருவை தெள்ளத்தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.
யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் நம்மை அழைத்துச் சென்று, ஈழத்தின் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழவைத்து வதைத்துவிடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
தமிழ் பாரம்பரிய இசைக்கருவிகள் படத்தின் உயிரோட்டம்
இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளை குவித்துள்ளது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். அவரது இசை தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து உருவாகியிருப்பது இப்படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைத்திருக்கிறது.
சிறந்த இயக்குநர் விருது பெற்ற மண் பட இயக்குநர் புதியவன் ராசையா இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளர், சர்வதேச விருதுபெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவாளர்.
ரசிகர்களுக்கு புது அனுபவம் அளிக்கும் ‚ஒற்றைப் பனைமரம்‘
இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது, ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கு புரியும் என்றார்.