ஷாம்சனின் Eagle Click Production இன் தயாரிப்பில் கடந்த 2016 ம் ஆண்டின் ஆரம்பத்தில் மதி சுதா இயக்கியிருந்த பந்து குறும்படத்தை சனிக்கிழமை (19.01.2019) காலை 9 மணிக்கு இணையத்துக்கு தரவேற்ற இருக்கிறோம்.
யாழ் நிலவன் ஷாம்சனின் சிறுவயது அனுபவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையுடன் அவரது தம்பியாரான தர்சா வந்து என்னிடம் கேட்டது இதைத் தான். ”அண்ணா தனது சின்ன வயது வாழக்கையை மீள அப்படியே படமாகப் பார்க்க விரும்புகிறான். செய்வமா?”
வித்தியாசமான பரீட்சார்த்தம் தான். மதுரன் , சன்சிகனிடம் கேட்ட போது அங்கும் சம்மதம். தர்சா தான் ஆரம்ப லொக்கேசன்களை தேடி அலைந்தது பின்னர் நானும் இணைந்து கொள்ள நீர்வேலிக்குள் ஒரு இடம் கிடைத்தது. அந்த இளமை வாழ்க்கையை தனுசனும் சங்கரும் அப்படியே கண் முன் தத்ரூபமாக நடித்துக் கொண்டு வந்து தந்தார்கள்.
இக்குறும்படம் லண்டனில் இடம்பெறும் விம்பம் விருது விழாவில் சிறந்த குறும்படமாகவும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றுக் கொண்டதுடன் பிரான்சின் நாவலர் விருது விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திர விருதுடன் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தெரிவிலும் ஷாம்சனை தெரிந்திருந்தது.
46,500 ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இக்குறும்படமானது விம்பம் விருது விழாவில் 100,000 ரூபாய் பணப்பரிசை பெற்றிருந்தது.
அதே போல் பிரான்சின் நாவலர் விருது விழாவில் குழந்தை நட்சத்திரத்துக்காக 16,000/- ஐயும் வென்றிருந்தது. தயாரிப்பாளரான ஷாம்சன் பெரிய மனதுடன் அப்பணத்தை எனது திரைச் செயற்பாடுகளுக்கு என்று அப்படியே தந்து விட்டார்.
படத்தில் எப்படி அவர் பாத்திரம் செயற்படுகிறதோ அப்படியே நிஜத்திலும் இருக்கிறார் என்பதை அதில் தான் உணர்ந்தேன்.
இதற்கு ஒலியமைப்புடன் இசையமைத்த பத்மயனுக்கும். எமது கள உதவியில் நின்ற விஷ்ணுவுக்கும் எனது உளப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.