முன்னுதாரணச் செயற்பாடுகளுடன் ஈழத்தின் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ‚முல்லை நிலமும் நந்திக் கடலும்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா
வரலாற்றுப் பெருமைமிக்க ஈழத்தின் வல்வெட்டித்துறை பொலிகண்டியில் 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை நல்லதோர் வெளியீட்டு விழா. கவிஞர் ஆ.முல்லைதிவ்யன் எழுதிய ‚முல்லை நிலமும் நந்திக்கடலும்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது இன்று மாலை 03.30 மணிக்கு பொலிகண்டி கடற்கரை முன்பள்ளி வளாகத்தில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். முத்து ஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராசா நிகழ்வுக்கு தலைமை வகித்தார். ‚ரியூப் தமிழ்‘ நிறுவனம் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியது.
முன்னதாக விருந்தினர்கள் மலர்மாலை இடப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது. ஆசியுரைகளை பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை அருட்பணி கஸ்பார் அடிகளார், மணி குருக்கள் ஆகியோர் வழங்கினர். வரவேற்புரையினை பிரதேச சபை உறுப்பினர் கு.தினேஸ் அவர்கள் வழங்கினார்.
நிகழ்வில் ஆ.முல்லைத்திவ்யன் பற்றிய எழுத்துப் பகிர்வுகளை பன்முகப் படைப்பாளி சமரபாகு சீனா உதயகுமார், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன், சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்த திரைப்பட இயக்குநர் குணபதி கந்தையா,பொலிகை கலை, இலக்கிய மன்றத் தலைவர் சி.மணிமாறன் ஆகியோர் நிகழ்த்தினர்.
‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ நடாத்தும் வெளியீடுகளில் புதிய ஆரம்பமாக ‚இளைய படைப்பாளர் உரை‘ தன்னை ‚நதியோர நாணல்கள்‘ அமைப்பு தலைவர் இளைய படைப்பாளர் நாவலூர் குட்டி ஜசி நிகழ்த்தினார்.
வெளியீட்டு உரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். நூலினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை அறிவிருட்ஷம் துரித கல்வி மேம்பாட்டு நிறுவன இயக்குநர் ஐ.எம்.சுரைஸ், ஆசிரியர் முல்லை றிசானா ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து யாவர்க்கும் நூல்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் முக்கிய அம்சமாக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் திட்டமாக ‚படைப்பாளிகளுக்கு பத்தாயிரம்‘ செயலாக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் திட்டமாக சுவிட்சர்லாந்து படைப்பாளி ‚பூவரசம் தொட்டில்‘ ஆசிரியர் சி.வசீகரன் சார்பில் அவரது தங்கை ராதிகா சுமரதன் பத்தாயிரம் உரூபாய்கள் பெறுமதிக்கு நூல்களைப் பெற்று ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ சார்பில் படைப்பாளிக்கு ஊக்கமளித்தார்.
நிகழ்வில் வவுனியா ‚தமிழ் விருட்சம்‘ தொண்டமைப்பு சார்பாக அவ்வமைப்பின் தலைவர் கண்ணன், அறிவிருட்ஷம் துரித கல்வி மேம்பாட்டு இயக்குநர் ஆகியோர் நூலாசிரியருக்கான கெளரவிப்பினை வழங்கினர். படைப்பாளிகளிடமிருந்து 50 நூல்களை கொள்வனவு செய்யும் தமது திட்டத்திற்கமைய, விஜய் அச்சக உரிமையாளர் எஸ்.விஜய் அவர்கள் 50 நூல்களை வெளியீட்டு வேளையிலே பணத்திற்கு கொள்வனவு செய்து படைப்பாளருக்கு ஊக்குவிப்பு அளித்தார்.
பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து நூல் பற்றிய தன்னோக்கினை பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ஜெ.பானுசந்தர் நிகழ்த்தினார். நூலின் ஆசியுரையினை ‚ஒளி அரசி‘ சஞ்சிகை ஆசிரியர் பா.ஜெயிலா நிகழ்த்தினார்.
நிகழ்வில் யாழ் மண்ணின் மூத்த கலைஞர் ம.அனந்தராசன் அவர்களின் பக்திப்பாடல்கள் இறுவட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
நூலின் ஏற்புரையினை நூலாசிரியர் ஆ.முல்லைதிவ்யன் ஆற்றினார். இந்நூலானது கவிஞர் ஆ.முல்லைதிவ்யன் அவர்களின் ஏழாவது நூலாகும். மூத்த, இளைய படைப்பாளர்கள் தொட்டு சமூகத்தின் சகல மட்டத்தினரும் நிறைவாக கலந்துகொண்ட நிகழ்வாக ‚முல்லை நிலமும் நந்திக் கடலும்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா அமைந்தது.