எழுத்துக்கள் உள்ளங்களை யுழுவதனால்
இப்புவி பரிபூரணம் பெறுகின்றது !
விழுதுகளா யிறங்கிவரும் படைப்புகளினாலும்
விதைகளாய் விழுகின்ற எழுத்துக்களினாலும்
பழுதிலாச் சமூகமொன்று பரிணமிக்கின்றது.
உண்மையைப் புதைகுழியில் புதைக்காமலும்
பொய்ம்மைக்கு தங்கமுலாம் பூசாமலும்
சத்தியத்தை மையாகவே நிரப்பிவிட்டால்
சாகா வரம்பெறும் எழுத்துக்கள்!
தூக்கத்தில் முடங்கியவர்களைத் தட்டியெழுப்பி
துயரங்களைக் களைந்தெறிந்து
ஏக்கமில்லா வாழ்வுக்கென்றும்
உறுதுணையாகவே வருபவர்கள் எழுத்தாளர்கள்.
படைப்பாளியின் பேனா குனியும்போது
மானுட நீதி நிமிருமல்லவா?
மானுட நீதி நிமிரும்போது
மண்ணது மகத்துவத்தில் திழைக்குமல்லவா?
பொன்னுக்கும் பொருளுக்கும்
இந்தப் பேனாக்கள் புன்னகை யுதிர்ப்பதில்லை !
போலிகளைப் புகழ்ந்துரைத்துப்-
பூமாலைகளைப் பெறுவதுமில்லை.
இந்த எழுதுகோல்களினால்
மகுடங்களைப் பெறுபவருமுண்டு
சிம்மாசனங்களை யிழப்பவருமுண்டு.
தீப்பொறிகளாய் சிதறியே விழுந்து
தென்றலாய் வருடியே சென்று
காலத்தின் கண்ணாடியாகவே
கவின்மிகு எழுத்துக்கள் சுடர்விடும்.
உளியின் உரசலினால்
ஒளிருமொரு சிலை போலவே
ஒளி சிந்தும் எழுத்துக்களினால்
உலகமதில் இருள் விலகும்.
நியாயத் தராசு தாழாமலிருக்கவும்
நீதியின் குரல்கள் அடங்காமலிருக்கவும்
உருவிய வாளாகவே-
எழுத்தாளனின் கையிலுள்ள பேனா!
காசினியின் காயங்களுக்கு கட்டுப்போடும்
கவின்மிகு எழுத்தாளர்களை – அவர்கள்
வாழுகின்ற காலத்திலேயே வாழ்த்துவோம்
நீளுகின்ற காலங்கள் நிலைப்பதில்லையே!
வாழ்வின் நிமிடங்களை –
எழுத்துக்களினால் நிரப்பியவர்கள்
அந்தி சாயும் பொழுதொன்றில்-
அஸ்தமனத்தை யடைந்தாலும்
உதயத்தில் முகங்காட்டி எழுத்துக்களில் கண்விழிப்பர்.
இரா . சம்பந்தன் – ஜேர்மனி