கார்மேகங்கள்! இரா . சம்பந்தன் !



ஆழியிலே முகந்த
அமுதத் துளிகளை
அள்ளியே வழங்குவதனால்
ஆகாய மேகங்கள்
வள்ளல்களாய் . . . .

தண்ணீர் மேகங்கள்
தரையைத் தொடாவிடில்
கண்ணீரிலே மிதக்கும்
கவின்மிகு காசினி !

சூல்கொண்ட மேகங்கள்
சிந்திடுந் துளிகளால்
சூல்கொள்ளும் பூமியும்
சுகங்காணு மன்றோ !

உப்புநீரை யுறிஞ்சி
நன்னீரை வழங்குவது ;
தகவுடைச் சான்றோரின்
தன்னலந் துறந்த செயலாய் .

கார்மேகமே காசினியை
ஈரமாக்கிச் செல்கின்றது ;
கருப்பு மனிதருளும்
கருணை வழிந்திடலாம் .

கருப்பு மேகங்களே
விருப்புடன் தருகின்றன
வெண்முத்துக் களையென்றும் !

அந்த மேகங்கள்
வாரியிலே கொள்ளையிட்டு
வாரியே வழங்குவதனால்
கொள்ளையராய்த் தோன்றவில்லை !

மேகங்கள் போலவே
மேதினியில் உலவிடு வோரால்
தாகங்கள் தணிந்து
தலைநிமிரும் தாரணி .

மேகத் துளிகளால்
பசுந்தரைப் புற்கள்
பசுமையாய்ச் சிலிர்ப்பது ;
கலவியில் களித்த மங்கை
களிப்பினில் மிதப்பதுபோல் .

கார்மேகம் பொழிந்தால்
காசினி சிலிர்க்கும் !
நீர்மேகம் பொழியா
நிலமென முதிர்கன்னி !

மயிற்குலம் மகிழ்ந்தாடும்
மழைமேகங் கவிகையிலே !
மனங்களும் மகிழ்ந்தாடும்
மழைக்காலப் பொழுதுகளில் . . . .

ஏழை விவசாயி
வானம் பார்த்திருக்க
கவிந்த மேகங்கள்
வேறெங்கோ பொழிவது ;
ஏதிலிகளின் நிதியை
எவரெவரோ பெறுவதுபோல் . . . .

இந்த மேகங்கள்
இடையறாது பொழிந்து
தரையின் பரப்புகளைத்
தண்ணீரில் மிதக்க விடுவதுண்டு . . . .

நீர்மேகங் காணா
நிலப்பரப்பில் மக்கள்
தண்ணீர் தண்ணீரென்று
தவிப்பது கண்ணுற்றால்
கண்ணீர்த் துளிகள் . . . .

இரா . சம்பந்தன் – ஜேர்மனி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert