ஈழத்தின் மல்லாவி மண்ணில் நடந்தேறிய விஜயலட்சுமி ஜெகதீஸ்வரன் ஆக்கிய வன்னியின் பழமை வாழ்வியலும் அதிசய விநாயகர் ஆலய வரலாறும்‘ நூலின் வெளியீட்டு விழா.
‚பழையன கழிதலும் புதியன புகுதலும்‘ தேவையெனினும் பழையனவெலாம் மறப்பிற்குரியதல்லவே. கவிஞர் மார்க் ஜனாத்தகன் அவர்களின் தாயாரும், ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வாழ் சமூகச் செயற்பாட்டாளருமாகிய விஜயலட்சுமி ஜெகதீஸ்வரன்(வியஜயலட்சுமி கண்ணன்) ஆக்கிய ‚வன்னியின் பழமை வாழ்வியலும் அதிசய விநாயகர் ஆலய வரலாறும்‘ நூலின் வெளியீட்டு விழாவானது, 28.09.2022 புதன்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு, ஈழத்தின் மல்லாவி மண்ணில் அமைந்துள்ள தொழினுட்ப கலை கலாசார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைய மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு தமிழ்த்தாய் மன்றச் செயலாளர் செ.மயில்வாசன் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன் பங்கேற்றார்.
தொடக்க நிகழ்வாக பங்கேற்பாளர்கள் வரவேற்பு இடம்பெற்றது. சுடர் ஏற்றலைத் தொடர்ந்து ஓய்வுநிலை கிராம உத்தியோகத்தர் சிற்றம்பலம் சண்முகநாதன் திருமுறை ஓதினார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டது.
ஆசியுரையினை அதிசய விநாயகர் ஆலய குருக்கள் சுமுகலிங்கம் அவர்கள் வழங்கினார். வரவேற்பு நடனத்தினை கலாலய நர்த்தனாலய மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை மகளிர் சங்கத் தலைவி பி.விஜயலலிதா வழங்கினார். ச.நிதர்சனா மழலைக்கவி மொழிந்தார்.
தலைமையுரை இடம்பெற்றதனைத் தொடர்ந்து கவிஞர் வே.முல்லைத்தீபன் அறிமுகவுரை நிகழ்த்தினார். நூலின் வெளியீட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.
நூலினை நிகழ்வின் பிரதம அதியான துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன் வெளியிட்டுவைக்க, முதற்பிரதியினை மல்லாவி பிள்ளையார் வண்ணச்சோலை உரிமையாளர் தி.சோதிலிங்கம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூற்பிரதி பெற்றுக்கொண்டனர்..
நூலின் நயப்புரையினை ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் ‚கம்பீரக்குரலோன்‘ சி.நாகேந்திரராசா நிகழ்த்தினார்.
நிகழ்வில், மல்லாவி மண்ணின் மூத்த கலைஞர்களுள் ஒருவரான புனேஸ்வரி அம்மா மதிப்பளிக்கப்பட்டார். நூலாசிரியருக்கான மதிப்பளிப்பு மகளிர் சங்கத்தினரால் அளிக்கப்பட்டது. ஏற்புரையுடனான நன்றியுரையினை நூலாசிரியர் விஜயலட்சுமி ஜெகதீஸ்வரன் வழங்கினார்.
வன்னி மண்ணின் குறிப்பாக மல்லாவியுடன் இணைந்த பழமை கிராமங்களின் பழைமையை, வாழ்வியல் முறைமைகளை நினைவுபடுத்தும் பக்கங்களையும், பிரதேச வழிபாட்டு அம்சங்களை காண்பிக்கும் புகைப்படங்களையும் இந்நூல் நன்றே பதிவு செய்திருக்கிறது.