எதிர்ப்படும் முகங்களில் ஒரு புன்னகைப் பூ
இதழ் விரிக்காதா என்று
ஏங்கித் தவிக்கிறது இதயம்
என்னாயிற்று இந்த மனிதர்களுக்கு?
சிரிப்பது என்பது மனிதர்களுக்குமட்டுமே
என்பதுகூட மறந்துபோயிற்று.
விலங்குகள்கூட அவ்வப்போது
சிரிப்பதுபோல் முகம்காட்டும்போது
இந்த மனிதன் மட்டும்?
இருண்டுகிடக்கும் முகங்களோடு
எல்லோரும் வெளிச்சத்துக்கு வருகிறார்கள்.
எல்லோரும் தத்தம் கடமைகளைக்
கவனிக்கப் போய்க்கொண்டிருக்கிறார்களாம்.
தன்னிடமிருந்த புன்னகைப் பூவைத் தவறவிட்டவன்
மற்றவர் மனங்களில் மகிழ்ச்சியைப்பரப்ப
ஆயத்தமாகிறானாம்.
நம்ப முடிகிறதா?
பொய்யாகவேனும் ஒரு புன்னகைப் பூவை
உன் முகத்தில் எடுத்து வா!
சகமனிதனும் தன் புன்னகைப் பூவை
உனக்குப் பரிசளிப்பான்
அழுவது ஒன்றே வாழ்க்கை என்று ஆகிவிட்டபிறகு
புன்னகைப்பூவை எங்கிருந்து பெறுவேன் என்று
சிடுசிடுக்காதே
கண்ணீரின் ஈரம் வற்றும்போது புன்னகைப்பூ
பூக்கும் என்பதில் உறுதிகொள்.
கண்ணீர் வடிப்பதுமட்டுமே நாளாந்தக்
காரியம் என்று நீ கற்றுக்கொண்டிருப்பதை
மறந்துவிடு
புன்னகைப் பூவோடு வா!
வரண்ட முகங்களைப் பார்த்துப் பார்த்து
வயிறெரிகிறது எனக்கு.
எங்கேயாவது நானும் என் புன்னகைப் பூவைத்
தொலைத்துவிடப் போகிறேனோ என்று
அச்சம் வருகிறது.
என் புன்னகைப் பூவை
பரிசளிக்க ஆட்களின்றிப் பரிதவிக்கிறேன்.
சிரித்தமுகம் எதுவுமே தென்படாதா?
3Kandiah Srithas and 2 others1 CommentLikeComment