ஊடல்-இந்துமகேஷ்“

இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு அறிவெண்ட சாமானே கிடையாது!“முடிந்துபோன அறுபதுவருட வாழ்வில் ஆறுமுகத்தாருக்குக் கடைசியாகக் கிடைத்த சான்றிதழ் அது.வழங்கியவள் அவரது ஆசைமனைவி வள்ளியம்மை.வழக்கம்போல் சின்னதாய் ஒரு கொதிப்பு வந்து வெய்யிலில் கரைந்த பனியாய் மனதுள் கரைந்துபோயிற்று.“ஆரு எப்பிடிப்போனால் உங்களுக்கென்ன. இங்கை என்ன சொந்தமா பந்தமா? எல்லாரும் வந்தார் வரத்தார். இதுக்குள்ளை அண்ணன் தம்பி மாமன் மச்சான் எண்டு சொந்தம் கொண்டாடிப் பழகினாப்போல அது சொந்தமாகிடுமா? எல்லாரும் அவரவர் குணத்தை ஒருநாளைக்குக் காட்டுவினம். அப்ப இருந்து கொண்டு தலையைப் பிய்ச்சுக் கொள்ளுங்கோ… பிய்க்கிறதுக்குத்தான் தலையிலை ஒண்டும் கிடையாது. மண்டைக்குள்ளை மூளையெண்டாவது கொஞ்சம் இருக்கவேணாமே!“-அடுப்படியிலிருந்து அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது.வீட்டின் வரவேற்பறையில் தொலைக்காட்சிக்குள்ளிருந்து துள்ளிக் கொண்டிருந்த ஜோதிகாவின் வாயசைவுக்குக் குரலை உயர்த்திக் கொண்டிருந்த பாட்டுக்காரியின் தொண்டையை விட இவளது தொண்டை மிக உச்சத்திலிருந்தது.ஆறுமுகத்தார் வேகமாக எழுந்து அடுப்படிக்கு ஓடி மனைவியின் தலைமுடியைப் பிடித்து ஒரு உலுப்பு உலுப்பி, „பொத்தடி வாயை!“ என்று அவளை அடக்குவாரா? அதெல்லாம் கிடையாது.“பாவம் அவள்!“ என்று தனக்குள் முனங்கினார்.“நான் விசரிமாதிரி இங்கை கத்திக்கொண்டிருக்கிறன். இந்த மனிசன்ரை காதிலை விழுகுதா? ரிவியிலை ஆர்….ஆரது.. சோதிகாவா?… கே.ஆர்.விசயா, செயலலிதா எல்லாம் போய் இப்ப சோதிகாவா? பாருங்கோ இப்பிடியே அவளவையைப் பார்த்துக்கொண்டு பல்லிளிச்சுக்கொண்டு இருங்கோ!“மறுபடியும் ஆறுமுகத்தாருக்கு கொதிப்பு வந்தது.தொலைக்காட்சியை அணைத்து ஜோதிகாவைத் துரத்தினார்.அறைக்குள் சிலவினாடிகள் அமைதி.அவரது மனைவியின் குரலும் ஓய்வெடுத்துக் கொண்டது. இப்போது முழுதான ஒரு அமைதி. இந்த அமைதி ஆறுமுகத்தாருக்குப் பிடிக்கவில்லை.விருட்டென எழுந்துபோய் சமையலறை வாசலில் நின்றார்.“ரிவி பாடினா நீயும் பாடு. அதை நிப்பாட்டினா நீயும் நிப்பாட்டு. ஒருநேரம் இந்த வீட்டிலை ஆறுதலா இருக்கேலாது… ஊரிலை எண்டாலும் வயசுபோன நேரத்திலை வெளிக்கிட்டு கோயில்குளம் எண்டாவது நாலிடத்துக்குப் போயிற்று வரலாம். இங்கை இப்பிடியே உன்ரை பாட்டைக் கேட்டுக்கொண்டு உன்ரை முகத்தை பார்த்துக்கொண்டு…நான் என்னதான் செய்யிறது.!“எண்ணெய்ச் சட்டிக்குள் அப்பளத்தைப் போட்டுக்கொண்டே திரும்பி இவரைப் பார்த்துப் பொரிந்தாள் வள்ளியம்மை:“அதுக்கு ஊர்ச்சோலியளிலை ஏன் தலைப்போடுவான்..? அவரவர் தாங்களும் தங்கடைபாடும் எண்டு இருக்கிறமாதிரி நீங்களும் இருக்கலாம்தானை?““இருந்திருக்கலாம் ஆனா இப்ப இல்லை. உன்னைக் கலியாணம் முடிக்கமுந்தி அப்ப இருந்திருக்கலாம்.“அவர் சொல்லிவிட்டு வேகமாகத் திரும்பிவந்தார்.மீண்டும் சோபாவில் வந்து சாய்ந்துகொண்டார்.மனம் அறுபதிலிருந்து முப்பதுக்குத் தாவிற்று.எட்டுவருடங்கள் வள்ளியம்மைக்காகக் காத்திருந்த காலங்கள் மனத்திரையில் படமாயிற்று. எத்தனை பாடுபட்டு அவளைக் கைப்பிடித்தாக வேண்டியிருந்தது. அவளும்தான் எத்தனை சித்திரவதைகளுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்புதல் வாங்கி இவரைக் கைப்பிடித்தாள்.“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்“-சிவாஜியும் சரோஜாதேவியும் திரையில் மிதந்துகொண்டிருந்தார்கள்.ஆறுமுகத்தார் பேசவேண்டியதையெல்லாம் மனைவி பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசவேண்டியதையெல்லாம் இவர் பேசிக்கொண்டிருந்தார்.“என்னப்பா.. சமைச்சிட்டன் வந்து சாப்பிடுங்கோவன்…!“- மனைவியின் குரல் சமையலறையிலிருந்து வாஞ்சையோடு வருகிறது. அவருக்குத் தெரியும். இப்போது அவள் மனதில் இருப்பவர் இந்த ஆறுமுகத்தார் இல்லை என்பது. முப்பதுவருடங்களுக்கு முன்பு சுருட்டைமுடித் தலையுடன் இளமை ததும்பும் முகத்துடன் சைக்கிளில் பவனிவந்து அவள்வீட்டுப் படலையில் தவமிருக்கும் அந்த ஆறுமுகத்தானைத்தான் அவள் இப்போது சாப்பிடக் கூப்பிடுகிறாள் என்று.தொலைபேசி கிணுகிணுத்தது. எடுத்தார்.அடுத்த முனையிலிருந்து பரபரப்பாக ஒரு குரல் வந்தது.“அண்ணை…நான் ரேணுகா கதைக்கிறன்…ஒருக்கா என்ரை வீட்டை வந்திட்டுப் போறீங்களே!““ஏன்… என்ன விசேஷம்?““நேரை வாருங்கோ.. சொல்லுறன்!““சரி வாறன்…!“தொலைபேசியை வைத்தார்.“ஆரப்பா அது…?“-கேட்டபடி வள்ளியம்மை.“அது ரேணுகா..!““என்னவாம்?““தன்ரை வீட்டை ஒருக்கால் வரட்டாம்.!““அவளுக்கு வேறை வேலை இல்லை.. கட்டினவனோடை ஒழுங்கா இருந்து குடும்பம் நடத்தத் தெரியாது… நெடுகிலும் அவனைத் திட்டிக்கொண்டே யிருந்தா அவன் தான் என்ன செய்வான்.. தண்ணியடிச்சிட்டு அவளை அடிச்சிருப்பான்… விலக்குப்பிடிக்க இப்ப உங்களைக் கூப்பிடுகிறாளாக்கும்.. நீங்கள் சொன்னாத்தான் அவன் கேட்பான் எண்டு கூப்பிடுகிறாள் போல… சரி…சரி சாப்பிட்டிட்டுப் போய்ப் பார்த்திட்டு வாங்கோ!“இவள் எந்த வள்ளியம்மை என்பதுபோல மனைவியை உற்றுப் பார்த்தார் ஆறுமுகத்தார். அவளது கண்களில் சின்னதாகத் தெரிந்த ஒரு வெட்கம் அவளைக் காட்டிக்கொடுத்தது.