எழுது கலம்
தலை குனிந்தது
வெண் தாழ்
தவம் கலைத்தது.
இடம் பொருள்
ஏவல் மறந்து
நாணம் மறந்த
தழுவல் ஆரம்பம்.
ஞாபக
அறுவடைகள்
பார்வைக்கு
விரிந்தது.
விழிகள்
வியர்ந்தது
மொழிகள்
பரவசம்.
சின்னச் சின்ன
சந்தோஷங்கள்
சிந்தைக்குள்
சிறகு விரித்தது.
பிறந்த
குழந்தை
மோகனம் பாட
உதடுகள் சுரங்களை
மீட்டன.
வல்லினமும்
மெல்லினமும்
கரம் பிடிக்க
எதுகையும்
மோனையையும்
ஆராத்தி எடுத்தன.
வார்த்தை
என்பது ஏணியை
போன்றது.
ஏற்றமும் இறக்கமும்
பயன் படுத்தலை
பொறுத்தது.
பாத்திரங்களை
பொறுத்தே
தண்ணீரின் வடிவம்
மாறுவது போல்
வார்த்தைகளை
பொறுத்தே மன
மாற்றங்களும்..
கண்ணீருக்கும்
புன்னகைக்கும்
இடையே ஆடும்
மணிக்கூட்டின்
பென்டூலம் தான்
மனிதன் வாழ்க்கை.
எழுது கலம் நிமிர்ந்தது
கவிதையொன்று
ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி