இன்பம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அதற்கான தேடுதலிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மனித மனம் துன்பத்தை வெறுக்கிறது. இன்பம் நோக்கிய பாதையில் எதிர்ப்படும் துன்பத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் நேரும்போது, இப்படி நேருமென்று முதலிலேயே தெரிந்திருந்தால் இந்த வழியை நான் தேர்ந்தெடுக்காமல் இருந்திருப்பேனே! என்று அங்கலாய்த்துக் கொள்கிறது.வாழ்வில் தொடரும் அனுபவங்கள் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்தது என்ற உண்மையைப் புரியவைக்கும்போது அந்த அனுபவங்களால் முதிர்ச்சியுறும் மனது இன்பதுன்பங்களைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைகிறது.கடமையைச் செய் பலனை எதிர்பாராதே! என்கின்ற கீதோபதேசம் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் வினையாற்றிக் கொண்டிருக்கச் சொல்வதன் உண்மையையும் அது விளங்கிக் கொள்கிறது. ஒவ்வொரு உயிரினமும் இயற்கையின் நியதிக்குக் கட்டுப்பட்டு தத்தமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. இயற்கையை மீறி அவை காரியமாற்றுவதில்லை. ஆனால் பகுத்தறிவு பெற்ற மனித இனம் மட்டும் இயற்கையின் சவால்களுக்கு எதிர்த்துநின்று போராடக் கற்றுக் கொண்டிருக்கிறது.ஒரு செயலால் விளையும் இன்பத்தின் மறுமுனையில் ஒரு துன்பம் காத்திருக்கிறது என்பது மனித இனத்தால் உணரப்பட்டிருக்கிறது. அதுபோலவே ஒரு துன்பத்தின் மறுமுனையில் இன்பம் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கிறது.எவ்வளவுதான் அனுபவங்களின்மூலம் அறிவை வளர்த்துக் கொண்டாலும் தொடரும் வாழ்வில் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களை அவனால் முற்கூட்டியே தீர்மானிக்க முடிவதில்லை.ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டொன்றாகும் என்று முற்காலப் புலவரும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று தற்காலக் கவிஞனும் சொல்லிவைத்த தத்துவங்கள் இந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான்.இந்த உலகத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்கிறது. வாழ்வதற்காகவே பிறந்திருக்கிறோம் என்பதும் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த வாழ்வின் முடிவு எது என்பது மட்டும் தெரியவில்லை.வாழ்வின் முடிவு எது என்ற கேள்வி ஒன்றே இந்த வாழ்வு ஒரு தொடர்கதை என்பதை உணர்த்தி நிற்கிறது.அருவமாய் உருவமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பு என்று வர்ணிக்கப்படும் இறைவனே கேள்விக்குரியவனாகி நிற்கும்போது சாதாரண மனித வாழ்வு கேள்விக்குரியதாகி நிற்பதில் வியப்பொன்றுமில்லை. எனினும் எபபோதும் கேள்வியிலேயே நின்றுவிடாமல் விடைதேடி அலையும் வேலையை மனிதன் செய்துகொண்டுதானிருக்கிறான்.உணர்வுகளின் வழியே உறவுகளை வளர்த்து உயிர்வாழ்தலில் இன்பம் தேடும் மனிதன் இந்த உணர்வுகளைச் சுமக்கும் உடல் உருவழிந்து போகும் தருணத்தில்தான் தான் வேறு இந்த உடல் வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள்கிறான். தன் உயிர்ப்பயணத்தில் இந்த உடல் தற்காலிகமாகத் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கருவி என்பதைத் தெரிந்துகொள்கிறான். இந்தநாள்வரை வாழ்ந்த தான் என்பது தான் இல்லை என்ற ஞானம் அவனுள் துளிர்க்கிறது.தனது மரணம் குறித்து அவ்வப்போது நினைவுகொள்பவனே ஏனைய உயிர்கள்மீதும் அதிக அக்கறைகாட்டுபவனாக இருப்பான். உறவாடிக் களித்தவர்களின் உயிரிழப்பு மட்டுமல்ல அவர்கள் உயிரோடு – இனிமேல் மீளவும் நாம் சந்திக்கவே முடியாது எனும் நிலையில் பிரிவது கூட- ஒருவகை மரணமே.ஒருசமயம் உறவாடி வாழ்ந்தவர்கள் வெவவேறு திசைகளில் பிரிந்தாலும் அவாகள் எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பது போலவே மரணத்துக்குப் பின்னும அந்த உயிர்கள் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெரும்பாலான மனிதர்களின் வாழ்வு தொடர்கிறது.மரணத்துக்குப் பின்னும் ஒரு வாழ்வு உண்டென்பதும் அது இறைவனோடு கலந்தது என்பதும் காலகாலமாக மனிதனிடத்து நிலைத்துவிட்ட நம்பிக்கை. நம்பியவர்கள் இறைவனோடும். நம்பாதவர்கள் ஆவி உலகிலும் கலந்து விடுகிறார்கள்.சுவாமி விவேகானந்தர் தமக்குரிய குருவைத் தேடிக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. எவரையாவது ஞானி என்றோ மகான் என்றோ கேள்விப்பட்டால் அவரிடம் சென்று வணங்கி, “சுவாமி! தாங்கள் கடவுளைக் கண்டீர்களா?” என்று வினவுவாராம்.அவர் கேட்கும் தோரணையில் பயந்து, “இல்லை இல்லை நான் காணவில்லை!” என்றுநழுவிவிடுவார்களாம் அவர்கள். இறுதியாக இராமகிருஸ்ணபரமகம்சரிடம் சென்று அவரிடமும் இதே கேள்வியைக் கேட்டாராம். அவரோ சற்றும் தயங்காமல், “ஆம்! கண்டேன்!” என்றாராம்.“நானும் கடவுளைக் காணவிரும்புகிறேன் காட்ட முடியுமா?” என்றாராம் விவேகானந்தர்.“நான் சொல்லுகிற முறைப்படி நடந்துகொண்டாயானால் காணலாம்!” என்றாராம் பரமகம்சர். அந்தக் கணத்திலேயே விவேகானந்தர் அவரையே குருவாகக் கொண்டாராம்.நம்பிக்கையைப் பொறுத்ததே வாழ்வு. வாழ்வின் நெறிமுறைகளை வகுத்துத் தந்த மூதாதையர்களைப் போற்றி வாழ்பவர்கள் பூதவுடல் நீத்தாலும் புகழுடம்பாய் நிலைக்கிறார்கள். ஆனால் இதற்கு மாறாக அவர்களை மூட நம்பிக்கையாளர்களாகச் சித்தரித்து தமது மனம் போனபோக்கின்படி வாழ நினைப்பவர்கள் தமது வாழ்வை முற்றாக இழந்துபொகிறார்கள். மரணத்துக்குப் பின்னால்மட்டுமல்ல மரணத்துக்கு முன்னாலும் அவர்கள் வாழ்வதில்லை.தாம் இழந்துவிட்ட வாழ்வை மீளவும் வாழத் துடிக்கிற அத்தகைய உயிர்கள் ஆவிகளாகவும் பேய்களாகவும் அலைகின்றன என்று சொல்கிறார்கள்.ஆவிகள் பேய்கள் இருக்கின்றனவா என்பது தொடர்ந்தும் ஆராய்ச்சிக்குரிய விடயமாகவே இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் வாழத் தெரியாமல் வாழ்ந்து முடிப்பவர்களுக்கு வாழ்வின் மீதான பற்றுதல் அதிகம் இருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உடலோடு ஒட்டி வாழும் உயிர் மரணத்தோடு மறைந்து போவதில்லை என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.அவர்களுக்கு ஆன்ம ஈடேற்றத்தைத் தருவதற்கான பிரார்த்தனைகளை உறவுகள் செய்தாகவேண்டும் என்ற விதியை உலகில் தோன்றிய எல்லா மதங்களும் கடைப்பிடிக்கத்தான் செய்கின்றன.பிரார்த்தனைகளாக ஆரம்பித்து இறுதியில் கேளிக்கைகளாக மாறிப் போன பல சடங்குகள் இன்னும் தொடர்கின்றன. கால ஓட்டத்தில் அவை வெவவேறு முறைகளைக் கடைப்பிடித்தாலும் அடிப்படையில் அவை உடலளவில் மறைந்துபோன உறவினர்களுக்காக முன்னெடுக்கப்படும் நினைவுப் பிரார்த்தனைகளே!நாம் மரணித்துப் போனபின்னாலும் நமக்காகப் பிரார்த்தனை செய்ய நமது உறவுகள் இருக்கின்றன என்கின்ற நம்பிக்கையை வளர்ப்பதுகூட தத்தம் வாழ்வை பிறர்க்காக அர்ப்பணிக்கும் நல்ல மனிதர்களை உருவாக்கத் துணைபுரியும். தமது அழகான முகங்களைத் தொலைத்துவிட்டு விகாரமான முகங்களை அணிந்துகொண்டு கொண்டாடிக் களிக்கும் ஹலோவின் (Halloween) மரணபயத்திலிருந்து மனிதர்களை விடுவிக்கும் உற்சாகக் கொண்டாட்டம் மட்டுமல்ல மறைந்த தமது மூதாதையர்களின் ஆன்ம விடுதலைக்காக அவர்கள் நடாத்தும் பிரார்த்தனையும்தான்.நிறைவேறாத ஆசைகளோடு மறைந்து போனவர்கள் மறுபடி இந்த உலகுக்கு வந்து வாழத்துடிக்கிறார்கள் என்றும் தமது உறவுகள் தமக்கிழைத்த தீமைகளுக்கு பழிவாங்கவும் அவர்கள் முனைகிறார்கள் என்றும் அதனாலேயே பலரும் நோய்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகிறார்கள் என்றும் அவர்களை விரட்டவே இந்தக் கொண்டாட்டம் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எவ்வாறிருப்பினும் பாவ – புண்ணியங்கள்பற்றிய சிந்தனை இந்த உலகத்தின் எல்லாப் பகுதி மக்களிடமும் இருக்கிறது என்பதையே இத்தகைய கொண்டாட்டங்கள் நிரூபித்து வருகின்றன.ஹலோவின் கொண்டாட்டத்தில் அதிகமாய் இடம்பெறும் பூசணிக்காய்த் தலைகளைப் பார்க்கும்போது, நம்நாட்டில் “கண்ணூறு கழிப்பதற்காக” வீட்டுவாசல்களில் கட்டித் தொங்கவிடப்படும் பூசணிக்காய்த் தலைகள் என் நினைவுக்கு வருகின்றன.தீய சக்திகளை விரட்டுவதில் பூசணிக்காய்க்கு அப்படி என்ன சிறப்பு?