– புஷ்பராணி ஜோர்ஜ்.
உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்-இதுவே தாரக மந்திரமாகிப் பதினைந்து ஆண்டுகளின் முன்னே தைத்திங்கள் 1991இல் (தை-மாசி) முதலாவது பூவரசு சிற்றிதழ் ஒன்று சிறு பதியம்போட்டு பந்தற்கால் இட்டு இரண்டு மாதங்களுக்கொன்றாகத் துளிர்த்த காலமது. நாமும் அதன் நிழலினிலே இளைப்பாற மருவியிருந்த நேரமது.அன்று மொட்டவிழ்ந்த இதழ் இன்று 2006இல் பதினாறாவது ஆண்டில் ஆடி – ஆவணியில் 100வது இதழாகி மணம்பரப்பி மகிழ்கின்றது.இந் நீள்கால விரிப்பினிலே அதனை முகர்ந்து பார்த்து அதனைப் பற்றிய விடயங்களை எண்ணிப்பார்க்கும் வேளையிது.
பூவரசுக்கும் எமக்குமிடையிலே உள்ள பிணைப்பு ஒன்றிலிருந்து இன்று தொண்ணூற்றொன்பதுவரை (1 – 99) நீண்டதொரு காலமாகும்.இவ்விடைக்காலத்திலே அதன் முக்கிய இதழ்களைக் கொய்து எடுத்து அதன் வளர்ச்சிப் படிகள் எப்படியானது என்பதைச் சொல்லவேண்டிய கடப்பாடும் எமக்குண்டு நாம் உயர வழிதந்த ஏணிப்படிகள் அவை.
பூவரசு 1991 தை-மாசி 1வது மலரில் பூவரசு என்ற தலைப்பில் ஆசிரியர் கருத்து அமைந்திருந்தது. அத்தோடு நாங்களும் நானும் என்ற கட்டுரையும் இடம்பெற்றிருந்தது.(இவ்விரண்டும் 2001 தை மாதம் வெளியான பூவரசு 10வது ஆண்டு மலரிலே புதிய வாசகர்களுக்காக மீளவும் பூவரசும் நானும் என்ற தலைப்பிலே பிரசுரமாகி இருந்தன)அடுத்த அதே பக்கத்தில் தொடுவானம் என்ற தலைப்பில் கவிதை ஒன்று வரையப்பட்டிருந்தது. இதன்படி பூவரசு வானத்தைத் தொடவேண்டும் என்பதற்காகவே என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆசிரியர் இந்துமகேஷ் உட்பட ஏழு எழுத்தாளர்களும், சிறுவர் பக்கம் அருண் அண்ணாவும் இணைந்திருந்த இவ்விதழ் 1வதாக அரும்பியது.
இளஞ்சந்ததிக்காகவே களம் அமைக்கப் புறப்பட்டது பூவரசு.பூவரசு (பங்குனி-சித்திரை 1991) 2வது இதழிலேயே இளந்தளிர்களுக்காகவும் துளிர்க்கத் தொடங்கியது
முதலாவது மலரில் என் அன்பு வாசக நண்ப..! என விளித்த ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட மனிதனைத் தேடுகிறேன் என்ற நெடுங்கதை முதலாவதாகத் தொடராகிப் பல மலர்களை அலங்கரித்திருந்தது.
கைகளிலே சின்ன மலராகத் தவழ்ந்த ஒரு மாதக் குழந்தை, மேலும் பலர் கைகளிலே தவழ்ந்து வளர்ந்த பொழுதுகளிலே என் வாசக நண்ப, என் வாசகர்களைத்தேடி, நாங்கள் நாலுபேர் சேர்ந்து, மனம்விட்டுக் கொஞ்சம், மனதோடு கொஞ்சம் பேசி, வாசகர் வட்டம் சேர்ந்து, பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுப் பாடி, வாசகர் அரங்கமைத்து எழுத மறந்த எழுத்துக்களால் பூவரசும் நானும் நட்புடன் கைகோர்த்து பலர் ஒன்றாகி பூவரசை வளர்த்தெடுப்பதில் தோள்கொடுத்தனர் என்பதையும் நாம நன்றியுடளன் நோக்கவேண்டியதும் அவசியமானது.
ஒவ்வொரு வருடமும் ஆண்டுவிழா மேடைகள்கண்டு பூவரசுமூலம் அன்பைப் பகிர்ந்து வந்தனர். மனிதத்தைத் தேடி மக்கள் நடக்க பூவரசில் அதன் தேன்கூட்டைக்கட்டி எழுப்பத் தேனீக்களாய் பிரதிபலன் கருதாது செயல்பட்டனர் இவர்கள்.
1991 தை-மாசி 40 பக்கங்களைக் கொண்டு கையெழுத்துப் பதிவாக உருவாகியது பூவரசின் முதலாவது இதழ்.அவ்வாண்டு கார்த்திகை மார்கழி 6வது இதழ் தமிழ் அச்சு எழுத்தாகியது.இது அதன் மலர்ச்சியாகும்.
1992 தை மாசி இதழ் 72 பக்கங்களைக் கொண்ட ஆண்டு மலராக பரிமாணம் பெற்றதுமல்லாது ஓவியர் சித்தன் அவர்களால் பூவரசுக்கென்றொரு சின்னமும் உருவாக்கம் ஆனது.
இந்த ஆண்டிலேயே நமது கலைஞர்கள் என்ற ஒரு பேட்டியை ஆரம்பித்திருந்தது. எம் நாட்டுக் கலைஞர்களை கௌரவப்படுத்தியிருந்தது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்விடயம் 2002ம் ஆண்டிலும் தொட்டுப் பார்க்கப்பட்டுள்ளது.
இதைவிட ஆண்டுதோறும் போட்டிகளை நடாத்தி பல திறமையான ஆக்கதாரர்கள், சிறுவர்களை வெளிக்கொண்டுவர பூவரசு அவர்களுக்கான வெற்றிக்களமாய் அமைந்திருந்தது வெள்ளிடை மலை.
93ம் ஆண்டு வைகாசி – ஆனி இங்கே உறங்கிக்கிடக்கும் தமிழ் ஏட்டுச் சுவடிகள் இதனையும் பூவரசே எமக்கு அறிமுகமாக்கியது. இதனை பிறிதொரு இதழிலும் மறு பிரசுரமாக்கியிருந்தது. (பூவரசு 50வது மலர் 98 பங்குனி சித்திரையில்)
எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, கவிதாயினிகளாக, கதாசிரியர்களாக, கட்டுரையாளர்களாக பலர் பூவரசுப் பயணத்தில் இணைந்திருந்ததனால் அது படிப்படியாக தனது பயணத்தை முன்னோக்கித் தொடர்ந்து சென்றது.
94இல் வெளியான ஆண்டுமலர் 100 பக்கங்களைத் தொட்டு நிறைத்திருந்தது.95இல் பூவரசு மாதம் ஒரு மலராகி சித்திரையில் பூத்த மலர் நகைச்சுவைச் சிறப்பிதழாகி எம்மை மகிழ்வில் திளைக்க வைத்தது.
மீண்டும் 96இல் இரண்டு மாதத்திற்கு ஒன்றாகி ஆடி – ஆவணி சிறுகதைச் சிறப்பிதழாக அலங்காரமாய் மலர்ந்திருந்தது.97இல் தை – மாசி 37வது மலர் பூவரசின் கலை இலக்கியப் பேரவையாய் முகையவிழ்த்து வண்ணமாய்ப் பிறப்பெடுத்திருந்தது.
98இல் ஆடி – ஆவணி இதழ் இப்பேரவையின் நூலகக் கண்காட்சியில் புலம்பெயர் நாடுகளில் வெளியான வேறும்பல இலக்கியச் சஞ்சிகைகளையும் காட்சிப்படுத்தி பெருமிதம் கொண்டது.
இதே ஆண்டு புரட்டாதி – ஐப்பசி மலர் இவர்கள் யார் எனக் கேள்வி எழுப்பி இதுவரை நடைபெற்ற பூவரசின் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களை வரிசையாய் வகைப்படுத்தி அடையாளங்காட்டி நின்றது.
24. 01. 98இல் பூவரசம்பூ ஒளிப்பேழையும் அறிமுகமானது.
ஆண்டுதோறும் விழாக்கள், வாசகர் ஒன்று கூடல் அரங்கம் அமைத்து போட்டியாளர்களைக் கௌரவிக்கவும் அது தவறியதில்லை.
ஆண்டு மலர்களாகவும் வருடா வருடம் 25, 50, 75வது விசேட மலர்களாகவும் தன்னை இனங்காட்டி விரிந்தது. 2000 ஆண்டு மலர்ந்த மலர்கள் ஆறும் சிறப்பிதழ்களாகி அவை நெடுங்கதைகளாகப் புன்முறுவல் பூத்தன.
1991-2001வரையான இதழ்களின் அட்டைப்படங்களை வரைந்த ஓவியர்களையும் 2001ம் ஆண்டு தை-மாசி 67வது மலரிலே அடையாளங் காட்டி அவர்களின் திறமைகளை எமக்கும் அறிமுகப்படுத்தியதையும் இங்கே எடுத்தியம்புகின்றோம்.
2002ம் ஆண்டிலே கார்த்திகை – மார்கழி இதழ் ஆன்மீக மலராகி எம் ஆன்மாக்களைத் தொட்டுப்பேசியது.
2003 தை – மாசி ஆண்டு மலரிலே ஐந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நெடுங்கதை ஒன்று (இனி அவர்கள்) இடம் பெற்றிருந்தது.
அன்று 1991இல் ஆகக் குறைந்த எழுத்தாளர்களுடன் 1வது இதழாக மலர்ந்த பூவரசு 16வதுஆண்டில் 2006 வைகாசி – ஆனிவரை 99 இதழ்களாய் மலர்ந்து மணம் கமழ்ந்தது. இன்று 100வது இதழை விரிக்கத் தயாராகும் வேளையிலே கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைத் தன்னகத்தே தாங்கி எண்ணிலடங்கா வாசகர்களையும் தன்னோடு இணைத்து உலகளாவிய ரீதியில்; தனக்கென்றொரு முத்திரையையும் பொறித்துக் கொண்டுள்ளது.
மழலைகள் நலனுக்காய், மனித நேயத்திற்காய் பலன் தந்த பூவரசு காலத்தால் மறக்கப்படாதது. அதன்சேவை எண்ணிலடங்காதது. இதுவரை பூத்த அதன் இதழ்கனைக் கோர்த்து மாலைசூடிப் பாராட்டிப் பணிகின்றோம்.
என்றும் நலமுடன் வாழ்க! வளர்க! வெல்க! தொடுவானமாய் உயர்க! ஆயுள் கெட்டியாக வாழ்த்துகின்றோம்!படைப்பவர் ஆக்கம் தருக! படிப்பவர் ஊக்கம் தருக!
( பூவரசு இனிய தமிழ் ஏட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் அவர்கள் பூவரசு 100வது இதழுக்கென வரைந்த கட்டுரை. பூவரசு 100வது இதழில் ஆடி ஆவணி 2006இல் பிரசுரமானது)