(அமெரிக்காவிற்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்ட ஆபிரிக்க மக்களின் வாழ்க்கையை கதையாக என் கற்பனை கலந்து எழுதும் தொடர் இந்தக் கதை. என் எழுத்திற்கு சிக்கெடுத்த கணேஷ் அண்ணாவிற்கும், என் மனைவிக்கும் நன்றி.
அமெரிக்க_அடிமைகள் (1)அமெரிக்க…..கொலம்பஸ் என்னும் கடலோடி வழிகாட்ட, அட்லாண்டிக் கடல் படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று நாடுகளின் காவலிகள் குடியேற,மண்ணுக்கு சொந்தமானவனை சின்னம்மை கிருமிகள் பூசிய போர்வைகளை போர்க்கவைத்து கொன்றுவிட்டும், மிஞ்சியவனை உதைத்து ஒரு ஓரத்துக்கு தள்ளிவிட்டும், வந்தேறு குடிகளான தங்களுக்கே இந்த மண் சொந்த மண் என பிடித்த நாடுதான் அமெரிக்கா.கொள்ளை அடித்து கொழுத்த பணத்தின் திமிரில் தங்கள் பண்ணை வேலைகளுக்கு அடிமைகளை தேடியதும் அதே காவாலிக் கூட்டங்கள் தான்.அந்த மிருகங்கள் வளர்த்த விலங்குகளின் பண்ணைக்கு அடிமையாக இழுத்து வரப்பட்டவனின் வரலாறு தான் இந்தக் கதை.18ம் நூற்றாண்டு வயதுக்கு வந்த காலம் அது….சூரியச் சூட்டில் கல்லுக் கசியும் கண்டம் ஆப்பிரிக்கா. அந்த கறுப்புக் கண்டத்தின் ஒரு மூலையில், மூன்று பக்கங்கள் தரையோடும் ஒருபக்கம் அலையோடும் ( இந்த கடலே இவர்களின் இன்றைய நிலைக்கு காரணமாகவும் அமைந்தது ) அமைந்த நாடு டங்கனிகா (பிரித்தானிய காலணித்துவ காலத்தில் அவர்களின் வசதிக்காக மாற்றப்பட்ட பெயர் தன்சானியா )டங்கனிகா நாட்டில் மலை முடியும் இடத்தில் அலை தொடங்கும், வறுமை வலை விரித்த கிராமம் ஷிமோகாஇங்குதான் வாழ்ந்தான் இந்த கதையின் நாயகன் மாமூடு.கருங்காலி மரம் தறித்து மண்ணுக்குள் புதைத்து வைத்து வைரமாய் வரம் பெற்றபின் இளைஞனாய் செதுக்கியதுபோல் தேகம் கொண்டவன் தான் அவன்.வானத்தில் இருந்து வழுக்கி தரையில் தஞ்சமடையும் எரிகல் போல டங்கனிகா நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்து இந்த கிராமத்தில் விழுந்தவன்தான் இவன் என்றே அந்த கிராமம் இவனை வரவு வைத்திருக்கிறது.தரையில் மரம் தறிப்பான், கடலில் வலை விரிப்பின், படகில் படுத்து உறங்குவான், அவனுக்கு குடில் இல்லை அவன் போகாத குடில்கள் அங்கு இல்லை.யாரும் வளர்க்காமலே வளர்ந்து நிற்கும் மலை போல, யாரும் அழைக்காமல் வந்து வருடும் அலை போல அவனுக்குள்ளும் வளர்ந்து வருடி நின்றது ஒரு காதல்.அவளின் பெயர் ஆஷரா.கறுத்த மேகம் எடுத்து இறுக குழைத்து ஓவியன் ஒருவன் குயவனாய் வரம் பெற்று தேகத்தில் காயப்படாமல் செய்துமுடித்த சிலை போல் அவள்.ஆஷராவின் குடும்பம் புதிய குடில் அமைத்த போது அவன் மரம் தறித்தான் இவள் வீழ்ந்து போனாள், இவன் வலை விரித்த கடற்கரையில் அவள் பாதம் நனைத்தாள் இவன் நனைந்து போனான்.வெப்பம், கற்று, ஈரம், இருந்தால் மட்டுமே முளைத்திறப்பேன் என்று அடம் பிடிக்க காதல் ஒன்றும் விதை இல்லை, காதல் மெல்லிய மொட்டு தென்றல் ஒன்று தொட்டு விட்டாலே திறந்துகொள்ளும்.மலரும் வரை காதல் மொட்டு, மலர்ந்த பின் காதல் விதை, விதை திறந்தால் வளரும், அடர்த்தியாகும் பூப்பூக்கும், காய்காய்காக்கும் கனியாகும், அடுத்த சந்ததியின் விதையும் இந்த காதல் மலரில் தான் இருக்கிறது. இங்கும் அதுவே நிகழ்ந்து கொண்டிருந்தது.மண்ணில் புதையும் மழையைப்போல், கடலில் கரையும் நதியைப்போல், நீராய் உருகும் முகிலைப்போல் மாமூடுவும், ஆஷராவும் பிறர் விழிகளுக்குள் விழாமல் தங்களுக்கும் புதைந்தும், கரைந்தும், உருகியும் போனார்கள்.ஆனால் ஷிமோகா கிராமத்தில் வாழும் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இணைவதில் சிந்திக்காமல் பார்த்தால் சிக்கெடுக்காத சில சிந்தனைகள் உண்டு, அதுவே ஆழமாய்ப் பார்த்தால் சீரான சிந்தனைகள் உண்டு. „காதல் என்பது தனியுடமை யாரும் செய்யலாம் ஆனால் திருமணம் என்பது பொதுவுடமை அதை சமூகம் சம்மதித்தாலே செய்யலாம் „சமூகத்தை சம்மதிக்க வைக்க சில நடைமுறை உண்டு.அதில் ஒன்று மணம்முடிக்க விரும்பும் இளைஞர்கள் சொந்தமாய் குடில் ஒன்று அமைத்துக் கொள்ளவேண்டும்.வாடகைக்கு தங்கும் வழக்கம் அங்கு இல்லை. அடுத்து நான்கு ஐந்து ஆறு என்னும் கணக்கில் மூன்று விடயங்களை இளைஞர்கள் சாதித்துக் காட்ட வேண்டும். நான்கு மணிநேரம் நிற்காமால் ஊரைச்சுற்றி ஓடவேண்டும், ஐந்து மணிநேரம் நிறுத்தாமல் கடலில் நீந்த வேண்டும், ஆறு மணிநேரத்தில் அந்த உயர்ந்த மலையின் உச்சியில் ஏறி தான் காதலியின் பெயரை எழுத வேண்டும்.ஏன் இந்த வலிதரும் வழக்கங்கள்? அதற்கும் மூன்று காரணங்களை முன்மொழிகிறார்கள் மூளையிலும், முதுமையிலும் மூத்தவர்கள்.ஒன்று „ஆண் தன்னை மணமுடிக்க தன் தேகத்தை இவ்வளவு தூரம் வருத்துகிறானே „என்று பெண் உணரும் போது அவளுக்குள் அவன் மீதான காதல் இன்னும் அதிகமாய் அடர்த்தியாகிறது, இரண்டு „தன்னை வருத்தி தான் பெற்றவள் இவள்“ என்பதை ஆண் உணரும் போது பெண்மீதான மதிப்பு மகுடம் சூட்டிக் கொள்கிறது, மூன்று „தங்களின் பெண்ணை மணந்து கொள்ள இத்தனை வலிகளை தங்கும் வலிமையானவன் இவன்“ என்னும் நம்பிக்கை பெற்றவர்களுக்கும் பிறக்கிறது என்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் தங்களின் சமூகத்துக்குள் மட்டும் தான். பெண்கள் உயிர்களை உற்பத்தி செய்யும் உயிருள்ள தெய்வங்கள் என்றே வணங்கும்இவர்கள் வெளிக் கிராமங்களில் இருந்து தெய்வங்களை (பெண்) எடுப்பதும் இல்லை, தெய்வங்களை (பெண்) கொடுப்பதும் இல்லை.இங்கே மாமூடு வெளிக் கிரமத்தில் இருந்து வந்த வேடந்தாங்கல் பறவை தங்கிப் போகலாம் இங்கேயே தேங்கிப் போக இந்த சமூகம் சம்மதிக்குமா?தொடரும்……
என்றும் உங்கள் அன்பில் ஜஸ்ரின் தம்பிராஜா 16/06/2020