வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான நெலோமி. “ இனியொரு காலம் இதுபோல் வருமா” என்ற ஒரு வரலாற்றுப் படைப்பை தமிழுலகிற்குத் தந்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள வேப்பங்குளம் , இலுப்பைக்குளம் ஆகிய கிராமங்களின் வரலாறு நெலோமியால் படைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் ஆரம்பகால வரலாற்றை ஆதாரங்களுடன் இந்த படைப்பில் எழுத்தாளர் விபரிக்கின்றார். அற்புதங்கள் பற்றி கொஞ்சம் கூடுதலாக சேர்த்துவிட்டாரோ என வாசிக்கும் போது சிறிதளவு சோர்வு ஏற்பட்டது. ஆனால் ஏனைய விடயங்கள் தரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. புலவர்களும் மருத்துவர்களும் வாழ்ந்த மண் மறைவாக கிடப்பது ஏன் என கவலை கொள்ளுமவர் அவற்றை பெரும்பாலும் வெளிப்படுத்தியுள்ளார். அருமைநாயகம் பேயோட்டுவதையும் ஒரு உளவியல் சிகிச்சை என்று தொட்டுச் செல்லும் படைப்பாளி காச்சல் புழுதி, ஈரப்புழுதி, பலகையடிப்பு போன்றவற்றுடன் – உப்பட்டி, மாவக்கை, கட்டைக்கந்து, வேலைக்காரன் கம்பு, கட்டுமாறு, முக்காலி, மற்றும் குல்லம் என கிராமத்தின் அழகை சித்தரிக்கிறார். பொலிக்கொடி, பொலி என சிலது விடுபட்டாலும் அழகு தான். கொம்பறையில் நெல்லைப் பாதுகாத்தல் குரக்கன் கொட்டு என்பன பற்றியும் படைப்பாளி குறிப்பிடுகிறார். இயற்கை உணவு இன்பமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்டுத்தயிரும் கச்சல்மீனும் என ஏராளம் உள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால் கச்சல்மீன் தீயல் பற்றிய வர்ணிப்பு நாவூற வைக்கிறது. சேனைப்பயிர்ச்செய்கை பற்றி விபரித்தவர் “ஒலுப்பிட்டு” தரமான நினைவுபடுத்தல். இது வன்னி மண்ணுக்கே தனித்துவமான உணவு இந்தக்காலத்தில் நாகரீகம் கருதி ஒலுப்பிட்டை நாடுவாரில்லை. பண்பாட்டு ரீதியாக திருமணம் “சோறு குடுப்பித்தல்” முறையாகவும் மகப்பேறு வீடுகளில் தான் அதற்கென மருத்துவச்சிகள் இருந்தனர் என வரலாற்றைப் பதிகிறார். மருதமடுகுளத்தில் தொடங்கி கல்லாற்றில் கலக்கும் நறுவிலியாற்றோரம் அமைந்துள்ளதே இந்த இரு கிராமங்களும் என அழகாக குறிப்பிடும் படைப்பாளி நறுவிலியாற்றோரம் உள்ள புதையல் பிட்டி தொடர்பாக கூறியுள்ளமை ஓர் முக்கிய வரலாற்றிடமாகும். வன்னியில் இவர் குறிப்பிட்ட இடம் போன்றவை பல உள்ளன. அவற்றை சரியான முறையில் ஆய்வு செய்தால் வன்னியை ஆட்சி செய்த தமிழ் மன்னர்களின் வரலாற்றை மீட்டுப்பதிவிட முடியும். கிராமங்களின் பல அறிஞர்களை பட்டியலிடும் நெலோமி வன்னியின் மூத்த படைப்பாளிகளான வன்னியூர்க்கவிராயர் மற்றும் நாவண்ணன் ஆகியோரின் சொந்தவூர் வரலாற்றை எழுதுவதையிட்டு நெஞ்சை நிமிர்த்துகிறார். அது எழுத்தில் தெரிகின்றது. 1984 இல் படையினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 52 பேரைப் பற்றியும் வேப்பங்குளம் இலுப்பைக்குளம் கிராம இளைஞர்கள் படையினரின் வாகனங்களில் ஏற்றப்பட்டு பின்னர் இறக்கிவிடப்பட்டது இறைவன் செயலே என ஆறுதலடைவதையும் இந்த வரலாற்றுப் படைப்பில் காணலாம். கிராமத்தின் எழிலையும் இயற்கையின் வனப்பையும் படையலுடும் நெலோமி இந்தக் கிராமங்களின் வரலாற்றை எழுதி ஏனையவர்களும் ஈழத்தின் கிராமங்களின் வரலாறினை எழுதுங்கள் என தூண்டுகிறார். தனது துணைவனார் அன்ரனிகுருசின் துணையோடு இந்த வரலாற்றுப் படைப்பை தந்துள்ள நெலோமி தமிழுலகில் ஓர் சிறந்த பெண் எழுத்தாளராக வளர்ச்சி பெற்றுயர்கிறார். இன்னும் பல அவரின் நூல்கள் உள்ளன. “இனியொரு காலம் இதுபோல் வருமா” வரலாற்றை அறிய விரும்பும் மாணவர்கள் படிக்க உகந்தது. நட்புடன்- கனகரவி