காதல் அறிவு…

நிலவொளிச் சாட்சியில்
இராத்திரி யன்னலை
மெல்லத் திறந்தது தென்றல்.
இரகசிய மெத்தனத்தால்
ஒத்தடம் நடந்தது நெஞ்சில்.
வண்ண சிறகுகளின் வலை விரிப்பில்
சிக்குண்டு சிலிர்த்தது காதல்.
இதழ்களின் விரசத் தாகம்
இதழ்களால் தணிக்கப்பட்டன.
முத்த மழையில் நனைந்து
கடும் காய்ச்சல் காதலுக்கு.
வரையறை இல்லாமல்
மேய்ந்த ஆடுகளாய் காதலர்கள்.
புத்தம் புதுப் பரவசம்
பூத்துத் தள்ளியது கண்களில்.
இறுக்கங்களின் பிடிகளால்
தேகங்களில் இன்ப வலி.
யுகங்கள் கடந்த பார்வை போலும்
பரிசங்களின் பலம் தெரிந்தது.
வல்லினமும் மெல்லினமும்
விரச முள்ளில் சமப்பட்டன.
விரல்களின் யுத்தத்தில்
ஓய்வு இருந்ததாய் தெரியவில்லை.
ஒன்றுக்குள் இரண்டு ஓசைப்பட்டது.
இடியோசை தான் பெரிதா?
இரவின் சங்கமத்தில் இதயங்களின்
மூச்சின் இரைச்சல் யாவையும் தாண்டின.
வெட்கங்கள் வேலியைப் பிரித்து
வெளி வந்து வேதம் சொன்னது.
அருகாமைக்குள் எத்தனை அலையோசை
அறிந்து தெளிந்தது காதல் அறிவு.
கலைப்பரிதி.