இருந்த இடத்தில்
இரும்புப் பிடி பிடித்தேன் என்
இருக்கையை
இதயம் இரட்டிப்பாய்
இடைவெளியின்றித் துடித்தது
குற்ற உணர்வு உள்ளத்தைக்
குடைந்து
குரலும் அடைத்தது
கும்பிட்டுத் தாழ் பணிந்து
கூடையைக் கையிலெடுத்தேன்
குரலொன்று கேட்டது
கூட்டிக் கொண்டு போக
குடும்பத்தோடு வாசலில்
கூப்பிடுகிறார்களம்மா
உதவிக்கு நிற்பவளின்
ஊசலாடும் குரல்
உயிரே பிரிவது போலுணர்வு
ஊட்டி வளர்த்த
உன்னத அம்மா ….
மீண்டும் கேட்கிறார்
இனி எப்போதம்மா
திரும்பி வருவாய்?
இங்கேயே இருந்துவிட முடியாதா?
இறுகிய இதயம் ❤️
இன்னல்ப் பட்டு
மீண்டும் துடிக்கிறது
இரண்டு மாதங்கள்
இரவும் பகலும்
அம்மாவின்
மாறிப்போன குரலில் மயங்கி
மயக்கத்தில்
இருந்தேனா? நான்
இழுத்துக் கொண்டு ஒடிய
இனிய நாட்களை
எண்ணிப் பிரியும்
தயக்கத்தில் உறைந்தேனா?
வாசலில் ஓசை
நேரமாகிறது
வாங்கோ போவம்
ஊரடங்கு சட்டத்தில்
உதவிக்கு வந்த
அயல் வீட்டுத் தெய்வங்கள்
பயணப் பொட்டலங்களுடன்
என் மனதையும் சேர்த்து
இரவு ஏழு ஐம்பதிற்கு
இழுத்துக் கொண்டு போய்
வாகனத்தில்
ஏற்றி
வழி தொடரச் சொன்னார்கள்
போய் வா மகளே
அம்மா உன்னோடுதான்
வருகிறார்
அழைத்துச் செல்லென்று….
வீட்டை ஒருமுறை
திரும்பிப் பார்க்கிறேன்
விளக்கெல்லாம்
எனக்காக எரிகிறதா
ஏங்கொண்டு
என் கைபேசியில்
எடுத்த படம்
என்னோடு பயணிக்க
இனி எப்ப வருவாய்
இங்கேயே நீ
இருக்க முடியாதா?
இன்னும் ஒலித்துக் கொண்டுதான்
இருக்கிறது
என் அம்மாவின் குரல்……