வெண்பனியே கொஞ்ச நேரம் நில்லு ,
என் கண்நீரின் கதைகேட்டுச் செல்லு.
சின்னவளாய் ஊரில் நானிருக்கையில் ,
உன்னை நேரில்ப்பார்ப்பேனா நானென,
எண்ணிக்கலங்குவேன் சிலபலமுறை.
பின்னொரு நாளிலிலே அது நனவாகி,
உன்மீது நறுநறுக்க நடந்து திரிகையில்.
கண்கள் கலக்குகிறது மூசும் பனியால்,
என்னுதடு வெடிக்கிறது ஊசிக்குளிரால்.
தன்விரல்கள் கையிலிருப்பதே தெரியாது,
வெண்பனிக்குளிரால் தேகம் மரக்கிறது .
சின்னஞ்சிறியவர்கள் சினோ சினோவென
சொன்ன சொல் கேளாமல் வெளியிலோடி
தன்னைமறந்து பனியிலாடி தடிமனோடு
கண்ணைக்கசக்கியபடி காய்ச்சலில் விழ.
பென்னம்பெரியவர்கள் பாதையில் சறுக்கி
பின்னந்தலை நிலத்திலடிப்பட கீழே விழ,
நன்னாள் பெருநாளெல்லாம் நாசமாகிடவே
திண்ணையிலே திறந்தபடி தூங்கியெழும்
மண்ணை மறந்து வந்த நாளை எண்ணி
கண்களை மூடி கனவில் ஆழ்கிறேன்.
செம்மண் நேசன்.