என் உயிரோடு கலந்தது


என்தேசத்தை நினைத்து
மூச்சும் விடச்சுடுகிறது
ஊரை உறவை நினைத்து
உறக்கமும் வருகுதில்லை
காலாற நடந்த தெருக்கள்
கண்முன்னே விரிகிறது
கிழிந்தகால்ச்சட்டை
கழண்டுவிழ வளையம்உருட்டி
மணல்வீடுகட்டி ஓடித்திரிந்து
மண்சோறு சமைத்து
ஊஞ்சல்கட்டி ஆடிமகிழ்ந்து
சைக்கிள்ஓடி விழுந்தெழும்பி
பந்தடித்து நகம் உடைத்து
அக்காதம்பியுடன் சண்டைபிடித்து
அப்பர் வந்து தடியெடுத்து
விழுந்த அடியில் அழுதகோலம்
இப்படி எல்லாம் நடந்தவைகள்
நினைவில்வந்துவந்து போகுது
அந்தச்சந்தோஷம் ஆனந்தமே
எழுத ஆயிரம் இருக்கு–
எழுதும்போது விம்மல் எடுத்து
அழவேண்டும்போலகிடக்கு
கண்ணீர் வடிந்தோடுது
என்நாவறண்டு போகுது
நெஞ்சுக்குள் ஏதோசெய்யுது
இன்று வீட்டுக்குள் இருக்க
ஒரேயோசனையாய் இருக்குது
உலகெங்கும் மரணபயம்
சாவுகளை நினைத்து
சஞ்சலப்படுகுது மனசு
தினம் ஏக்கத்தால் என்வாழ்வு
இங்கே கடந்துபோகுது
சந்தோஷம் கரைந்துபோகுது
என்மண்ணே என்ஊரே
உன்னை எப்படி மறப்பேன்
என்மண்வாசம் அந்த புழுதிவாசம்
இப்பவும் பெருமூச்சில் மணக்கிறது
இன்னொரு பிறப்பு உண்டானால்
என் ஏழாலைமண்ணிலேதான்
அந்தமயிலங்காட்டு ஊரிலேதான்
என் நிரந்தரமான வாழ்விருக்கும்’
சந்தோஷம் அங்கேதான் நிறைந்திருக்கும் இது உண்மை
(மயிலங்காடு இந்திரன்)