இங்கே கோழி இறைச்சி விற்கப்படும்

கட்டடங்கள்
கால்முளைத்து
நடக்கும் காலத்தில்
தங்கத்தை கொடுத்து
நாங்கள்
தண்ணீர் வாங்குவோம்.

விலங்குகள்
ஆடை அணியும்
ஆடை அணிந்த
மனிதர்களை
வேற்றுகிரகவாசிபோல் எல்லோரும்
வியப்போடு பார்ப்பார்கள்.

ஆணும் பெண்ணும்
திருமணம் செய்வது
தண்டனைக்குரிய குற்றமாகும்.
பெண் கவிதை பாடுவாள்
ஆண் விடுதலைக்காய்…

ஓடும் பஸ்ஸில்
ஒதுங்கும் கழிவறையில்
ஆணை
ஆண் கற்பழித்தாக செய்தி வரும்.
இரவில் தனித்து பயணிக்க
அஞ்சி வீட்டிலே முடங்குவான்
ஆண்.

குழந்தைகள்
மனித தொழிற்சாலையில்
உற்பத்தியாகும்
மனிதர்களுக்கு தேவையான
மனிதர்களை உற்பத்திசெய்ய
நிறுவனங்கள்
போட்டி போடும்.

ஐரோப்பிய
ஆசிய
ஆபிரிக்க
இந்திய குழந்தைகளில்
ஐரோப்பிய குழந்தைகள்
அதிக விற்பனையாகும்
காரணம் மலிவு விலையில் கிடைப்பதே..

ஆபிரிக்க குழந்தைகள்
இக்கால வைரம்போல்
அக்கால சுத்தமான
காற்றைப்போல்
பெறுமதியானவர்கள்
அவர்களை பணம்
படைத்தவர்களுக்கே வாங்க முடியும்.

தமது குடும்பத்துக்கு
தேவையான
குழந்தைகளை
தெரிவு செய்து
கடைகளில் மனிதர்கள்
வாங்கிச் செல்வர் .

விலைபோகாமல் மிஞ்சும்
மனித குழந்தைகள்
விருந்தாகும்
விலங்குகளுக்கு…

ரோபோக்களின்
தாலாட்டில்
அழகழகாய்
தொட்டிலில் கண்ணுறங்கும்
நாயும் பூனையும்…

அன்பு பாசம்
காதல் கருணை என்ற
வார்த்தைகளின் அர்த்தத்தை
புரிந்துகொள்ள
அகராதியை நாடுவோம்.

‚இங்கே கோழி இறைச்சி விற்கப்படும்‘
என்று இன்று சிலவீடுகளின்
வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும்
விளம்பரங்களைப்போல்…

‚அன்பு இங்கே வாடகைக்கு விடப்படும்‘
என்ற சுலோகம் தொங்கிக்கொண்டிருக்கும்
‚மனித காட்சிசாலை’யில்…

மனிதர்கள் மணித்தியால
கணக்கில் கட்டணம் செலுத்தி
அன்பை குடும்பத்தோடு
வந்து அனுபவித்து மகிழ்வர்….

இதோ பார்…
இதுதான் அன்பு
இதுதான் பாசம்
இதுதான் கருணை
இதுதான் காதல் என்று
தன் குழந்தைகளுக்கு காட்டி
மகிழ்வான் நவீன அம்மா…..

கவி வரிகள் அஸ்வின்