.
கலை, பண்பாடுகளை நவீனயுகம் நம்மைவிட்டு தள்ளிவைக்க முயற்சிக்கும் காலத்திலே அதனைத் தக்கவைத்தல் அவசியமே.
ஈழத்தின் வன்னியில், முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கலை, இலக்கியம், தொழிற்கல்வி ஆகியவற்றை முன்னெடுக்கும் பொருட்டான ‚இஷானியா கலாமன்றம்‘ எனும் புதிய கலாமன்றத்தின் திறப்பு விழாவானது 14.03.2020 சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வன்னியின் புதுக்குடியிருப்பில் ஆரம்பமானது.
நிகழ்விற்கு யோ.புரட்சி தலைமை வகித்தார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கலாமன்றத்திற்கான நிதி ஏற்பாடுகளை ஜேர்மனி வாழ் வை.கமலராஜா வழங்கியிருந்தார்.
முன்னதாக சிறுவர்களின் இன்னிய அணிவகுப்புடன் வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற்றது. வாயிலில் மங்கல விளக்கு ஏற்றப்பட்ட பின்னர், கலாமன்றத்தின் பெயர்ப்பலகையினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஒளித்திலகன் திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து கலாமன்றத்தின் புதிய கட்டடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந் திறந்து வைத்தார்.
புதிய மன்றத்தினுள் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. பொதுச்சடர் ஏற்றுதல், அகவணக்கம், கலாமன்ற மாணவிகளின் தமிழ்மொழி வாழ்த்து என்பன முறையே இடம்பெற்றன. ஆசியுரைகளை ஜேர்மனி பாஸ்கரதாஸ் குருக்கள்(ஒலிப்பதிவு), சிவஸ்ரீ நவரத்தினம் ஆகியோர் வழங்கினர். வரவேற்பு நடத்தினை சானுகா வழங்கினார். வரவேற்புரையினை எழில்விழி வழங்கினார். யோ.புரட்சி அவர்களின் தலைமையுரையினைத் தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு அதிதியான இலங்கை யோகா பயிற்சிக் கல்லூரி இயக்குநர் ஜெயம் ஜெகன் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து பிரதம அதிதியான புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந் உரை நிகழ்த்தினார். கருத்துரையினை நான்கு மாவீரர்களின் சகோதரரான முல்லை ஈசன் நிகழ்த்தினார். தொடர்ந்து இஷானியா கலாமன்றத்தின் பணிகளை நெறிப்படுத்திய மாற்றுத்திறனாளி இ.பிரபாகரன் நினைவுச் சின்னம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். ஜேர்மனி சமூகப் பணியாளரும், இஷானியா கலாமன்ற தொடக்குநருமான வை.கமலராஜா இதனை வழங்கி வைத்தார்.
தொடர்ந்து கலாமன்றத்தின் பணிகளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந் தொடக்கி வைத்தார்.
நன்றியுரையினை இஷானியா கலாமன்ற தொடக்குநர் வை.கமலராஜா வழங்கினார். தொடர்ந்து யாவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
போர் முடிந்த பின்னர் மரநிழலின் கீழ் தொடங்கப்பட்ட கலாமன்றமானது ஐந்து ஆண்டுகளின் பின்னர் ஏற்ற வசதிகளோடு இயங்குவதற்கான நிலைமையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.