கலாசாரக் காப்பாளர்களாக இளையோர்
நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம் விட்டுச்செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழன் தன் மொழி, கலாசாரம், பண்பாடு என்பவற்றை தான் வாழும் பகுதிகளில் நிலைநாட்டிக் கொண்டே வருகின்றான். அவர்களின் வாழ்வுக்குப் பின் எவ்வாறு எம்முடைய கலாசார கோட்பாடுகளும் பண்பாட்டு அடையாளங்களும் பேணிப் பாதுகாக்கப்படும் என்னும் கேள்விக்குறி ஒவ்வொரு மனங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்றது. ஆனால், அக்கேள்விக்குறிக்கு விடை காணும் வகையில் 18.01.2020 அன்று எசன் நகரில் Getrudissaal, Rott Str 36 என்னும் முகவரியில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக இளையோர் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை நடத்தியிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக எமது பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானை அடுப்பில் வைத்து பொங்கப்பட்டது. வளருகின்ற சிறுவர்கள் அதன் படிமுறைகளை பார்த்து இரசித்து உள்வாங்கும் படியாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. பொங்கிய பொங்கலின் இனிமையை வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் பகிர்ந்தளித்து இளையோர் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்த நிகழ்ச்சிக்கு பலர் அனுசரணை வழங்கியிருந்தனர். பிரதம விருந்தினராக எசன் நகரமுதல்வர் Herr. Thomas Kufen அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக இலங்கையில் இருந்து சிறு வயதிலே யேர்மனி வந்து படித்து இருதய சத்திரசிகிச்சை டாக்டராகப் பதவி வகிக்கும் இளைஞர் திரு. உமேஸ்வரன் அருணகிரிநாதர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். எப்படித்தான் ஒரு மரத்தைக் கொண்டு வந்து வேறு ஒரு இடத்தில் நட்டாலும் அதன் வேரின் தன்மைகள் மாறாது. வளருகின்ற இடத்திலிருந்து பயன்களைப் பெற்று புதிய வேர்கள் வரலாம் அதன் அடிப்படைத் தன்மையில் மாற்றத்தைக் காணமுடியாது என்ற கருத்துப்பட்ட வார்த்தைகள் சிறப்பாக அமைந்திருந்தன.
அறிவுப்புக்கள் அறிவுபூர்வமாக அமைந்திருந்தன. 5 இளையவர்கள் அறிவிப்பைச் செய்திருந்தார்கள். இது குறைக்கப்படலாம் என்று நினைத்தேன். மேடை சிறிதாக இருந்த காரணத்தால் ஒலி அமைப்புக்களை முன்னமே ஒழுங்குபடுத்த முடியவில்லை. காரணம் நடனம் ஆடுகின்ற இளையவர்களுக்கு அது இடைஞ்சலைத் தரும் என்பதைப் புரிந்து கொண்டேன். நிகழ்ச்சிகள் அத்தனையும் சிறப்பாக இருந்தன.
மேடைநிகழ்வுகளில் கலாசார பண்பாட்டு நிகழ்வுகளையும் சினிமாவையும் ஒன்றாகக் கலக்காது இடைவேளைக்கு முன்னுள்ள நிகழ்வுகள் அனைத்தும் எமது பாரம்பரிய நடனங்களான கோலாட்டம், கும்மி, காவடி, கரகாட்டம் போன்றனவும், பரதநாட்டிய நிகழ்வுகள், வீணைஇசை, கர்நாடக இசை போன்றனவும் இடைவேளியின் பின் சினிமா நடனங்கள் பாடல்கள், Keybord, Violin போன்றனவும் இடம்பெற்றன. அற்புதமான இந்நிகழ்வுகளின் சிறுவர்களின் நடனங்களைக் காணும்போது எமது கலைகள் காலம் கடந்தும் புலம்பெயர் மண்ணில் அடையாளங்காட்டும் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.
பெரியவர்கள் ஒழுங்கு செய்து நடத்துகின்ற நிகழ்வுகளில் கூட அவதானிக்கப்படாத ஆடை விடயங்கள், மனிதப் பண்புகளின் சீர்கேடுகள் போன்றவை இளையவர்கள் முன்னின்று நடத்திய இந்த நிகழ்வில் ஒரு துளி அளவுகூட இடம்பெறவில்லை. அனைத்தும் அவதானிக்கப்பட்டு ஒழுக்கமான ஆடைகள், ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் நிகழச்சிகள் என்பவற்றை நடத்தியிருந்ததைப் பார்க்கும் போது இளைய சமுதாயம் என் முன்னே உயர்ந்து நிற்கின்றார்கள். இதனை முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியமாகும்.
தம்முடைய சங்க உறுப்பினர்களை மேடைக்கு அழைக்கும் போது அவர்கள் சங்கத்தில் என்ன பதவி வகிக்கின்றார்கள் என்பதை அறிவிப்புச் செய்யாமல் உறுப்பினர்கள் என்று அழைத்து அவர்களை பரிசில்கள் வழங்கச் செய்த பண்பு பெரியவர்களைத் தலைகுனியச் செய்தது. பதவியில் எதுவும் இல்லை. செயலிலேயே பெருமை அடங்கியிருக்கின்றது என்னும் உண்மையை எடுத்துக்காட்டியிருந்தார்கள்.
நேரம் கடந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றபோதும் களைப்பு எதனையும் இளையோர் தமிழ் சங்கத்தினரோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களோ, இளையவர்களோ காட்டவில்லை என்பது மகிழ்ச்சியைத் தந்தது.
இவற்றையெல்லாம் தாண்டி குறைகள் தென்பட்டிருந்தால், அக்குறைகளை தனிப்பட்ட முறையில் அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களைச் சரியான முறையில் வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெரியவர்களுக்கும் இருக்கின்றது. அவ்வாறு குறைகளைக் கண்டிருந்தால், அவற்றை உரியவர்களிடம் எடுத்துரைக்கலாம். நிறைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தலாம். அதுவே சமூகத்தைத் திருத்துவதற்கும் இளையவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டு செல்வதற்கும் உரிய வழிமுறையாகும்.