மனங்களை வென்றவர்கள்


அடை பட்ட
கதவுகள் திறபட்டன.
அடிமைச் சிறை
உடைத்து அரங்கேறினர்..

பொன்னும் பொருளும்
பூவும் பொட்டுமெனும்
மாயைகள் தாண்டி
தலைவன் வழியில்
களம் நோக்கி நகர்ந்தனர்.

அடுப்படி ராணிகள்
வீீராங்கணைகளாயினர்.
எங்கள் பூவையர்
வீரப் புலிகளாயினர்.

கிலி கலைத்து
படை நகர்த்தி
பகை விரட்டினர்
கரங்களில் சுடுகலன்
கழுத்தனில் நஞ்சு மாலை..

சாவைச் சட்டைப்பைகளில்
காவிய படி காடுகள்
மேடுகள் கடந்தனர்
நீரிலும் நிலத்திலும்
வானிலும் சமர் புரிந்தனர்.

சத்திய வேள்வியில்
அடிக்கடி ஆவுதியாகினர்.
ஆதிக்க வெறியரின்
கொட்டம் அடக்கினர்.

மாதவம் செய்து
பிறந்த மங்கையர்
மண்டியிடாது வீர
மரணங்களை தழுவி
மாவீரராயினர்.

இன்று அனைவர்
மனங்களில் வாழும்
தெய்வங்களாயினர்
கார்த்திகை மாதம்
அவர்களுக்கான மாதமாச்சு
மலர் தூவி வணங்குவோம் வாரீர்.

கவிஞர் தயாநிதி