ஈழத்தின் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவும், நூல்கள் வெளியிடுதலுமான நிகழ்வு 08.12.2017 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமானது. நிகழ்விற்கு யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
கொடியேற்றல், மங்கல விளக்கேற்றல் என்பவற்றைத் தொ…டர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை உடுத்துறை இந்து ஆரம்பப் பாடசாலை மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை கலாசாரப் பேரவை உறுப்பினர் த.பாலசிங்கம் வழங்கினார். அரங்கத் திறப்புரையை கலாசாரப் பேரவை உறுப்பினர் சி.பொன்னம்பலம் நிகழ்த்தினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து மீனவப் பாடலினை சென்.அன்ரனீஸ் நாடகக் குழுவினர் வழங்கினர். தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அபிராமி பாலமுரளி சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து பிரதேச செயலகத்தின் ‚பார்வை‘ ஆக்க இலக்கிய மலரின் வெளியீட்டுரையினை சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ச.இராகவன் நிகழ்த்தினார். இந்நூலினை திருமதி வடமாகாண பண்பாட்டலுவல்கள் உதவிப் பணிப்பாளர் அபிராமி பாலமுரளி வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை தொழிலதிபர் ம.யாக்கோபு செல்வக்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கவிஞர் எஸ்.சிவசேகரன் எழுதிய ‚மட்டை வேலிக்குத் தாவும் மனசு‘ கவிதை நூலினை நிகழ்வின் பிரதம விருந்தினரான யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை கவிஞரும் தொழிலதிபருமான கம்பிகளின் மொழி பிறேம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. ‚மட்டை வேலிக்குத் தாவும் மனசு‘ கவிதை நூலின் அறிமுக உரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.
தொடர்ந்து ‚மட்டை வேலிக்குத் தாவும் மனசு‘ நூலின் நயப்புரையினை யாழ்.மாநகர ஆணையாளர் கவிஞர் த.ஜெயசீலன் நிகழ்த்த, ‚பார்வை‘ நூலின் நயப்புரையினை ஆழியவளை சி.சி.த.க பாடசாலை ஆசிரியர் த.அஜந்தகுமார் நிகழ்த்தினார். இரு நூல்களின் ஏற்புரையினை கவிஞர் எஸ்.சிவசேகரன் ஆற்றினார்.
வாள் வீச்சுக்கலை ஆற்றுகையை அ.விஜயரத்தினம் ஆற்றினார். தொடர்ந்து பிரதேசத்தின் தெரிவுசெய்யப்பட்ட கலைஞர்கள் ‚கலைச்சாகரம்‘ விருதும், பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இவ்விருதினை செல்லையா வேலுப்பிள்ளை, பிலிப்பு கபியேல்பிள்ளை, அந்தோணிப்பிள்ளை பிலிப்பையா, அருணாசலம் விஜயரத்தினம், பவுளின் அப்பு எஸ்தாக்கி ஆகியோர் பெற்றனர். சிறப்பு கெளரவத்தினை இரவீந்திரன் அருணாகரன் மற்றும் ஜெயபாலா ஜெயசுலக்ஷன் ஆகியோர் பெற்றனர்.
பிரதம விருந்தினர் உரையினைத் தொடர்ந்து, கணாதீபன் வில்லிசைக் குழுவினரின் ‚நீதி வழுவாது வாழ்வோம்‘ வில்லிசை, சென்.மேரீஸ் நாடக மன்றத்தினரின் ‚ஞானசெளந்தரி‘ தென்மோடி நாட்டுக்கூத்து, என்பனவும் இடம்பெற்றன.
நன்றியுரையினை பிரதேச கலாசார உத்தியோகத்தர் சே.செல்வசுகுணா வழங்கினார்.
போர் முடிந்த பூமியில் பண்பாடுகளை நிலைப்படுத்தும் இன்னுமொரு நல்லம்சமாக இந்நிகழ்வு இனிதே நிறைவானது.