நம்பிக்கைத் துரோகத்தின்
நவீன சாட்சி ‚கடல்‘
துரோகிப்பது பற்றி…
அரசியல்வாதிகளிடமிருந்து
கடல் கற்றுக்கொண்டதா..?
கடலிடமிருந்து அரசியல்வாதிகளா..?
தன் பிள்ளைகளை தானே
தின்றுவிடும் குப்புசாமி வீட்டு
பெட்டை நாய்க்கும் கடல் என்று பெயர்
எங்கெல்லாம் ஜனநாயகம்
கற்பழிக்கப்படுகிறதோ
அங்கெல்லாம் பொழிகிறது
சமத்துவ மழை
எங்கெல்லாம் கூட்டுவாழ்க்கை
குலையாமல் இருக்கிறதோ
அங்கெல்லாம் கும்மியடித்துவிடுகிறது
கடல்
விழி நீர் தவிர மிகுதி நீர்
எல்லாம்
சுயநல அமிலங்கள்
கறப்பதற்கு எதுவுமில்லையென
அரசியல்வாதிகளால்
கைவிடப்பட்ட உடல்களில்
இருக்கிற உயிரையும்
உறிஞ்சிவிடுகிறது
வன்ம சாகரம்
ஏலேலோ ஐலசா..
என தாலாட்டுப் பாடும்
தவப் புதல்வர்களை
தாரைவார்த்துவிடும் கடல்
அக்கிரமகாரர்கள்
மேலேறிச் செல்ல அமைதியாய் கிடக்கிறது
கடலுக்கு பிணக்காடு என்றொரு
பெயருண்டெனத் தெரிந்தும்
சுடுகாட்டுச் சுற்றுப்பயணத்திற்கு
மீளவும் தயாராகிறது
மீனவக் கிராமம்
என்ன செய்ய அவர்களுக்கு
இரு புறமும் துரோகம்
அங்கொரு சிறுவன்
பாடினான்
„தரைத் துரோகத்தைவிடவும்
கடல்த்துரோகம் சகிப்புடையது….“
– அனாதியன்-