ஒருபுறம் சினிமாப் படங்களின் வருகை எமது தேசத்தை நிறைக்கின்றன. மறுபுறம் மொழியறிந்த நம்மவர்கள் இயன்ற மொழிசார் பணியாற்றி தாய்மொழி நிலைப்படுத்தலை முன்னெடுத்து வருகிறார்கள்.
கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரியும், முல்லைத்தீவின் அளம்பில் பகுதியைச் சேர்ந்தவருமான முல்லை பிரசாந் எழுதிய ‚வலி நிலைத்த வாழ்க்கை‘ கவிநூலின் வெளியீட்டு விழாவானது 26.10.2019 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலமைந்த அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. நிகழ்விற்கு முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் ‚கம்பீரக்குரலோன்‘ சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார்.
முன்னதாக விருந்தினர்கள் வரவேற்பு இடம்பெற்றது. சுடரேற்றல், இறைவணக்கம் என்பன முறையே இடம்பெற்றன. பள்ளி மாணவிகள் தமிழ்மொழி வாழ்த்திசைத்தனர். தொடக்கவுரையுடன் கூடிய வரவேற்புரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். ஆசியுரைகளை வணக்கத்திற்குரிய தயாகரன் அடிகளார் மற்றும் முல்லைத்தீவு அளம்பில் மகா வித்தியாலய அல்பிரட் ஆகியோர் வழங்கினர்.
தலைமையுரையினைத் தொடர்ந்து, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.இரவிகரன் பாராட்டுரை அளித்தார். சட்டத்தரணி க.சுகாஸ் அவர்களின் வாழ்த்துரை தொடர்ந்து இடம்பெற்றது. வெளியீட்டுரையினை தமிழர் மரபுரிமை அமைப்பின் செயலாளர் வி.நவனீதன் நிகழ்த்தினார்.
‚வலி நிலைத்த வாழ்க்கை‘ நூலினை நூலாசிரியர் முல்லை பிரசாந் அவர்கள் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பங்கேற்றோர் நூற்பிரதிகள் பெற்றுக்கொண்டனர்.
நூலின் நயவுரையினை வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா ஆற்றினார். தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் லோகேஸ் அவர்களின் கருத்துரை இடம்பெற்றது. பிரதம அதிதியான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா நிகழ்த்தினார்.
ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் முல்லை பிரசாந் வழங்கினார்.
இந்நூலிற்கான நிதியுதவியினை நாவலாசிரியரும், இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத் தலைவருமான வவுனியூர் இரா.உதயணன் அவர்கள் வழங்கியிருந்தார். நிகழ்வில் கலந்துகொண்ட யாவருமே இறுதிவரை பங்கேற்றிருந்த நேர்த்தியான வெளியீட்டு விழாவாக இந்நிகழ்வு அமையப்பெற்றிருந்தமை நல்லதொரு அம்சமெனலாம்.