கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கரைச்சி பிரதேச சபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வான கலாசார விழுமியங்களை எடுத்தியம்பும் பொம்மலாட்டம், மயில் ஆட்டம், பொய்கால் குதிரை, தமிழ் இண்ணியம், பறை, சிலம்பாட்டம் தவில் இசை உள்ளிட்டவற்றின் ஊர்வலத்துடன் தமிழ் மன்னர்களை பறைசாற்றும் வகையில் ஊர்தியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் கலந்து கொண்டனர்.
அழிந்துவரும் தமிழர் பாரம்பரியத்தை பேணிப் பாதுகாக்கும் வகையிலும், அவற்றை வளர்க்கும் நோக்குடனும் குறித்த பண்பாட்டு பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வின் இரண்டாம் நிகழ்வான அரங்க நிகழ்வுகள் தற்பொது இடம்பெற்று வருகின்றன. இதன்போது பாரம்பரிய கலை, நாடகம், கவியரங்கம், பண்பாட்டை எடுத்தியம்பும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் 15 அதி உயர் விருதுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளன.