பல்தேசப் படைப்பாளிகளின் பங்கேற்போடு கம்போடியா தேசத்தில் இடம்பெற்ற யோ.புரட்சி ஆக்கிய ‚செல்லமுத்து‘ நாவல் வெளியீடு.
போருக்குப் பிந்திய ஈழத்து நாவல்களில் இன்னுமொரு புதிய பக்கம். நீண்ட ஆண்டுகளுக்கு முந்திய அம்சம். ‚செல்லமுத்து’நாவல் ஈழ இலக்கியத்தில் ஒரு புதுமை‘ என பதிவு செய்துள்ளார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சா.உதயசூரியன் அவர்கள்.
யோ.புரட்சி எழுதிய ‚செல்லமுத்து‘ நாவலின் வெளியீட்டு விழாவானது, 21.09.2019 சனிக்கிழமை கம்போடிய நேரம் காலை 10.00 மணிக்கு, கம்போடிய தேசத்தின் சியான் ரீப் நகரில் அமைந்துள்ள அங்கோர் ஈரா விடுதியில் இடம்பெற்றது. பல்தேசப் படைப்பாளிகள் இணைந்த ‚உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு‘ எனும் நிகழ்வாக அமையப்பெற்ற நிகழ்விலே இவ்வெளியீடும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்விற்கு அங்கோர் தமிழ்ச் சங்கத் தலைவர் சீனிவாசராவ் தலைமை வகித்தார். கம்போடியா தேசத்தின் சியான் ரீப் மாகாண கலை, பண்பாட்டு அலுவல்கள் இயக்குநர் மோர்ன் சொயாப் அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்றார். கலாசார பவனி, கம்போடிய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, கம்போடியா மற்றும் அவுஸ்திரேலியா வாழ் கலைஞர்களின் நடனம், விளக்கு ஏற்றல் என்பன முறையே இடம்பெற்றன. தொடக்கவுரையினை அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ஞானசேகரன் வழங்கினார்.
தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்ட ‚பன்னாட்டுத் தமிழர் நடுவம்‘ தலைவர் சித்தர் தணிகாசலம் அவர்களும், கம்போடியாவில் இயங்கும் அங்கோர் தமிழ்ச் சங்கம் சார்பில், சீனிவாசராவ், ஞானசேகரன், இரமேஷ்வரன் உள்ளிட்டோரும் இவ்வெளியீட்டிற்கு ஏற்படுத்துகை செய்து உதவினர்.
‚செல்லமுத்து‘ நாவலினை கம்போடியா தேசத்தின் சியான் ரீப் மாகாண கலை, பண்பாட்டு அலுவல்கள் பிரிவு இயக்குநர் மோர்ன் சொப்பீப் வெளியிட, முதற்பிரதியினை துபாய் தேசத்திலிருந்து வருகை தந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி ஆய்வாளர் ஸ்ரீரோகினி பெற்றுக்கொண்டார். நூலின் அறிமுகக் குறிப்பினை தமிழ்நாட்டின் எழுத்தாளர் மணிமேகலை வழங்கினார். தொடர்த்து வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றோர் பிரதிகளைப் பெற்றனர்.
நிகழ்வினை இலங்கையைச் சேர்ந்த ‚கம்பீரக்குரலோன்‘ சி.நாகேந்திரராசா, இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
‚செல்லமுத்து‘ நாவலின் முகவுரையினை இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களும், அணிந்துரையினை இலங்கையின் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன் அவர்களும், முன்னுரையினை யோ.புரட்சியும் எழுதியுள்ளனர்.
நிகழ்வில் ஈழக்கவிஞர் அஸ்மின், கலாபூஷணம் மேழிக்குமரன், குவைத் இந்துமதி, சுவிட்சர்லாந்து இணுவையூர் மயூரன், சுவிட்சர்லாந்து எஸ்.வி.ஆர் பாமினி, எழுத்தாளர் வெற்றிச்செல்வி, யாழ்ப்பாணம் றஞ்சுதமலர், முல்லை யோகேஸ், நியூசிலாந்து பூ.பிரதீபன், துபாய் ஸ்ரீரோகினி, குவைத் கந்தநாதன், தமிழ்நாட்டின் ந.கல்யாணசுந்தரம், கருமலைத்தமிழாழன், கோ.மலர்வண்ணன் உள்ளிட்டோர் வெளியீட்டின்போது அரங்கிலே இணைந்துகொண்டனர்.
பிரான்ஸ், அவுஸ்திரேலியா, மலேசியா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அநேகர் கலந்துகொண்ட நல்லதொரு நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது