தமிழ்த்தேசியமென்பது இறப்பில்லாத
விழுதெறிந்த பெருவிருட்சமது.
சில காலத்தில் பல வழிப்போக்கர்கள்
வருவதும் இழைப்பாறுவதும் வழமைதான்.
சிலர் மரத்தடியில் அமர்ந்து தம்மை
அடையாளமிட அரங்கத்திரையிடுவார்.
சிலரோ இயற்கைச்சேவையென கூறியபடி
அப்பப்போ நீரூற்றி விலாசம் தேடுவார்.
ஆனால் எல்லோரது பாசாங்கு பார்த்தும்
மௌனமொழியாய் காலங்களைக் கடக்கும்
அதை நட்டவன் எவனோ
காத்தவன் எவனோ
உரமிட்டவன் எவனோ
யாருக்கும் தெரிவதேயில்லை உண்மை.
யாரும் வரலாம் அடைக்கலமுண்டு.
யாரும் நீங்கலாம் மறிப்பு இல்லை
அதே இடத்தில் உண்மைத்தேசியம்
இலையுதிர் வசந்தம் தாண்டி வாழும் காண்.
-வன்னியூர் செந்தூரன்-