ஒரு யுகத்தை இழந்து
பத்து வருடங்கள் .
அழிக்கப்பட்ட எம்
வாழ்வியலில் இருந்து
மீண்டெழ முடியாத
எங்கள் பேரினம்,
அவலத்தை சுமந்து
முடிவிடம் இன்றி
முடங்கிபோகின்றது,
ஏங்கும் விழிகளுக்குள்
விடுதலைத்தீயை புதைத்து
வெகுநாட்கள்
வாழும் வழியை வகுத்து வகுத்து
வருத்தமும் மரணமும்
வந்து வந்து போகும் இந்நாட்கள்!
என்றும் எமக்கு வேதனையை
தந்து போகுதே இந்த வலிநாட்கள்..!
நிம்மதியான தேசத்தில்
தூங்கி எழ தானே ஆசைப்பட்டோம்,
அந்தநாள் நிச்சயம் வரும்
என்று தானே மண்ணை
முத்தமிட்டோம், ஆனால்
இன்று நாம் நிரந்தரமாக
தூங்கும் நிலை வந்து போகுதே
யாம் என்செய்வோம்,
குருதியில் தான்
பிறக்கின்றோம்
குருதியிலே தான்
வாழ்கின்றோம்
இறுதி வரை எம் நிலை
இதுவென்றால்
இவ்வாழ்வெதற்கு இறைவா,,!
எங்கள் சனங்களின்
வாழ்வுநிலையை
மாற்றி மலக்குழிக்குள்ளும்,
சவக்காலைக்குள்ளும்,
சுடுமணலுக்குள்ளும்
வாழப்பழக்கிய
இழிநிலை யாரைச்சாரும்
இது பழி நிலை
தந்தவனை தாக்கும்.
இன்று காணும்
இத்தனை இன்பமும்
அன்று காண தவம் இருந்தோம்
ஒவ்வொருவரின் தவத்தையும்
ஒவ்வரு உயிர்ப்பலியும் தடுத்துக்கொண்டிருந்தது,
காரணம் சபிக்கப்பட்டவர்கள்
நாங்களாம்!
எதுவுமில்லை எதுவுமில்லை
என்றவாறு கோசமிடுகின்றது
பேரினவாதம்
கொலைக்களத்தின் கொடூர
அரங்கிற்கு இன்றும் எம்மை
பலியிட்டுக்கொண்டு இருக்கின்றது,
கால் சுடும் புழுதி மணல்
அங்கு கால்கள் இல்லை
தெறித்து விழும்
தோட்டாக்களுக்கு இரையாக
ஒவ்வொரு மனித உடலும்
ஒவ்வொரு பாகங்களாக
இங்கு சாட்சிகள் இல்லை
பிண காட்சிகள் மட்டுமே
நிலவிற்கும் கேட்டது
எங்கள் ஓலங்கள் அதே நிமிடம்
அருகில் இருந்த தமிழகத்திற்கும்
கேட்டது எம் கதறல்
பாவம் அவர்கள்
என்ன செய்வது
படைகொண்டா வருவது,
ஆயினும் அன்றைய
அவர்களின் தலைமையின்
சதி கண்டு ஒடுக்கினர்
தமிழகமே…!
உங்களால் முடிந்திருக்கும்
எங்கள் திலீபன் போல்
எங்கள் பூபதி போல்
எங்கள் முத்துகுமாரன் போல்
ஒருவர் இல்லை உணர்வாய் பலர்
இருந்திருக்கலாம் ஏன்
யல்லிக்கட்டு போலும்
இணைந்திருக்கலாமே
என்ன செய்வது
நாங்கள் சபிக்கப்பட்டவர்கள்
ஆனோமே..இன்றுவரை
வேதனையின் விளிம்பில்தான்
வீடுகட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும்
எமது தேசம் நரம்பறுந்து
இருந்தாலும்
நம்பிக்கையோடு
தான் இருக்க்கின்றது
பத்து வருடம் கடந்தாலும்
பசியோடு தான் இருக்கின்றது,
எங்கள் உணர்வுகளில்
பழைய நினைவுகளை
பக்குவப்படுத்தி
வைத்திருக்கின்றோம்
தாய் மண்ணுக்கு தெரியும்
எங்கள் காயங்களை
எப்படி ஆற்றுவது என்று
கடந்து போக முடியாத
வரலாறு காவியம்
படைக்கும் வரை
காத்திருப்போம்
எம்மை நாம் நம்பி….
தே,பிரியன்;