நான்?…
நான் என்கின்ற நான் யார்?
எனக்கு விடை தெரியவில்லை….
விடியும்போது விழித்து இருளும்போது உறங்கி, இடையில் இந்தப் பகல் பொழுதுகளில் கடமை என்று
ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கிற நான்…!
எனக்குள்ளே இருக்கிற என்னை எனக்குத் தெரியவில்லை. என்னை யாரென்று நீங்கள்
நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ அந்த உருவத்தையும் எனக்குத்தெரியவில்லை.
எப்போதாவது என்னை நான் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது அல்லது புகைப்படத்தில்
என்னைக் கண்டுகொள்கிறபோது அதுதான் நான்என்று ஊகிக்கிறேன்.
ஆனால் உண்மயில் அதுதானா நான்?
எனக்குத்தெரியவில்லை!
„நான்..?“
„நான் என்கின்ற நான் யார்?“
-உங்களைக் குழப்புகிறேனா? இல்லையே!
உங்களை எனக்குத் தெரிகிறது. என்னையும் உங்களுக்குத்தெரிகிறது.
என்னை எனக்குத்தெரியவில்லை. உங்களையும் உங்களுக்குத் தெரியவில்லை.
இப்போது உங்களுக்கு என்ன புரிகிறது?
ஒவ்வொருவரும் தனக்காக வாழ்ந்தாலும் தானாக வாழவில்லை என்பதுதானே?
நானாக இல்லாத நான் எனக்காக வாழ்வதில் என்ன பயன்?
என்னைத் தெரியாத நானும் உங்களைத் தெரியாத நீங்களும் சந்தித்துக் கொள்கிறபோது
இரண்டு பேரும் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.
எதனால்..?
என் முகத்தில் வருகிற புன்னகை உங்களையும் உங்கள் முகத்தின் மலர்ச்சி என்னையும் குளிர்வூட்டுகிறது.
ஆக-
வெளியிலிருந்து,அதாவது என்னிலிருந்து நீங்களும் உங்களிலிருந்து நானும் மகிழ்ச்சியை வாங்கிக்
கொள்கிறோம். கவலகளும் அப்படித்தானே?
என்மீது சினம்கொண்டு நீங்கள் எரிந்து விழும்போது என்னைத்தெரியாத எனக்கு உங்கள்மீது கோபம் வருகிறது.
உங்களைத்தெரியாத உங்களுக்காய் நான் பரிதாபப்படுவதைவிட்டுவிட்டு, என்னைத் தெரியாத
நானும் உங்களுக்கெதிராக கையைத் தூக்குகிறேனே..
இது எப்படி?
ஒட்டுமொத்தமாய் எனக்குப் புரிவது ஒன்றுதான்.
என்னைத்தெரியாத எனக்குள் நான் இருக்கிறேன்.
உங்களைத் தெரியாத உங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்.
நானாக எனக்குள்ளே இருக்கிற நானும்-நீங்களாக உங்களுக்குள்ளே இருக்கிற நீங்களும்
நம்மை நாமே புரிந்துகொண்டுவிட்டால் போதும். நமக்குள்ளே இருக்கிற நாங்கள் மனிதர்கள்
என்பது புரிந்துவிட்டால்-
நாங்கள் யாரென்பதில் நமக்குள்ளே முரண்பாடு இல்லை.
„நான்“ என்று நீங்கள் நினைக்கிற „நீங்களும்“
„நான்“ என்று நான் நினைக்கிற „நானும்“
ஒரேவிதமானவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய சங்கதிதானே?
(பிரசுரம்: பூவரசு முதல் இதழ்-1991 தை)