சினம்கொள் – ஈழ கதை சொல்ல எம் இயக்குநர்களால் தான் முடியும்
இன்று ஞாயிற்றுக்கிழமை (March 31, 2019) கனடா டொரோண்டோவில் அமைந்துள்ள Woodside சினிமாவில் சினம்கொள் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும், படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார்கள்.
அரவிந்த் மற்றும் நர்வினி டெரி நடித்துள்ள இந்த ‘சினம்கொள்’ திரைப்படம் 2009இற்குப் பின்னரான, பின் யுத்த காலத்தில் (post war), முடுக்கிவிடப்பட்ட சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவன் எதிர்கொள்ளும் வாழ்வியல் போராட்டம் பற்றிப் பேசும் திரைப்படமாகும்.
சிங்கள அரசின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளி ஒருவன், தன் குடும்பத்தையும் தன் தாய் நிலத்தையும் தேடும் பயணம்தான் `சினம்கொள்‘.
இனப் படுகொலைக்குப் பிறகான ஈழ மக்களின் போராட்டத்தை வாழ்வியல் தாகத்தை எடுத்துரைக்கும் இத் திரைப்படம் திட்டமிட்ட – நுணுக்கமான இன அழிப்பு, தாய் நிலத்திற்கான இடையறாத வேள்வி முதலியவை குறித்தும் சித்தரிக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைக் கலாசாரத்திற்கு எதிரான – தமிழ் நில பண்பாட்டுச் சிதைப்புக்கு எதிரான, நாயகனின் சினம், ஈழ மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு போராளி இயக்கத்தின் வெஞ்சினம்.
இந்தத் திரைப்படத்தில் வரும் அழுத்தமான கதா பாத்திரங்கள், ‘வாழ்வதும் ஒரு இலட்சியப் போராட்டமே’ என்ற ஒழுக்கத்தில் இருக்கும் இன்றைய ஈழத்தின் வலிமையை சொல்கின்றன.
கனவும் வடுக்களும் மிகுந்த முகங்களும், அனல் கனலும் நிலமாக நீளும் ஈழமுமாய், உலகின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் குரலாய் அமையும் இத் திரைப்படம், ஈழத்திலிருந்து வெளிவரும் உலகத் தரமான ஒரு திரைப்படைப்பாகும்.
ஈழ, இலங்கை, தமிழக, இந்திய, கனேடிய, புலம்பெயர் நாடுகளின் கலைஞர்களின் கூட்டுத் தயாரிப்பான இத் திரைப்படம் முழுக்க முழுக்க ஈழத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் படமாக்கப்பட்டுள்ளது. நிஜ ஈழ நிலத்தை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.
ஈழப் பிரச்னையைப் படமாக்க முயன்ற பல இயக்குநர்கள் அதில் தோல்வியையே கண்டனர். இதில் முதன்மையானவர் மணிரத்னம்.கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சில பாடல்களிலும் காட்சிகளிலும் அழத் தூண்டியிருந்தாலும் ஈழ விடுதலைக்கும் ஈழப் போராளிகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது அந்தப் படம்.
சில படங்கள் ஈழம் தொடர்பான தவறான புரிதலையே ஏற்படுத்தியுள்ளன. `உச்சிதனை முகர்ந்தால்’ மிகையான துயரத்தையும் அனுதாபத்தையும் கோரும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. உண்மையில் எங்கள் கதையை எங்களால்தான் சொல்ல முடியும் என்பதற்கு “சினம்கொள்” சிறந்த உதாரணமாக அமைகின்றது.
இதுவரை ஈழவிடுதலை, போராட்டம், மக்களின் வலி என்றவகையில் சினம்கொள் தனது பணியை திறம்பட செய்துள்ளதுக்கு இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அனைவராலும் கொண்டாடப்படவேண்டியவர்.
இந்த நூற்றாண்டில் நாங்கள் சந்தித்த மிகப் பெரும் இனப்படுகொலை ஈழ இனப்படுகொலை. இதனுள் எண்ணற்ற கதைகள் உண்டு. அதைச் சொல்ல ஈழத் திரைப்பட இயக்குநர்களால் தான் முடியும். அதன் புதியதொரு தொடக்கமாக சினம்கொள் அமைகின்றது என்றால் மிகையாகாது.’
அண்மையில் சினங்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.