வாழும் போதே ஒரு மனிதனின் வாழ்தலைக் கொண்டாடி விடுவது தான் அழகான வாழ்வியலாகும்.
அன்ரன் அண்ணாவுக்கு இன்று மட்டுமல்ல என்றைக்குமே நாங்கள் செல்லப் பிள்ளைகள் தான். இயக்கம் போராட்டத்துக்கு எந்தளவு முக்கியத்துவும் கொடுத்ததோ அதே போல் முக்கியம் கொடுத்த துறைகளில் பிரதானமானதில் ஒன்று விளையாட்டுத் துறையாகும். அதில் முக்கிய பதவியில் இருந்தவரில் அன்ரன் அண்ணாவும் ஒருவர்.
எமது மருத்துவக்கல்லூரியில் சத்தியா டொக்ரரால் ஆரம்பிக்கப்ட்டிருந்த மென்பந்து அணியானது அவர் பணிக்காகச் செல்லும் பொது அமுதன் டோக்ரர் வருகிறார். அவர் வந்ததும் கடினப்பந்து அணியாக மாற்றப்பட்ட எமது அணியானது கல்விக்கும் பணிக்கும் என ஒதுக்கி வைத்திருந்த 18 மணித்தியாலத்தில் இருந்து 2 மணித்தியாலங்களை விளையாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
அந்நேரம் கிளிநொச்சியில் ஜாம்பவான்கள் என்றால் யாழ் சென்றலின் ஆரம்ப பந்து வீச்சாளர்களைக் கொண்ட இளந்தென்றல் அணியாகும். முல்லைத் தீவில் சென்யூட் அணியாகும்.
தமிழீழத்தில் மிகப்பெரும் போட்டித் தொடராக அறிவிக்கப்பட்டிருந்த கேணல் சங்கர் ஞாபகார்த்த ஒருநாள் போட்டியின் அரையிறுதியில் சென்யூட் அணியை எதிர் கொண்ட நாம் 169 க்கு தகர்க்கப்படுகிறோம். ஆனால் 9 பந்து வீச்சாளர்களை கொண்டிருந்த எமது அணியானது 141 ஓட்டங்களுக்குள் அவர்களைச் சுருட்டிக் கொண்டாலும் எமது நிலை பயிற்சியாளர்களான அமுதன் டோக்ரர், சுஜந்தன் டொக்ரர், வாமன் டொக்ரருக்கு கடும் கோபத்தையே கொடுத்திருந்தது. அணித்தலைவரான என்னை திட்டு திட்டென்று திட்டியும் அவர்கள் கோபம் அடங்கவில்லை. காரணம் அந்த ஒரு சில மணித்தியாலத்துக்குள் பயிற்சிக்கென எல்லோரும் கடும் சிரத்தை எடுப்போம்.
முடிவு – ஒரு ஞாயிறு அரையிறுதிப் போட்டியில் வெல்கிறோம் அடுத்த ஞாயிறு இறுதிப் போட்டியாகும். வென்ற போட்டியை தொடர்ந்து யாரும் மைதானத்தை விட்டுச் செல்ல அனுமதிக்கவில்லை தேவையான உடைகளும் நூலகத்தில் இருந்து புத்தகங்களும் மட்டும் வழங்கப்படுகிறது. உடைகளும் நாம் வீதிக்கு இறங்க முடியாதளவுக்கு பழைய ஆடைகளாகும்.
இறுதிப் போட்டிக்கு சீருடை மட்டும் தரப்படும் போட்டி முடியத் தான் மைதானத்தை விட்டு வெளியே வரலாம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் அந்தப் 15 பேரையும் ஒப்படைத்தது முத்தவெளி மைதானத்தில் அமைந்திருந்த தமிழீழ விளையாட்டுத் துறையில் இருந்த அன்ரன் அண்ணாவிடம் தான்.
அன்பும் கண்டிப்பும் மிகுந்த ஒரு மனிதர் நல்ல ஒரு ஆசானாக அறியப்பட்டிருந்தாலும் அவரது ஆளுமையும் வியக்கத்தக்கது. அந்தப் பயிற்சிக் காலத்தில் தான் முகமாலையில் முன்னேறிய இராணுவம் 27 பேரது சடலங்கள் முத்தவெளிக்கு கொண்டு வந்தார்கள். ICRC வந்து எடுக்கும் வரை இரண்டு இரவுகள் அங்கு இருக்க வேண்டியிருந்தது. இரவில் நாய் தின்னாமல் காவல் இருக்க வேண்டிய பொறுப்பையும் எங்களிடமே தந்து விட்டு இடையிடையே அவர் வந்து விட்டுச் செல்லும் நக்கல்களும் மிகவும் சுவாரசியமானதாகவும் இருக்கும். பெரிதாக மூச்செடுத்துச் சிரிக்க முடியாத அந்த மணத்துக்குள்ளம் சிரித்துக் கொள்வோம்.
போரின் பின்னான தொடர்ச்சியில் அவரது மூத்தவனான சன்சிகனும் எனது திரைக்குழுவில் தொடர்ந்து பயணித்ததால் அவர் தொடர்பான உறவுத் தொடர்ச்சி இன்னும் நெருக்கமாகியது.
உங்களிடம் கற்பதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது அன்ரன் அண்ணா.
தங்கள் தேக ஆரோக்கியத்துடன் இன்னும் பல ஆண்டுகள் எங்ளோடு பயணிக்க இறைவனை வேண்டுகிறேன்