பனிமலைச் சாரலில்
பயணிக்கும் வாழ்வில்லை
வெடிமலை மேட்டில்
உயிருக்கான வாழ்வு
இடிந்து நொருங்கிய
என் தேசத்து பிளவுகளில்
எழுந்து வந்த கீற்றுக்களில்
நானும் ஒருத்தி
பூக்களின் மடலில்
புணர்வுகொள்ளும் வண்டல்ல
தேசத்தை காக்க
புறப்பட்ட புதுமை
தீப்பிளம்பில் தீர்ந்துவிடும்
தேகமல்ல இந்தவுடல்
தீயை ஏற்றியாவது
தீர்வு காண என்னும் பாவை
வண்ணக்கோலம் இட்டு
வடிவு பார்க்கும் மங்கையல்ல
மரணத்தை எதிர்பார்க்கும்
மானமுள்ள தமிழச்சி
பட்டுச்சேலையில் உடலில்
தரித்துப் பார்த்ததில்லை
என் தாய்நிலமோ அம்மணமாய்
எனக்கேது பகட்டு ..
இன்னொரு உயிரை
ஈன்றெடுக்கப் போவதில்லை
இருப்பவர்களையாவது காப்பேன்
என்னுயிர் கொடுத்து ..
எவ்வளவு நீளமான பயணமோ
இறுதிவரை நகர்கிறேன்
குருதி கொதித்து தமிழுக்காய்
சிறு உயிர் மௌனிக்கும் வரை..
_பாமினி_