ஒரே ஒரு கவிதையாவது
எழுதிட வேண்டுமென
நின் காதோரம் கிசு கிசுத்தேன்
என் நீண்டநாள் ஆசைதனை..
வல்லினம் இல்லா மெல்லினம் நீயென
வாய்மலர்ந்து இடைபுகுந்த நீ
இலக்கணமும் இலக்கியமும்
இதமாக சொல்லிக்கொடுத்தாய்..
இதழ்சுமந்த என் மொழி மறந்து
பொய்யாமொழி வள்ளுவனாய் நீ
மொழிந்த வார்த்தைகளில் அந்த
கம்பன் கூட மெய்மறந்திருப்பான்…
சந்தமே நின் சுவாசம் என அறியாது
காந்தப்பார்வையாலே எதுகைமோனை
எடுத்து வரி சமைத்தாய் அதில்
எழுதாத காதலை புதைத்துவைத்தாய்..
உவமானம் உவமேயம் நவின்று
உவமைகளற்ற உன்னழகை
உரைத்திட தயங்கின உத்தமன் நீ
மரபும் புதுக்கவிதையும் எனக்கு
நீதானே என ஏன் சொல்லித்தர
மறந்தாய்…?
ஆக்கம் ரதிமோகன்