பிறந்தது முதல் கொண்டு வாழும் நிமிடம் வரையில் வாழ்க்கையென்பது இனிமையானதாக இருப்பதில்லை.
ஒவ்வொரு படிநிலைகளும் ஓராயிரம் அனுபவங்களை கற்றுத்தர காத்திருக்கின்றன.
எனது சிறுவயது நினைவுகளை பதிவாக்கிய வயது மூன்று.
மூன்று முதல் மகிழ்ச்சி என்பதைக்கடந்து அனுபவத்தை பதிவாக்கிய நினைவுகளே அதிகம் என்பேன்.
பதினொரு வயதில் சிறு கிராமத்தை துறந்த நான் திருகோணமலை பட்டணத்தில் „புணிதமரியாள் கல்லூரி „விடுதி மாணவியானேன்.
புதிய முகங்களும்,உறவுகளும்,புதிய பழக்கவழக்கங்களும் மாணவியாகிய எனக்கு கல்வியை விட கடிணமாகவே தெரிந்தன.
ஒரு கெட்டதிலும் பல்வேறு நல்லதை பதிவாக்கிய புணித இடம் விடுதியே!
பாவம் செய்யாத மனிதருமில்லை.
பாவத்திலிருந்து விடுபட எண்ணாத மனிதருமில்லை.
பாவத்திலிருந்த மனிதனை மன்னிக்காத கடவுளும் இல்லையென .
கற்றுக்கொடுத்த மதிப்பிற்குரிய அதிபர் .அருட்சகோதரி திரேஸ்ராணி அவர்களை இந்த நிமிடம் வரையில் நான் மறக்கமுயற்சிக்கவில்லை.
ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு பிற்பாடு அவரோடு பேசுகின்ற வாய்ப்பினை காலம் மகிழ்ச்சியாகத் தந்தது.
அவரிலிருந்து பிரிக்கமுடியாத புன்னகையும் ,தெளிவான பேச்சும் என்னை மீண்டுமொரு மாணவியாக்கி மகிழவைத்தது.
பெண் என்பவள் …….
அன்பானவள்,அமைதியானவள்,அறிவானவள்,அதையும் கடந்து ஆளுமையானவளாக வாழவேண்டுமென கற்பித்த குரு,மாதா,பிதா அவர்.
சுத்தம் முதற்கொண்டு,சுறுசுறுப்பு,திட்டமிடல்,விடாத முயற்சி,பிறருக்கு உதவுதல்,நல்லதை பதிவாக்குதல் இப்படி அவரிடமிருந்து கற்றவை எண்ணற்றவை.
புணிதமரியாள் கல்லூரியில் அதிபராக இருந்த போது சிங்கள ஆமி முதற்கொண்டு யாவரும் எங்கள் பள்ளி மதிலை தொடவும் யோசிப்பர்.அந்தளவுக்கு நிமிர்ந்த நடையும் ,நேர்கொண்ட பார்வையும் உள்ள தைரியப் பெண் அவர்.
சிங்களவர்,தமிழெரென இருந்த கலப்படக் கல்லூரி தனித்தமிழ் மாணவிகள் கல்லூரியானது.
சிங்கள ஆமிக்கு அஞ்சி தமிழனாகப் பிறந்த பல இளைஞர்களும் ,யுவதிகளும் ஜேசுபிரானின் மண்டபத்தில் உறங்கிய நாட்களையும் நானறிவேன்.
இன்றும் ஓய்வை விரும்பாது தமிழ் மொழியை ஆக்கிரமிப்பச் செய்யும் சிங்கள மொழிக்கு எதிராக பணிபுரிறார்.
தமிழ் மொழிக் கல்வி குறித்து விழிப்புணர்வற்ற பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தனது சேவையை வழங்குகின்றார்.
அதாவது தமிழ்மொழியை கற்றுக்கொடுக்கிறார்.இதற்காக பகுதி நேர வகுப்புக்களை ஒழுங்கு செய்ததுடன் உதவி ஆசிரியைகளையும் நியமித்து சேவைபுரிகிறார்.
இந்த ஆசிரியைகளுக்கான ஒரு சிறுதொகை கொடுப்பனவை எமது கல்லூரி மாணவி ஒருவர் மாதம் மாதம் அனுப்பிவைக்கிறார்.
அவரது பெயர் நிரோமி..(பெயரிலில் தவறு இருப்பின் குறிப்பிடவும்.)
தமிழை அழிக்க நினைக்கும் அரசின் மறைமுக ஆக்கிரமிப்பை எதிர்த்து அகிம்சை போர் புரிகிறார் எனலாம்.
வளரும் தலைமுறையினரான மாணவர்களிடம் தமிழை மறவாத கல்வியை கொடுக்க வேண்டுமென திட்டமிட்டு தமது சேவையை ஏதோவொரு விதத்தில் நிலைநாட்டும் அதிபரை மாணவிகளாகிய யாவரும் மதிப்போடும் மகிழ்வோடும் வாழ்த்துவோம்.
„மேன்மேலும் பொருளாதார தேவை வறிய மாணவர்களுக்கு உண்டெனவும்,ஏழ்மை கல்விக்கு சாபக்கேடாக மாறவும் கூடாதென்றார்.“
மனதில் பதிவாகிய வார்த்தை
மூளையை கசக்கியது.
புணிதமரியாள் கல்லூரியில் கல்வி கற்ற மாணவிகளில் பலர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்றோம்.
வறிய தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நாமேன் சிறு தொகைப் பணத்தை அதிபரின் தலைமையில் கொடுத்து உதவக்கூடாது.?
எனது யோசனையில் திருப்தி உடையவர்கள் அறியத்தாருங்கள்.!
*நேரடியாக அதிபரோடு தொடர்பு கொண்டு உதவிசெய்யலாம்.
*இலட்சங்கள் வேண்டாம் ஆயிரங்கள் மட்டுமே!(ஐயாயிரம் முதல்…)
*மேலதிகமானவர்கள் முன்வந்தால் ஒருவரது உதவி வருடம் ஒருமுறை மட்டுமே!
„வாழ்ந்தோம் என்பது யாவரும் சொல்வது வாழவைத்தோம் என்பது ஒரு சிலரே செய்வது.ஆனாலும் இறப்பின் விட்டுச்செல்லும் அடையாளம்.“
குறிப்பு-குரு வாழும் போது குருதட்சணை செய்வோம் .அவருக்கல்ல ;
அவரால் இந்தவயதிலும் முன்னெடுக்கப்படும் சேவைக்கு.??
நன்றி!
வாணமதி(மதி)