என் அன்புக்குரியவளாய் அமையவிருப்பவளே..!
அகவுதிரமூட்டி எனை மலர்த்திய அன்னையே..!
அடியேனின் பகிரங்க மடலிது உங்களுக்காக
ஆழ்மனதிலிருந்து எழுதுகின்றேன்
அலட்சியம் செய்து எனை அவமதிக்காதீர்கள்.
வீரவம்சமதின் தொட்டிலில் நான் விழித்தபோதிலே
புக்காராக்களின் சந்தத்தை தந்தது என்தவறா..?
வீதியில் பாலகனாய் ஏற்றிச்சென்று ஊர்காட்ட
வேங்கைகளோடு எனை பழக்கியது என் தவறா..?
உணர்வுதிறந்த பெருநெருப்பு யாகக்காட்டில்
கனவுதேசம் கண்ட காவியத்தை புறந்தள்ளவா..?
என் வீட்டுச்சுவரில் புலிக்குட்டியுடன் ஒரு அழகன்
தலைவர் இவர் என்று நீங்கள் தானே ஊட்டினீர்கள்.
கார்த்திகையில் என் பிறந்தநாள் அமைந்ததென்று
பெருமைகொண்டதும் வலிமைதந்தும் நீங்களே..
மலரெடுத்து மாலைகொடுத்து மாவீரச்செல்வங்களை
வணங்கச்சொல்லித் தந்ததும் என் வீடும் ஊரும் தான்.
என் பள்ளிச்சுவர் மீதிலே தமிழீழப்படம் வரைந்து
இது என் நாடு என்று புகட்டிய என் ஆசான்களே..
இன்றுவுங்கள் மௌனங்களை கலைத்துவிட்டு வாருங்கள் என்னுடன்..அடையாளத்தைத் தேடுவோம்
கிட்டுமாமா, திலீபன் அண்ணா, கரும்புலிகள் தினம்,
பன்னிருவேங்கைகள் நாள்,அன்னை பூபதி நினைவு..
ஒன்றா இரண்டா நிகழ்வுகள்.அத்தனையும்
அடிநெஞ்சிலிருந்து நாம் செய்தவையல்லவா..?
கவிதை,கட்டுரை, மேடைப்பேச்சு,வில்லிசை என
அத்தனை கலைகளிலும் எமை வளர்த்த புகழ்
இந்த சூரியக்கீலங்களின் தியாகத்தினருகிலல்லவா..
எப்படி மறந்துவிட்டு இயல்பாக இருக்கச்சொல்கிறீர்.
அன்று நான் வில்லெடுத்து மேடையேறுகையில்
தோரோடும் வீதியிலே திலீபன் என நான் இழுக்க
நீர்சொரிந்த கண்களுக்கு காவலிடப்பட்டிருக்கிறதா..
தட்டித்தந்த கரங்களே நிரந்தர உறங்குநிலையா..?
நுண்கலைக்கல்லூரி எனும் நாமமேந்தியபடி
ஊர்தோறும் கலைக்கூடங்கள் எங்கள் நாட்டில்..
பட்டம் படிக்காத பகுத்தறிவு மேதாவி மருத்துவர்கள்
திலீபன் நாமமிட்ட இலவச மருத்துவச்சாலைகள்
ஆங்கிலத்தில் புலம்பித்திரியாத தூயதமிழ்க் காற்று
மகிழுந்து,பேருந்து, வெதுப்பி,நடத்துனர்,என
தமிழன்னை சிம்மாசனம் கண்ட பொற்காலம்
பெயர்பலகைகள் எல்லாம் தமிழிலே வரவேற்கும்.
பணத்தின் செல்வாக்கு செல்லுபடியாகாது..ஆனால்
பசியில் யாரும் இறந்ததுமில்லை– என் தேசத்தில்
பாதையோரத்தில் எவரும் பிச்சை கேட்டதுமில்லை
தன்னிறைவுப் பொருளாதாரம் தாராளமாயிருந்தது
ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது..பிரபாகரனென்றிடும்
காவிய நாயகன் போற்றிடும் கொடியிது..
சிறுபராயம் முதலறிந்த தேசியகீதமிது.
பள்ளி ஊட்டியதை என்னால் கிள்ளி எறிய முடியுமா..?
ஒவ்வொரு காலையிலும் பாடசாலையின்
அண்ணனின் எண்ணக்கருவை உரக்க உரைத்து
உறுதிமொழி எடுத்தோமே மனநிறைவுடன்
எப்படி எட்டு ஆண்டுக்குள் மறந்துவிடுமென கருதுவீர்
மெனிக்பாம் முகாமதில் அகதியாய் இருந்த போதே
ஏதோ ஒன்றை தேசிய கீதமென்று ஒலித்தார்கள்.
இன்று அரச பணியிலிருக்கும் எம்முறவுகளே
தேசியகீதமெனும்போது எம்கீதம் நினைவிருக்கிறதா
நிகழ்வுகளில் அகவணக்கமெனும் போது–எம்
அக்கினிப் புதல்வர்களையே அகம் நினைக்கும்
மங்களவிளக்கேற்றுகையில் ஈகைச்சுடர்
துலங்காமலிருக்க வாய்ப்பில்லை உமக்கு..
சோககீதம் ராகமிசைக்க வீதியில் வரும் ஊர்தி
கைகூப்பித்தொழுத மாவீரர் துயிலிடங்கள்
இரத்தவாற்றில் மூழ்கிக் கிடைத்த வெற்றித்திளைப்பு
இரவில் சாந்தன் இசைக்குழுவில் சனத்திரள்
வானொலியே பொழுது போக்கு அதிகமானோருக்கு..
யோகேந்திரநாதன் ,வளவைவளவன்,கொற்றவை
முற்றுமாய் தூய தமிழோடு உறவாடும் கலைஞர்கள்
புரட்சிப்பாடல்கள் புத்துணர்வுச் சத்துமருந்து
கோவில் திருவிழாக்களில் பண்பாடு விழித்திருக்கும்
கோமாளிகளின் கேளிக்கைகளுக்கு விலங்கிருக்கும்
வீதிகளில் செம்புமுதி மணம் கமகமக்கும்
வெளிச்சமற்ற இருட்டுகளே எமக்கு காவலிடும்
எங்கள் நீதிமன்றங்களுக்கு நிதி தேவைப்படாது
சட்டத்தில் வளைவு நெளிவுகள் கிடையாது
குற்றத்திற்கு மன்னிப்பும் கிடையாது
சுற்றத்தில் தவறுகளும் கிடையாது
காவல் துறைக்கு லஞ்சம் கொடுத்து அறியோம்
யார் தவறிழைத்தாலும் வட்டுவாகல் அழைக்கும்
சாதி மதபேதம் மறத்ததாய் உணர்ந்த யுகமது
உயிரின் மதிப்பொடு மனிதாபிமானக் காலமது
ஊனமுற்றவரென்று யாரும் உடைந்துபோகவில்லை
விளம்பரமிடலுக்கு வேலியும் நீண்டிருந்தது
வரதட்சணைக் கொடுமைகளில் வாழ்விழக்கவில்லை
வட்டித்தொழிலால் தற்கொலைகளோ இல்லை
பச்சை உடையோடு பவனிவரும் வீரர்களின்
தீரத்து அழகைப் பாடித் தீர்ப்பேனா வாழ்நாளில்
தோட்டாக்களின் நடுவே சீறும் வேங்கைக்கொடி
சோழவீரப் பிரதாபத்தின் விம்பமான தமிழர்கொடி
ஒரு இனத்தின் முழுமைபெற்ற தேசத்தையே சதியால்
சரித்துவிட்ட பிரபஞ்சம் இன்று வாழ்வியல் பற்றி
வக்கணையாய் பேசுவது விலிக்கவில்லையா..?
எம்மினத்தில் சில இழிபிறப்பு ஈனர்களும்
இணைந்து ஏமாற்றுவதை உணரவில்லையா..?
தமிழனுக்கு நிரந்தரத் தலைவன் ஒருவனே
இருக்கிறாரா.¡இல்லையா..¡ கேள்வி வேண்டாம்
வானத்திரை கிழித்து யுகமொன்று கண்டவனுக்கு
நந்திக்கடல் நங்கூரமிடுமா..? கலங்காதே
அவன் ஆண்ட பூமியில் யாரோ நடிகர் தலைவராம்
கபாலம் கலங்கிப் பிதற்றாதீர் சிற்றர்களே
உங்கள் சினிமாவுணர்வை நான் சீண்டவில்லை
தலைவர் எனும் சொல் தமிழனின் உயிராத்மா.
அன்று ஒருவன் முகநூலில் சினிமாக்காரனுக்கு
வரியுடையிட்டு ஆளப்போறான் தமிழன் என்கிறான்.
அட முட்டாள்களே. வரியுடை போடத் தகுதி தேவை
புனிதங்களை போற்றாவிடினும் அவமதிக்காதீர்.
நான் கோபப்படுவதும் ஆதங்கப்படுவதும் சிலருக்கு
எரிச்சலூட்டியிருக்கக் கூடும்– இலவச ஆலோசனை
யதார்த்த நீரோட்டத்திற்குள் என்னை வரட்டாம்.
போங்கடா நீங்களும் உங்கள் யதார்த்தமும்
மானங்கெட்ட மடையர்களுக்கு சினமிருக்குமா..?
அம்மா நீங்கள் அச்சப்படுவதன் அர்த்தம் அறிவேன்.
ஆனாலும் நாம் இன்று விழிக்காவிடில்– நாளை
எம் தெருக்கோடிகள் மட்டுமல்ல
கருப்பைகள் கூட களவாடப்பட்டிருக்கும்
உன் பேரனுக்கோ பேத்திக்கோ உன் மொழி
புரிகின்ற பக்குவமில்லாது போயிருக்கும்
எம்மூரின் ஆரசமரங்களுக்கு மட்டும் புத்தன் கட்டாய
படையெடுப்பு செய்தானென நினைக்கிறாயா..
காவியணிந்த அவனின் காவாலிக் கப்பிகள்
புளியம் மரத்தைக்கூட விட்டுவைக்கார் அம்மா.
எட்டு ஆண்டுகளுக்குள் எவன் மறப்பான்
அதற்கு ஒரு பெரும் யுகமே போதாது..
அடிநெஞ்சில் சுமந்து வாழும் உள்ளங்களின் தவிப்பு
அடியேனுக்குப் புரியாமலில்லை
வம்சத்தின் வீர வரலாறை ஊட்டுங்கள் வீடுகளில்
மறக்கப்பட முடியாததை பதிவுசெய்யுங்கள்
ஆண்ட எம் சோழக்கொடி மீளும் வரை
உடல் சிதைந்தாலும் என் உணர்வாத்மா
விழித்திருந்தாக வேண்டும்.