புலம்பெயர் கவிஞன் அனாதியன் எழுதிய இரு கவிநூல்கள் 29.10.2017வெளியீயிடப்பட்டது

மல்லாவி மண்ணில் அரங்கேறிய புலம்பெயர் கவிஞன் அனாதியன் எழுதிய இரு கவிநூல்கள் வெளியீட்டு விழா.

புலம்பெயர்ந்து இங்கிலாந்து தேசத்தில் வசிக்கும் ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த அனாதியன் என்கின்ற மார்க் ஜனாத்தகன் எழுதிய இரண்டு கவிதை நூல்களான ‚மனித விலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து‘ மற்றும் ‚சீயக்காய் வாசக்காரியும் சில்வண்டுக் காதலனும்‘ ஆகியவற்றின் வெளியீட்டு விழாவானது 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மல்லாவி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் கம்பீரக் குரலோன் சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார்.

முன்னதாக கலாசார நிகழ்வுகளோடு விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். ஆரம்ப நிகழ்ச்சிகளை யோ.புரட்சி தொகுத்தளித்தார். சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்மொழி வாழ்த்தினை மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகள் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை கலாநர்த்தனாலய மாணவிகள் வழங்கினர். தொடர்ந்து வரவேற்புரையினை அம்பாள்குளம் தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி பிரகலாதன் விஜயலலிதா வழங்கினார். ஆசியுரையினை சிவாகம கலாநிதி பிரபா குருக்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து இங்கிலாந்து தேசத்திலிருந்து நூலாசிரியர் அனாதியன் அனுப்பிவைத்த காணொளி ஒளிக்கவிடப்பட்டது. நிகழ்வில் கவிஞர் அனாதியனை வாழ்த்தி டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி முகாமையாளர் பண்பலை வேந்தன் ரி.எஸ்.முகுந்தன், ரியூப் தமிழ் இலங்கை இயக்குநர் இளம் தொழிலதிபர் கம்பிகளின்மொழி பிறேம், மல்லாவி மத்திய கல்லூரி அதிபர் சு.யேசுதானந்தர், நூலாசிரியருக்கு கற்பித்த ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் நிக்சன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறிமுக உரையினை மூத்த எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன் ஆற்றினார். வெளியீட்டுரையினை கனடா படைப்பாளிகள் உலகம் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் நிகழ்த்தினார். கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்களின் சிறுகவியுடன் வெளியீடு இடம்பெற்றது. ‚மனித விலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து‘ கவிதை நூலினை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட‌ பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்கள் வெளியிட்டு வைக்க, வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வி.கமலேஸ்வரன் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார். ‚சீயக்காய் வாசக்காரியும் சில்வண்டுக்காதலனும்‘ கவிதை நூலினை மல்லாவி மத்திய கல்லூரி அதிபர் சு.யேசுதானந்தர் வெளியிட்டு வைக்க கனடா படைப்பாளிகள் உலகம் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார். இரு நூல்களும் சமநேரத்தின் வெளியிடப்பட்டன. தொடர்ந்து யாவர்க்கும் நூல்கள் வழங்கப்பட்டன.

‚மனித விலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து‘ கவிதை நூலின் ஆய்வுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். ‚சீயக்காய் வாசக்காரியும் சில்வண்டுக் காதலனும்‘ நூலின் ஆய்வுரையினை கவிஞர் காவ்யபிரதீபா வன்னியூர் செந்தூரன் நிகழ்த்தினார். ஈழத்தின் இளம் பாடகர் கோகுலன் சாந்தன் அவர்களின் பாடலும் நிகழ்வில் இடம்பெற்றது. நிகழ்வில் இரு மாணவர்களுக்கான‌ கற்றல் உதவிகளும் நூலாசிரியரினால் அளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட‌ பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்கள் முதன்மை விருந்தினர் உரை ஆற்ரினார். மற்றும் மூத்த எழுத்தாளர் சோ.பத்மநாதன் சிறப்புரை வழங்கினார். வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வி.கமலேஸ்வரன் அவர்கள் அரசியற் பிரதிநிதியாக கலந்துகொண்டு தன் கருத்தினை அளித்தார்.

நன்றியுரையினை நூலாசிரியரின் தாயார் திருமதி ஜெகதீஸ்வரன் விஜயலட்சுமி வழங்கினார்.

மார்க் ஜனாத்தகன் என்ற அனாதியன் அவர்கள் கடந்த வருடம் ‚ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்‘ எனும் கவிதை நூலினை வெளியீடு செய்திருந்தார். முகநூலில் ‚அனாதியன் கவிதைக்களம்‘ எனும் எனும் கவிதைப் பக்கம் ஒன்றினையும் இவர் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய நாளில் ஈழத்து இலக்கியத்தில் இவ்விரு கவிதை நூல்களும் தம்மையும் இணைத்துக்கொண்டுள்ளன.