ச.தில்லைநடேசனின் வட்டுக்கோட்டை அரங்கமரபு எனும் அரங்கியல் ஆய்வுநூல் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழர்களின் தேசியக் கலையாகவும் பாரம்பரிய தமிழர் கலை அடையாளமாகவும் விளங்குகின்ற
கூத்து ஈழத்தில் பல்வேறு பிரதேசங்களில் பல வகைகளில் நிகழ்த்தப்படுகின்றது.
அப்பிரதேசங்களில் ஒன்றாக இருக்கின்ற வட தமிழீழத்தின் வட்டுகோட்டைக் கிராமத்தின் கூத்து மரபினை இந்த நூல் ஆய்வு செய்திருக்கின்றது.
வாய்மொழி தகவல்களின் அடிப்படையிலும், சான்றுகள் அடிப்படையிலும் தான் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக ஆக்கதாரி ச.தில்லைநடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடகரும், உடல் அரங்க ஆய்வு சஞ்சிகையின் ஆசிரியருமான ம.அரியநாயகம் அவர்கள் இந்நூலின் வெளியீட்டு அரங்கின தலைமை தாங்கி நடாத்தினார்.
ஆய்வாளர்களான மு.நித்தியானந்தன், பால சுகுமார் மற்றும் எழுத்தாளர் அரவிந் அப்பாத்துரை ஆகியோர் நூல் தொடர்பிலான மதிப்பீடுகளை முன்வைத்தனர்.
கலை, இலக்கிய, சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் என பலரும் பங்கெடுத்திருந்த அரங்கு நிறைந்த நிகழ்வாக இது அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.