வீதியிலே எறிந்தாலும்
வெள்ளைக் காகிதம் நான்
விற்றுப் பிழைக்கவில்லை
நான் தோற்றுப் போகவுமில்லை
காற்றும் மழையும் தான்
என் கதையைப்
பொறுமையுடன் கேட்கும்….
வயிற்றுப் பசியில் நான்
வெறும் வாயை மென்றாலும்
வீம்புக்கு போவதில்லை
வாழ்க்கை என்னைக்
கொண்டு சென்ற
கரடு முரடான பாதைகளில்
நான் கண்ட
கரும்பாறைகள் போல்
என் மனமும் கல்லாகிவிட்டது…
வேரும் விழுதும்
மண்ணிற்குத்தான் சொந்தம்
அதை யாரும் இதுவரையில்
அறியாமல் இருந்ததில்லை
கொண்டு வந்த கர்மாவை நான்
கொஞ்சம் கொஞ்சமாய் என்
காலத்தில்
கரைக்கின்றேன்
நண்டுபோலத்தான் நான்
நடக்க நேர்ந்தாலும்
நடுத் தெருவில்
என் உயிர் சோர்ந்து வீழ்ந்தாலும்
வகுத்தவன் என்னை
வாவென்று அழைக்கும்வரை
இது தான் என் பாதை
இடரில்லாப் பயணம்…..
.
.
அருள் நிலா வாசன்