“நாளை நமதே! நாளை நமதே!”
-இது நம்பிக்கையின் வெளிப்பாடு.
-இன்றைய கடமைகளைச் சரியாக நிறைவேற்ற வேணடும் என்ற உந்துதலைத் தருவதற்காய் உரைக்கப்படும் உற்சாக வார்த்தைகள் அவை.
“நாளை நமதே!”
-நமக்கு முன் வாழ்ந்தவர்கள் சொன்னார்கள். நம்மோடு வாழ்பவர்கள் சொல்கிறார்கள். நமக்குப் பின்வரும்
சந்ததியும் சொல்லும்.“நாளை நமதே!”
உண்மையில் இந்த நாளை என்பது எந்த நாள்?
நேற்றையப் பொழுதில் அது இன்று. இந்த நாளைத்தான் நேற்றையப் பொழுது தனக்குச் சொந்தம் என்றது.
ஆனால் இந்தப் பொழுதைச் சொந்தம் கொண்டாடிய எல்லோர்க்கும் அது சொந்தமாகியிருக்கிறதா என்றால்
இல்லை.
நேற்றையப் பொழுதில் அதைச் சொந்தமென்று சொன்ன மனிதர்கள் பலரை இப்போது காணோம்.
ஆனாலும் நாளை நமதே என்று அவர்கள் விதைத்துவிட்டுச் சென்ற காரியங்களின் விளைவுகளை இன்றைய மனிதர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதுபோலவே இன்றைய காரியங்களின் விளைவுகளை நாளைய சந்ததி அனுபவிக்கும்.
நாளை நமதே என்பது ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடு மட்டுமல்ல. மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட எண்ணங்களினதும் அவற்றின் விளைவான செயல்களினதும் தொடர்ச்சி.
நாளையில் நம்பிக்கை இழந்து விட்டால் இன்று என்பதற்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய்விடக்கூடும்.
நாளை விழிப்போம் என்ற நம்பிக்கையோடுதான் ஒவ்வொருவரும் இரவுத்தூக்கத்தில் தம்மைச் சாய்த்துக் கொள்கிறார்கள்.
ஒருவேளை அவ்வாறு விழிக்காமல் நிரந்தரமாக விழிகளை மூடிக்கொள்பவர்களும் மற்றவர்களுக்கு
ஏதோ ஒருவகையில் வாழ்க்கைப் பாடத்தைப் புகட்டிச் செல்கிறார்கள். அல்லது சில கேள்விகளை எழுப்பிவிட்டு மறைந்துகொள்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலுக்காக எழுதிய வரிகளில் சில
கேள்விகளும் பதில்களும் இருந்தன.
“வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா?
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் பிறந்து வானில் பறந்து மீண்டு வந்தான் உயிர்கொண்டு.!”
அவர் இந்தப் பாடலை எழுதிய சில ஆண்டுகளின் பின் ஒரு மனிதன் சந்திரமண்டல வாசலைத் தொட்டு
மீண்டிருந்தான்.
அந்த மனிதனின் பெயர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்.
20.09.1969 அன்று அப்பல்லோ மிமி என்ற அமெரிக்க விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.
அதில் பயணித்த மூவரில் நீல் ஆர்ம்ஸ்ரோங் முதல் ஆளாக சந்திரனில் இறங்கி காலடி பதித்தார்.
(சந்திரனில் இருந்து அவர் எடுத்து வந்த கல் உலகின் பல பாகங்களையும் அந்தக் கால கட்டத்தில் – 1969 – 1970 இல் – சுற்றிவந்தது. கொழும்பில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கல்லைப் பார்க்கும் வாய்ப்பு அப்போது என் கண்களுக்கும் கிட்டியிருந்தது.)
-மனிதனாவது சந்திரனுக்குப போவதாவது? இதெல்லாம் சும்மா ஏமாற்றுக் கதைகள் என்று அப்போதும் சிலர் கதைத்தார்கள்- இப்போதும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.!
ஆனால் சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற பெயரோடும் பெருமையோடும்தான் இன்று
நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் மறைந்திருக்கிறார்.
இனிவரும் காலங்களில் மனிதர்கள் சந்திரனில் போய்க் குடியமரும்போது அங்கு முதல் மனிதனாக
நீல் ஆர்ம்ஸ்ரோங்தான் இருப்பார்.
நீரால் பிளவுபட்ட நிலப்பரப்புக்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்துக் குடியேறிய மனிதன் இப்போது
விண்ணில் உலாவரும் கோள்களைத் தேடித்தேடி அங்கே குடியேறிவிட முயன்று கொண்டிருக்கிறான்.
நாளை அது பலித்துவிடும்