தமிழீழம் என்ற ஒற்றை
சொல்லில் நாங்களும்
எம்மை தியாகித்தவர்கள்.
எமக்கும் நா பத்தோடு
பல்லாண்டுகள் கடந்த
போர் வடுகள் இருக்கின்றன.
நாமும் அரசாண்ட எச்சங்கள்
முள்ளிவாய்க்காலில்
புதைபட்டு கிடக்கின்றன.
எமக்கும் ஒரு கொடி இருக்கிறது
எமக்கென சீருடை இருக்கிறது
எமக்கென மொழி இருக்கிறது
எங்களுக்காக உயிரை
விதையாக்கிய விதைகள்
முளைக்க தாயாராகிறது.
இவை தெரியும். நினைவில்லை.
நாம் கட்டிய வெள்ளை
வேட்டிகளே நினைவிருக்கின்றன
இப்போது எம்மிடமும்
தனி நாட்டுக்காய்
வாக்குகள் கேளுங்கள்
சர்வமும் அடங்கிய தேசமே
இப்போது புரியும் நாம்
தமிழர்கள் என்று
நாம் சிங்களத்தின்
கால்களை நக்கும் செல்ல
நாய்க்குட்டிகள் என்று
வடு சுமக்கும் வலியவர்கள்
தமிழீழம் விட்டு தூரவாக
தூக்கி வீசுவோம் என்று
தலமைகளுக்காக நாங்களே
எமக்குள் சண்டையிட்டு
சாக தொடங்குவோம் என்று
„தமிழீழம்“ என்ற தனி நாட்டை
பிழந்து நாங்களே தனித் தனிய
ஆளத் தொடங்குவோம் என்று
ஏழ்மையை துரத்தி அடிப்போம்
என வாக்கு தந்து
ஏழையரை பெருக்குவோம் என்று
காலை புலரும் என்ற
காத்திருந்தவரை
கற்றை விட்டு விலக்குவோம் என்று
வெண் வேட்டி கட்டி தமிழ்
உதிரம் உறிஞ்சும்
பெருச்சாளிகள் நாம் என்று
„டமிழ் மொலியை“ உலகாளும்
மொழியாக்கி சிங்களத்தை
அதன் முடியாக்கி மகிழ்வோம் என்று
மண் குடிசைகளை தொலைத்து
மண்ணுக்குள் வாழும் புழுக்களாய்
மக்களாட்சி செய்வோம் என்று
ஏனெனில் நாங்களும்
தமிழீழத்துக்காய் வெள்ளை
வேட்டிகளோடு தியாகித்தவர்கள்…