தட்டத்தனியாக நானிங்கு தவிப்பதாலே,
தங்கநிலவே நீயும் தந்திர நோக்குடன்,
திட்டமிட்டுத்தானோ பெண்நிலவே எந்தன்
திண்ணையின் முன் வந்து நிற்கிறாய்?
வட்டநிலவே உன்னைக்கண்டதும், எந்தன்
வஞ்சியவளின் வளைந்தநெற்றியிலுள்ள
பொட்டும் பூமுகத்தோடு, மனக்கூண்டிலே
பொத்திவைத்த பொன்னான நினைவும்
எட்டத்தொடங்கி என்னை வாட்டட்டுமே,
எனும் ஏகத்தாளமோ? நீ முன்னே வந்தது.
கட்டுப்பாட்டில் கிடந்த காதல்கனவுகளை
கலைத்து கண்ணுறக்கம் தந்தநிலவே
விட்டுப்போ நீயும் என்னைத் தனிமையில் .
விடியலுக்காய் காத்திருக்கும் வீரன் நானே .
வீரநேசன்