அண்மையில் உலகை அதிரவைத்த மற்றொரு சம்பவம்-
அமெரிக்காவின் கனெக்டிகியூட், நியூடவுன் பள்ளிச் சிறுவர் சிறுமியர் 20பேரையும் அதிபர் ஆசிரியர் உடபட 7பேரையும் என 27பேரை வெறித்தனமாகச் சுட்டுக்கொன்றான் ஆதம் என்ற 20வயது இளைஞன். இவர்களுள் இவனைப் பெற்ற தாயும் அடக்கம். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவனும் இறந்துபோனான்.
பல ஆண்டுகளுக்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்தன என்றாலும் இது தொடர்கதையாகிவிட்டிருப்:பது எல்லோரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. துப்பாக்கிகளின் பாவனையில் கட்டுப்பாடுகள் குறைந்து போய்விட்டதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படும் அதேவேளை
சீனாவில் கத்தியால் பள்ளிக் குழந்தைகளைக் குத்திப் படுகாயங்களுக்குள்ளாக்கிய மற்றொருவனைப் பற்றிய செய்தியும் வெளிவந்திருந்தது.
மத்திய சீனாவின் கென்னான் மாகாணத்தில் உள்ள செங்பிங் கிராமத்தின் ஆரம்பப் பள்ளி ஒன்றினுள் நுழைந்த ஒருவன் வெறிகொண்டவனாக அங்கிருந்த பள்ளிச் சிறுவர் சிறுமியர் 21பேரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தினான். அவனைத் தடுக்க முயன்ற பெரியவர் ஒருவரும் கத்திக்குத்துக்குள்ளானார். இதுபோன்ற கத்திக்குத்துச் சம்பவங்கள் சீனாவில் அதிகரித்து வருகின்றனவாம்.
ஆயுதங்கள் எதுவாக இருந்தாலும் அதைக் கையில் எடுப்பவனைப் பொறுத்தே காரியங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
இதுபோன்ற கொடும்செயலைச் செய்பவர்கள் எவராயினும் இறுதியாக மனநோயாளிகள் என்ற பட்டியலுக்குள் அடக்கப்பட்டு விடுகிறார்கள். கொடுமைகள் நிகழ்வதற்கு முன் அதைத் தடுப்பதற்கான வழிமுறை எவருக்கும் தெரிவதில்லை.
பாவம் பழிக்கு அஞ்சி வாழவேண்டும் என்பதைப் பாலர் பருவத்திலேயே கற்றுத்தர எல்லாச் சமூகங்களுமே மறந்துவிட்டன.
கொடுமைகள் நடந்தால் அதை எப்படித் தடுக்கலாம் என்று சொல்லித் தருவதற்கு முயல்பவர்கள்கூட, நாமும் மற்றவர்களுக்குத் தீங்கு புரியாதிருக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தர மறந்துவிடுகிறார்கள்.
எல்லாம் நடந்து முடிந்தபிறகு இதெல்லாம் அவரவர் செய்த பாவத்தின் பலன் என்று முடிவாகிவிடுகிறது.
அறிந்தோ அறியாமலோ அவரவர் செய்த பாவத்தின் பலனே இந்த மானிடப் பிறப்பு என்பதாகத்தான் பெரும்பாலானோர் புரிந்துகொண்டிருக்கிறோம்.
„என்ன பாவம் செய்தேனோ இப்படி ஒரு பிள்ளை எனக்கு வந்து பிறந்திருக்கிறானே!“ என்று பெற்றவளும், „என்ன பாவம் செய்தேனோ இவள் வயிற்றில் நான் வந்து பிறந்தேனே!“ என்று பிள்ளையும் கசந்து கொள்கிறபோது தத்தம் பாவ வினையே இது என்று பாவத்தின்மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள முனைகிறார்கள்.
உண்மையில் பாவம் என்பது என்ன?
பாவம் என்பது தீமைகளின் மறு பெயர்.
ஆசைமுதற்கொண்டு அடுத்தவர் வாழ்வை சீரழிப்பதுவரை எத்தனையோ பாவங்கள்.
இவற்றில் மிகப்பெரிய பாவங்களைப் பஞ்சமா பாதகங்கள் என்று பகுத்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்.
கொலை, களவு, பொய், மது, காமம் என ஐந்தும் மாபெரும் பாவங்கள். இவையே பஞ்சமா பாதகங்கள் எனப் படுகின்றன.
இவற்றில் ஒன்றேனும் இல்லாத ஒருமனிதனையாவது எங்கேனும் காணமுடிகிறதா நம்மால்?
எல்லாப் பாவங்களுக்கும் தண்டனை உண்டு எனினும் சில பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
மன்னிப்புக்கு அப்பாற்பட்ட கொடிய பாவம் கொலை செய்வது.
ஏனைய பாவங்களுக்கு சம்பந்தப்பட்டோர்மூலம் பரிகாரம் செய்துவிடலாம். ஆனால் கொலையுண்ட ஒருவனுக்கு கொலையாளி என்ன பரிகாரத்தைச் செய்துவிட முடியும்?
கொலையாளிக்கு மரணதண்டனையையே தீர்ப்பாக்கி வைத்திருக்கும் உலகம் அந்தத் தண்டனையின் மூலம் மற்றுமொரு கொலையாளி உருவாகாமல் தடுக்க முயல்கிறது.
ஆனாலும் கொலைகாரர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. (அடிமட்டத்திலிருந்து ஆளும்வர்க்கம்வரை எத்தனையோ கொலைகாரர்கள் மறைந்தே இருக்கிறார்கள்.)
தன்னைத்தான் உணராதவனும், தன் உயிரின் பெருமைதெரியாதவனும் பிற உயிர்களைப் பேணப்போவதில்லை. பிறவுயிர்க்குத் தீங்கு புரிபவர்கள் எல்லாம் மனநிலை பிறழ்வுற்றே அதைச் செய்கிறார்கள் என்பதும் இதன் காரணமாகத்தான்.
நமது பிறப்புக்கெல்லாம் மூலமானது நமது பாவங்களே எனில் அந்தப் பாவவினைகளை அறுத்துக்கொள்ளும் வழிவகைகளே நமக்கு வேண்டியது.
துன்புறும் பொழுதுகளிலெல்லாம் நான் பாவி நான் பாவி என்று அரற்றுவதை விடவும் இந்தத் துன்பங்களுக்கெல்லாம் மூலமான பாவங்கள் எதுவென்பதை நாமே கண்டறிந்து அவற்றைக் களைந்தெறிவதே நமது முதல் வேலையாக வேண்டும்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்பது எப்போதோ தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் வழிவகைகளும் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
அதனைக் கண்டறிந்து கற்பதும் கற்பிப்பதும் பாவங்களிலிருந்து நம்மை விலக்கிக் காக்க உதவும்.