„இரண்டு கழுதை வயசாச்சு.. இன்னும் உருப்படியாய் ஒரு காரியம் பார்க்கத் தெரியேல்லை!“-
-வளர்ந்த மகனைக் கண்டிக்க கழுதையைத் துணைக்கு அழைக்கிறார் அப்பா.
„எனக்கு வயசு முப்பதுதான். ஓன்றரைக் கழுதை வயசு எண்டு சொல்லுங்கோ!“ என்று அப்பாவைத் திருத்துகிறான் மகன்.
„கழுதைக்கு கழுதையின்ர வயசுமட்டும் கணக்காத் தெரியுது!“ என்று சிடுசிடுத்தபடி போகிறார் அப்பா.
„இந்தக் கழுதையின்ர அப்பா கணக்கிலை புலி!“ என்று சிரிக்கிறான் மகன்.
இவர்களது வாய்களுக்குள் கழுதை சிக்கிக் கொண்டு தவிக்கிறது. தன்னைப்பற்றி மனிதர்கள் கொண்டிருக்கும் எண்ணத்தை கழுதைமட்டும் அறிந்திருந்தால் காலம் முழுதும் அது கண்ணீரோடுதான் திரியவேண்டியிருக்கும்.நல்லவேளையாக மனிதர்களின் கருத்தை அறியும் வாய்ப்பை இயற்கை அதற்குக்
கற்றுத் தரவில்லை. அதனால் கழுதையை வைத்துக் கொண்டு தன்னிஷ்டப்படி பழமொழிகளை வேறு உருவாக்கிக் கொண்டிருக்கிறான் மனிதன்.
„கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?“ என்றொரு பழமொழி.
நமக்குத் தரமானதாகத் தெரிகின்ற ஒன்று இன்னொருவருக்கு அத்தனை சுவாரஸ்யமானதாக இல்லாதிருந்தால்
சட்டென இந்தப் பழமொழியே நாவரை வந்து விடுகிறது.
இத்தனை விலங்குகள் இருக்கும்போது கழுதையை மட்டும் ஏன் உதாரணத்துக்கு எடுத்துவந்தார்கள் என்பதில் எல்லோர் மனத்திலும் ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது?
கழுதைக்கும் கற்பூரத்துக்கும் அப்படி என்னதான் தொடர்பு இருக்கமுடியும்?
சரியான அர்த்தத்தைக் கண்டுகொள்ள வேண்டுமானால் இவை இரண்டையும்பற்றி ஓரளவுக்கேனும் நாம் தெரிந்து கொண்டாகவேண்டும்.
கழுதை நம்மருகில் இருக்கிறதோ இல்லையோ கழுதை என்ற வார்த்தைமட்டும் அவ்வப்போது நமது வாய்களில் உறவாடிச் செல்லத் தவறுவதில்லை.எவரையாவது சாடவேண்டுமானால் உடனடியாக உதவிக்கு வருகின்ற விலங்ககள் நான்கு. நாய், எருமை, குரங்கு, கழுதை.
(ஜெர்மனியில் அதிகம் பாவனையில் உள்ளது பன்றி. அதற்கடுத்தபடியாக நாய், மாடு)
கோபப்படும் மனிதனின் வாயிலிருந்து பாய்ந்துவரும் இந்த விலங்குகள் எதிராளியை இலகுவாகக் காயப்படுத்திவிட்டு மறைந்துவிடும். தாக்குதலுக்குள்ளானவன் அந்த மிருகத்தையும் தன்னையும் ஒப்பீடுசெய்து தனக்குள் புழுங்கிப் போகிறான். அவமானத்தால் சுருண்டுபோகிறான். சில சமயங்களில்
கோபமூட்டியவனைத் திருப்பித் தாக்க முனைபவன் அந்த மிருகமாகவே மாறிப்போவதும் நடக்கிறது.
குறிப்பிடப்படும் அந்த மிருகத்தின் குணாதிசயங்கள்பற்றி எவரும் அதிக அக்கறை கொண்டதாகக் காணோம். மேலோட்டமாக அதனை இழிவாகக் கருதுகிற மனோபாவம் அதைப்பற்றிய ஒரு கேவலமான கணிப்பை ஒவ்வொருவர் மனத்திலும் வளர்த்து விட்டிருக்கிறது. அதனால்தான் அதன் பெயரால் தான்
குறிப்பிடப்படும்போது அதை ஒருவன் அவமானமாகக் கருதுகிறான்.
உண்மையில் அந்த விலங்குகள் கேவலமானவை அல்ல என்பதை உணர்ந்தவர்களுக்கு மற்றவர்களது வார்த்தைகள் கோபத்தை வரவழைப்பதில்லை.
„கழுதை!“ என்றதும் ஒருவனுக்கு ஏன் கோபம் வரவேண்டும்?
ஆரவாரமில்லாமல் அமைதியாக, பொறுமையாக, மிகுந்த சுமைகளையும் தன் முதுகில் தாங்கிக்கொண்டு
செல்லும் கழுதையை சோம்பல் மிகுந்ததாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை அமைத்த
உருவ அமைப்புக்கு பாவம் கழுதை என்ன செய்ய முடியும்?
குதிரையின் இனத்தின் வழியே பிறந்திருந்தாலும் அவை கழுதைகளானதால் பொறுமை காக்கின்றன.
ஆனால் அவை தமக்குரிய கடமைகளைவிட்டு ஒதுங்கிப் போவதில்லை. தன்னைப் பராமரிக்கும் மனிதனின்
சுமைகளில் பெருமளவிலானவற்றை தாங்கி உதவி புரிவதில் கழுதைக்கு நிகராக வேறு எதைச் சொல்ல முடியும்?
கழுதையின் சிறப்பம்சங்களில் அதன் மோப்பசக்தியும், குரல்வளமும் உதாரணத்துக்கு எடுத்துக்
கொள்ளப்படுகின்றன.யாராவது உரத்த குரலில் பாடத் தொடங்கினால் உடனடியாக மற்றவரிடமிருந்து
வரும் வாசகம்: „ஏன்ரா கழுதைமாதிரிக் கத்தி எங்கடை உயிரை எடுக்கிறாய்?“
உண்மையில் ஒலிவாங்கி இல்லாமல் பாடக்கூடிய கழுதையின் குரல் மூன்று மைல்களுக்கப்பால் கேட்குமாம்.
சொல்கிறார்கள். அதனால் தான் ஒருசில பாடகர்கள் கழுதையோடு ஒப்பிடப்படுகிறார்கள்.
சரி, கழுதைக்கு மோப்பசக்தி அதிகம் எனில் அதன் மோப்பசக்திக்கு எல்லாவற்றின் வாசனையும் தெரிந்திருக்கவேண்டுமே. கற்பூர வாசனை மட்டும் தெரியாது போகுமா?
இப்போது மறுபடியும் பழமொழிக்குத் திரும்புவோம்.
கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை?
வாசனையை நுகரும் திறமை கழுதைக்கு அதிகம் உண்டுதான் ஆனால் அது கற்பூரமா கரித்துண்டா
என்பதை பிரித்தறியும் திறன் அதற்கில்லாதிருக்கலாம். அல்லது அது அதற்கு அவசியமற்றதாக இருக்கலாம்.
ஒருவேளை கழுதையின் அறிவுத்திறனைக் குறிப்பதற்காக கற்பூரம் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கும்.
ஒருவரின் புத்தி சாதுர்யத்தைக் குறிப்பதற்கு கற்பூரப்புத்தியும் கரிப்புத்தியும் உதாரணமாகக்
கொள்ளப்படுவதுண்டு. (சட்டெனப் புரியும் தன்மையை கற்பூரப் புத்தி என்பர். தாமதமாக தெரிதலை
கரிப்புத்தி என்பர்.)
கழுதை ஒருவித அசமந்தப் போக்குடன் காட்சியளிப்பதால் அது சட்டென எதையும் அறியாது என்பதைச்
சொல்வதற்காக கற்பூரம் சொல்லப்பட்டிருக்கலாம். இந்தப் பழமொழியில் தெரியும் இன்னோர் அர்த்தம்.
கழுதை கற்பூரத்தை அறிந்திருக்காது என்பதுதான்.
கற்பூரம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடம் – ஆலயங்கள்!
மாடு, ஆடு, நாய், எலி, சிங்கம், புலி, குதிரை என்று பலவித மிருகங்கள் வாகனங்களாக ஆலயத்துள்
நுழைந்திருக்க அங்கே கழுதையைமட்டும் காணோம். கோயில்பக்கம் போகாத கழுதை கற்பூர வாசனையை
அறிந்திருக்க நியாயமில்லை என்பதாலும் இந்தப் பழமொழி உருவாகியிருக்கலாம்.
என்னவோ போங்கள்-
கழுதையை மூலமாகக் கொண்டு எத்தனைவிதமான பழமொழிகள் உருவாகியிருந்தாலும் அத்தனை பழமொழிகளையும் கழுதை படிக்கப் போவதில்லை. படிப்பதென்னவோ நாம்தான். படித்தறிந்து மூளையை வளர்த்துக்கொள்வதுதான் நமது வேலை.
பழமொழி தாங்கிய காகிதத்தைமட்டும் கழுதையிடம் கொடுத்தால் போதும்- அது முடித்துவிடும்.