ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஈழத்தின் வடபகுதியான முல்லை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவரும், வாழ்ந்து தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வருபவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம்பெற்றபோர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள் ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் கவிதைகள்வாயிலாக தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் எழுதிவருவதுடன் படம்வரைதல், கவிபாடல் துறைகளிலும் மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்டவர். சமகாலத்தின் மிகவலிமையுடைய குரலாக கருதப்படுபவர். கவிதைகளில் மக்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்ற அனாதியன் என்று அழைக்கப்படும் மார்க் ஜனாத்தனுடன் ஒருநேர்காணல்.
நிலவன் – முதலில் உங்கள் குடும்பம் பற்றியும் வாழ்வுச்சூழல் பற்றியும் சொல்ல முடியுமா …
அனாதியன் – எனது தந்தை பெயர் க-ஜெகதீஸ்வரன். தாயார் ஜெ-விஜயலட்சுமி. நாங்கள் அழகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிப் பிரதேசத்தில் வசிக்கிறோம். அமைதியான கிராமச் சூழல் மறைந்து இயந்திர மயமாக்கலுக்குள் செல்லுகிற காலமாதலால் எனது கிராமமும் விதிவிலக்கல்ல, பாரிய போர்ச்சூழலையும் தாண்டி கலவரமானதும் அமைதியானதுமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.
நிலவன் – உங்களை பற்றி கூறுவீர்களா?
அனாதியன் – எனது பெயர் மார்க் ஜனாத்தகன் நான் அனாதியன் எனும் புனைப்பெயரில் தொடர்ச்சியாக கவிதைகளை எழுதிவருகிறேன். எனது ஆரம் க்கல்வியை மு/யோகபுரம் மகாவித்தியாலையத்திலும், உயர் கல்வியை மல்லாவி மத்திய கல்லூரியிலும் கற்றதோடு மட்டுமல்லாமல் பட்டப் படிப்பினை யாழ் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்த காலப்பகுதியில் புலம் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. தற்பொழுது நான் பிரித்தானியாவில் வசிக்கிறேன்.
நிலவன் – உங்கள் பல்துறை சார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள் இளமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?
அனாதியன் – பல்துறைகளிலும் நான் நாட்டம் கொண்டதற்கு நான் சார்ந்திருந்த என் பெற்றோர்கள்சகோதரர்கள் ஆசிரியர்கள் நண்பர்களின் ஊக்கமே காரணம் என்பது மகிழ்ச்சி. அதையும் தாண்டி கூச்சமற்று எதையும் சாதிக்கவேண்டும் எனும் வெறியும் முயற்சியும் காரணமாக இருக்கலாம் , இதற்கு சுமைகள் அற்ற பொறுப்புகளற்ற இளம் பராயத்தை என் பெற்றோர் எனக்கு அளித்தமையே காரணமாகும். போர்க்காலச் சூழலுக்குள் வாழ்ந்தாலும் போதிய அமைதி கிடைத்தது, கவிதையெனும் துறை தவிர , ஓவியம் ,நாடகம் ,மிமிக்கிரி,விளையாட்டு என்பவற்றிலும் தீராக்காதல் கொண்டிருந்தேன்.
நிலவன் – ஒரு எழுத்தாளன் பிறக்கிறனா? உருவாக்கபடுகின்றானா?
அனாதியன் – ஒரு எழுத்தாளனோ ஓவியனோ வின்ஞானியோ பிறப்பதில்லைபிறக்கின்ற போது யாவரும் சாதாரணமானவர்களே! கற்றல் அறிவும் சூழலுமே மனிதர்களுக்கு தகுதியினை பரிசளிக்கிறது. ஆனால் எழுத்தாளன் அப்படியல்ல. அவன் வாழும் சூழல் காரணிகளால் உருவாக்கப்படுகிறான். ஒரு யுத்தமோ, அடக்குமுறையோ, காதலோ, ரசனையோ, தொடற்சியாக எழுத்துக்கள் மீதான காதலும் வாசிப்பும், ஒருவனை எழுத்தாளனாக்கிவிடுகிறது ஆக எழுத்தாளர்கள் பல்வேறு சமூகக்காரணிகளால் உருவாக்கப்படுகிறார்கள்.
நிலவன் – எழுத்துத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள் எவை ?
அனாதியன் – ஆரம்பகாலத்தில் அம்புலிமாமா, மாயாவிக்கதைகள் தொட்டு வாசிப்பில் ஏற்பட்ட தீவிர நாட்டம் பின் கவிதைகளின் சுவைமீது தீராக்காதல் கொள்ளவைத்தது. இதன் போக்கில் 2008 காலப்பகுதிகளில் ஏற்பட்ட இறுதி யுத்தத்தின் பாரிய மனவழுத்தமே கவிதை புனைவதற்குரிய உடனடிக்காரணியாக அமைந்தது. இதற்கு முன் பாடசாலைக்காலங்களில் சிறுசிறு எழுத்தாக்க முயற்சியில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது
நிலவன் – உங்களுக்குள் எழுத்து மேல் ஈடுபாடு வந்தது பற்றி….
அனாதியன் – எனக்கு எழுத்துமேல் ஈடுபாடு வந்ததற்கு எழுத்தாளர்கள்தான் காரணம். குறிப்பாக வைரமுத்து, கண்ணதாசன், மலரா, அனார், கலீல் ஜிப்ரான் போன்றவர்களின் எழுத்துத்தான் என்னை எழுதத்தூண்டியது என்பேன் , மேலும் எழுத்துக்களால் எதையும் மாற்றிவிட முடியும் என்று தீவிரமாக நம்புகிறேன்.
நிலவன் – உங்கள் கவிதை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்…
அனாதியன் – கவிதை படிப்பதோடு நின்றுவிடுவேன். ஒருமுறை எனது 15 வது வயதுகளில் எதேற்சையாக தமிழ்த்தினப் போட்டிநிகழ்விற்கு கவிதை ஒன்றை எழுதினேன். அதற்கு மாவட்ட அடிப்படையில் இரண்டாமிடம் கிடைத்தது. அந்த வெற்றிதான் எனக்குள்ளும் ஒரு எழுத்தாளன் இருப்பதை எனக்கு இனம்காட்டியது. அதைத் தொடர்ந்தே எழுத்துமீது ஆர்வம்காட்டத்தொடங்கினேன் என் ஆரம்பகால கவிதை ஒன்று இப்பொழுதும் நினைவுள்ளது பதினைந்து வயதில் எழுதியது. ” அந்த மழைப்பொழுதுகளில் உன்னை பார்த்த பொழுது நகைத்தாய் என்ன ஆச்சரியம்!! அத்தனை துளிகளும் ஆபரணங்களாகின அன்றிலிருந்து உன் உதடு பிரிகைக்காய் காத்திருந்தேன் நீ புன்னகைப்பாயென”
நிலவன் – ஒரு ” ஒரு வேள்வியாட்டின் விண்ணப்பம் ” நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது?
அனாதியன் – உண்மையைச் சொல்லப்போனால் கவிதை நூலை வெளியிடுவதற்கான முயற்சியை 2011களில் எடுத்திருந்தேன். அது முடியாதுபோகவே 2016 ல் அந்த ஆசையை ” ஒரு வேள்வியாட்டின் விண்ணப்பம் ” நூல் வடிவில் பூர்த்தி செய்துகொள்ள முடிந்தது, இந்த நூலின் தலைப்பும் அதுசார் கவிதையும் உருவாக மிகைப்படுத்தப்பட்ட வேள்வியாடுகளின் மரணமே காரணமாகும். மதம் எனும் பெயரில் பலியிடுதல் தவிர்க்கமுடியாத போதிலும் மிகைப்படுத்தப்பட்ட உயிர்க் கொலைமீது எனக்கு உடன்பாடு இல்லை, கொலையுண்ட தேசத்தில் எஞ்சிய உயிராக நான் கொலைகளை வெறுப்பதுவும் இந் நூல் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது எனலாம். இந் நூலை அறியாமையின் கத்தியால் துண்டிக்கப்படுகிற கோடான கோடி ஆடுகளுக்குத்தான் சமர்ப்பித்துள்ளேன்.
நிலவன் – நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களை அதிகம் கவர்ந்த கவிதை எது?
அனாதியன் – பொதுவாக நான் எழுதும் கவிதைகளின் முதல் ரசிகன் நான். அத்தனை கவிதைகளையும் பலமுறை ரசித்துப்படிப்பேன். இருந்தபோதும் ” எமக்கே தெரியும் ஊரா அறியும்” என்று தலைப்பிடப்பட்ட வெளிநாட்டு வலி சுமந்த கவிதையும் முள்ளிவாய்க்கால் வடுக்கள் சுமந்த கவிதைகளும் மிகவும் பிடிக்கும்
என் விழிவழி வழிவது ஒரு ஏமாற்றம்
இறந்துபோனதன் கழிவு..
பொதுவாக உலகின் அதர்மிகளை
இவ்வாறு விழிப்பேன் – மிருகத்தையும்
உள்வாங்கிய நான்காம் பாலினத்தவர்கள்…
நான் சிதைக்கப்பட்ட பெண்மையின் எச்சமாகலாம்….
ஆனால் என் பெண்மை வறுமையில் எரியும் நெருப்பு…
இன்னும் பல கவிதைகளின் வரிகள் …..
நிலவன் – ஒரு எழுத்தாளன் அறிஞராகவும் அல்லது கல்வியாளரக இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதா ?
அனாதியன் – அவசியம் ஏதுமில்லை, ஆனால் ஒரு எழுத்தாளன் கல்வியாளனாகவும் அறிஞனாகவும் இருப்பானேயானால் அவன் படைப்புக்கள் அதி சக்திவாய்ந்தவையாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை, என்னதான் எழுதினாலும் ஒன்றை எழுதுவதற்கு முன் அது தொடர்பான பூரண அறிவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. வெறு அனுபவத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது. ஆக கொஞ்சமேனும் ஞானம் கல்வி அறிவு அவசியம் என்பதென் கருத்து இவை இல்லாதவிடத்திலும் அனுபவத்தை மாத்திரம் கொண்டு குறிப்பிட்ட சில நல்ல ஆக்கங்களை உருவாக்கவும் முடியும்
நிலவன் – ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்?
அனாதியன் – முக்கிய அடையாளமாக அவனுடைய சொல்லாடல் கவிதையோ கட்டுரையோ அதை உருவாக்குவதிலுள்ள தனித் தன்மையையே கருதுகிறேன் அத்தோடு ஒரு எழுத்தாளன் சமூகத்தை நல்வழிப்படுத்துபவனாக இருக்கவேண்டுமென்பதும் என் கருத்து. எவனொருவன் சமூக மாற்றத்தை ஏற்படுத்த எழுதுகிறானோ அங்கேயே அவன் தனித்தன்மைவாய்ந்தவனாகின்றான் என்றும் சொல்லிக்கொள்ள முடியும்.
நிலவன் – உங்களுக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்….
அனாதியன் – கவிப்பேரரசு வைரமுத்து, கவியரசர் கண்ணதாசன், கலீல் ஜிப்ரான் மனுஷ்ய புத்திரன், போன்றவர்களின் எழுத்துக்கள் மிகவும் பிடித்தமானவை மேலும் முகநூலின் மூலமாக பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்துவருகிறேன். நான் அதிகம் கவிப்பேரரசு வைரமுத்து ஜயாவின் புத்தகங்களை அதிகம் வாசிப்பது வழக்கம்.
நிலவன் – தமிழரின் கலை, கலாசார பண்பாடுகளைப் பாதுகாப்பதில், இன்றைய நவீன,நாகரிக வளர்ச்சி எவ்வகையான ஆதிக்கத்தினைச் செய்கின்றது என நினைக்கின்றீர்கள்….
அனாதியன் – தமிழர்களுக்கென்று தனித்துவமானதும் பாரம்பரியமானதுமான கலாச்சாரம் உண்டு. போர்க்கால சூழலிலும் அது நேர்த்தியாக கட்டிக்காக்கப்பட்டதை கண்டிருக்கிறேன். ஆனால் உலகமயமாதலும் நாகரீகப் புத்தாக்கங்களும் எம் கலாச்சாரத்தை வெகுவாக சீரழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது அது ஒரு புறம் இருக்க எம் மக்கள் அடிக்கடி கலாச்சார பெருவிழாக்கள் ஒன்றுகூடல்கள் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துகின்றமையும் மகிழ்ச்சியே நாகரிக வளர்ச்சியில் பாரம்பரிய பண்பாடுகள் கலப்புருவாக்கம் அடைவது தவிர்க்கமுடியாத போதிலும் நாம் எம் பண்பாடுகளை கலாச்சாரங்களை அடுத்த சந்ததிக்குக் கடத்துவதில் முனைப்போடு செயற்பட வேண்டும்.
நிலவன் – நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் உங்களின் பங்கு பற்றி கூறுவீர்களா?
அனாதியன்- நெருக்கடியான கால கட்டங்களின் பதிவுகளை உடனுக்குடன் பதிவுசெய்வதில் எம்மை சுற்றியுள்ள சட்டம் சமூகம் எனும் பொதுக் காரணிகள் தடையாக இருப்பதால் அதை பதிவிடுவதில் எழுத்தாளர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள். நான் தற்போது வாழும் சூழல் நெருக்கடி நிலைமைகளை துணிந்து வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருப்பதால் நான் அவற்றை பதிவு செய்வதில் பின் நிற்பதில்லை சமூகத்தின் தற்கால தேவைகளை அவ்வப்போது காணொளி கவிவடிவில் செய்வதிலும் சிறிது நிறைவடைந்துகொள்கிறேன். எதிர்காலத்தில் ஒரு எழுத்தாளனாக எந்த நெருக்கடி நிலமைகளுக்கும் பின்னிற்கப்போவதில்லை.
நிலவன் – போருக்கு பிட்பட்ட சமூக, பொருளாதார சவால்கள் பற்றி …
அனாதியன்– போருக்கு பிற்பட்ட காலத்தில் என் குடும்பம்சார் தனித்தன்மையூடாக நோக்குகிறபொழுது நாங்கள் பாரிய இன்னல்களை சுமந்தோம். உடமை சொத்துகள் எல்லாவற்றையும் இழந்து வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து கட்டியெழுப்புவது எத்தனைபெரிய கஷ்ரம் என அனைவரும் அறிவோம். இதே போலதான் பொதுவாக வன்னி மக்களின் வாழ்க்கை முறை வாழ்வாதாரம் போரிற்கு பின் பாரிய பாதிப்புகளுக்கு முகம் கொடுத்த போதிலும் தற்போதுள்ள காலத்தில் அந் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சியே!
நிலவன் – விமர்சனங்கள்,அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள்…
அனாதியன்- விமர்சனம் தான் ஒரு செயலாற்றுகையை மதிப்பிடுகிற பாரிய சக்தியாக இருக்கிறது என்பேன்.பொதுவாக விமர்சனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது ஒரு படைப்பின் நன்மைகளை ஆராய்கிற அதே சமயம் தீமைகளையும் சுட்டிக்காட்டுவது இயல்பே ஆனால் இன்று பலர் அதை செய்ய முற்படுவதில்லை. மாறாக எதிர் மறை கருத்துக்களை மாத்திரமே தெரிவித்துக்கொள்கின்றனர். இதையே உயரிய விமர்சனமாகவும் கருதுகின்றனர் இந்த நிலை மாறவேண்டும் என்பதே என் அவா…
நிலவன் – உங்கள் சழுக பணி ,மக்கள் நலன் திட்டங்கள் தொடர்பாக…
அனாதியன்– சிறுவயதிலிருந்து பொதுச் சேவைகளில் ஈடுபடுவது பிடித்தமான ஒரு விடையம்தான். எதிர்காலத்தில் என் வாழ்வாதாரம் உயருகிற சந்தர்ப்பத்தில் இல்லாதோர்க்கு உதவுகிற செயற்திட்டங்களை செய்வதாகவுள்ளேன். அத்தோடு compassion charity நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளேன். மேலும் கவிதை என்கின்ற போது முடிந்தவரை சமூக மாற்றங்களை ஏற்படுத்துகிற கவிதைகளை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலான கவிதைகளை எனது குரலில் காணொளியாகவும் வெளியிட்டு வருகிறேன் குறிப்பிட்ட சில வாரங்களாக ” அனாதியன் கவிதைக் களம்” எனும் பெயரில் ஒரு நேரலை நிகழ்ச்சியினை செய்துவருகிறேன் இது முழுக்க முழுக்க எம் எழுத்தாளர்களின் கவிதைகளை உலகறியச் செய்யும் ஓர் நிகழ்ச்சியேயாகும்
நிலவன் – உங்கள் படைப்புகளில் காலம் தாண்டி நின்று நிலைக்கக் கூடியதாக எதைக் கருதுகிறீர்கள்…
அனாதியன்– எந்தப் படைப்பு மக்கள் மனங்களில் புரட்சியினை அல்லது மாற்றங்களை உண்டு பண்ணுகிறதோ அவை காலம்தாண்டியும் பேசப்படும் அத்தகைய கவிதைகளை நான் படைத்திருக்கலாம் இல்லாது போனாலும் அதற்கான முயற்சிகளை செய்துகொண்டுதானிருப்பேன்.
நிலவன் – உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்…
அனாதியன்- தமிழின் எம் பிரதேசவாத அடையாளங்களின் தன்மை கெட்டுவிடாமல் மொழிநடைகள் பேச்சுவழக்கு சொற்கள் ஊர் பெயர்கள் எம் வாழ்கை வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு எழுத்துக்கள் மூலம் கடத்துவதில் அதிக கவனம் எடுக்கவேண்டுமென வேண்டிக்கொள்கிற அதே நேரம் தனித்துவமான எழுத்தியல் அடையாளத்தை பேணுவதிலும் கவனமெடுக்கச் சொல்வேன்.
நிலவன் – அடுத்த கட்டமாக ஏதேனும் முயற்ச்சியில் ஈடுபடவுள்ளீர்களா…
அனாதியன்- நிச்சயமாக அடுத்து 2 புத்தகங்களை ஒரே சமயத்தில் வெளியிடவேண்டுமெனத் திட்டமிட்டுள்ளேன் முடிந்தவரை வருடத்திற்கு ஒரு நூல் ஏனும் வெளியிட வேண்டும் எம் போராட்டகால நினைவழியா வடுக்கள் சுமந்த நூலொன்றையும் தமிழுக்குத்தரவேண்டும் என்பது என் அவா…