ஏன் பிறந்தாய்??கவிதை.ரதிமோகன்

ஏன் பிறந்தாய் என்ற கேள்விக்குள்
ஒளிந்து இருக்கும் விடையை
அறிய நீ எத்தனித்ததுண்டா?

சிந்திப்பதற்கிடையில் உன் குடும்பம்
உன் சுற்றம் இந்த வட்டத்தோடு
உன் ஆயுள் முடிவடைந்துவிடும்..

ஒரேயொரு தடவை பசித்தவயிறுகளின்
ஓலத்தை செவிமடுத்துப்பார்
நோயினால் அற்ப ஆயுசில் தம் கதையை முடிக்கும் உயிர்களை எட்டிப்பார்..

முதுமையும் பிணியும் வாட்ட
வாழ்வாதாரமின்றி கண்ணீரோடு
தம் நாட்களை எண்ணிக்கலங்கும்
ஏழை எளியோரைப் பார்த்துக்கொள்..

போரினால் அனாதையாகி
முடமாகி தூக்கில் தொங்குவோர்கள்
காதலென்ற மோகத்தில் ஜனித்து
குப்பைத்தொட்டிகள் தத்தெடுத்த
குற்றமற்ற மழலைச்செல்வங்கள்….

ஒரே ஒருமுறை இல்லை
உன் பிறந்தநாளிலாவது
இவர்களை சிந்தித்துப்பார்
உன் கரங்கள் அவர்களை
அரவணைக்கட்டும் உன்
இதயக்கதவுகள் தட்டப்படட்டும்..

அப்போதுதான் உணர்வாய் நீ
இந்த பூமிப்பந்தில் நீ பிறந்த
காரணத்திற்கான விடையை
அங்கேதான் நீ தேடும் இன்பமும்
ஒளிந்து கொண்டு இருப்பதையும்
காண்பாய்….

ஆக்கம் ரதிமோகன்