நள்ளிரவில் நந்தவனத்தில் நாமிருவரும் கவிதை .நிலாநேசன்

அள்ளிப்பால்போல எறிக்கும்
….அந்த வெள்ளி நிலாவே
தள்ளிப் போக மாட்டாயா சொல்
…..தடங்கள் எமக்குத் தராது நில்
நள்ளிரவிலே நாம் இருவரும்
…..நந்தவனத்திலே நல்ல புற்றரையிலே
நல்லிரவாய் ஆக்கி நம் நட்பில்
……நலமாய் கூடி மகிழ்ந்து சற்று
பள்ளி கொள்ள,விடாது நீயும் எம்மேல்
……பால் நிலவொளியை வீசி உந்தன்
வெள்ளிக் கண்ணால் வெகு நேரமாய்
…..வேவு பார்கிறாயே விரோதி போல்,
கள்ளிகள் போல் பதுங்கி நிற்கும்
…..கோட்டான் குருவிகளோடு ஆந்தைகளும்
துள்ளியோடும் முயல்களும் அணில்களும்
….தும்பிகைகொண்ட யானைகளும்
புள்ளி போட்ட பெண் மான்களும்
….புறாக்களும் கிளிகளும் கொக்குகளும்
கொள்ளிக்கண்ணால் எம்மைத் தானே
…….கூர்ந்து பார்க்கின்றன ஏனோ
அல்லிப் பூவும் ஏனோ தடாகத்திலிருந்து
…….அருகே இருக்கும் எம்மை எட்டிஎட்டி
சொல்லி வைத்தால்ப் போல்
………. சுற்றிச் சுற்றி பார்க்கிறது.
புள்ளினங்கள் கூடப் பாட ஆரம்பித்தன.
….போ நிலவே போதும் உன் காவல்
நள்ளிரவு முடிந்து நாளிகைகள் ஆகியது
……..நாளை வா என் பொன் நிலவே
சொல்லியதைக் கேட்டு தூரம் போ என்
……சுட்டும் விழி மூடா தூங்காத நிலவே


ஆக்கம் .நிலாநேசன்