விழித்துப் பார்த்தபோது-
இருள்!
இமைகளை மறுபடி மூடிக்கொண்டான் இளங்கோ.
அங்கேயும் இருள்.
சற்றுநேரத்துக்கு முன்புவரை அவனுள் ஒளியாய்ப் பரவிக்கொண்டிருந்த அந்த முகம் இப்போது முற்றுமுழுதாய் மறைந்திருந்தது.
நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை.
நீண்டதூரத்துக்கு ஓடிக் களைத்துவிட்டு மூச்சுவிடப் பிரயத்தனப்படுவதுபோல அவன் உணர்ந்தான்.
மூச்சு நின்றுவிடுமோ..?
நிற்கட்டும்… நிற்கட்டும்…
எதற்காக இந்த மூச்சு?
வெறுமனே உயிர்வாழவா? இந்த வாழ்வில் என்ன இருக்கிறது?
சின்னவயசு ஞாபகம் மனத்தில் பட்டென ஒட்டிக்கொள்கிறது.
„சின்னம்மா… இது ஆர்.. உன்ரை மோனெல்லே?“
-தெருவில் எதிர்ப்படுகிற கிழவி ஒருத்தி இவன் அம்மாவைக் கேட்கிறாள்.
அம்மாவின் சேலைத் தலைப்புக்குள் உடம்பைச் சுருட்டி தலையை மட்டும் கங்காருக்குட்டி மாதிரி வெளியே நீட்டி அந்தக் கிழவியைப் பார்க்கிறான் இவன்.
„ஆம்பிளைப்பிள்ளையெல்லே… என்ன வெக்கம்..? பெட்டைக்குட்டியள்மாதிரி?“
-கிழவி இவன் கன்னத்தில் செல்லமாய்க் கிள்ளிச் சிவக்க வைக்கிறாள்.
„எப்பவும் என்ரை சீலைத்தலைப்பைப் பிடிச்சபடிதான்..இவன் வளந்து பெரியவனாகி என்னைக் காப்பாத்துவான் எண்டு நம்பியிருக்கிறன்.
காப்பாத்தாட்டிலும் பரவாயில்லை.. கொள்ளி போட்டானெண்டால் போதும்!“
கொள்ளிக்கடனை நினைவுபடுத்தி, தன் உயிர்போகும் தருணத்தில்கூடத் தன் பிள்ளை தன்னருகே இருக்கவேண்டும் என்கின்ற தாய்மையின் தவிப்பு..
அப்போது புரியவில்லை இவனுக்கு..
இப்போது புரிகிறது!
அம்மாவின் சேலைத் தலைப்புக்குள் முகம்புதைத்து வளர்ந்தவன் வளராமலேயே இருந்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.
அந்தச் சின்ன வயசு..
எந்தக் கவலையுமில்லாமல் எந்தச் சலனமுமில்லாமல் தெளிந்த நீரோடைபோல் மனத்தைத் தெளிய வைத்துக்கொண்டு
எத்தனை மகிழ்ச்சியாய்…
„சாப்பிடுமோனை… சாப்பிடுராசா..“
-அம்மா சோற்றைக் குழைத்து உருண்டையாய் கையில் எடுத்துக்கொண்டு இவன்பின்னால் ஓடிவருவாள்..
முற்றத்தை ஒருதரம் சுற்றி ஓடிவந்து சட்டென அவளது மடியைக் கட்டிக்கொண்டு, ஆவென்று வாய்திறந்து அவளது கைச்சோற்றை வாயி்ல் திணித்துக்கொண்டு மறுபடியும் முற்றத்தைச் சுற்றியோடி…
ஏன் வளர்ந்தேன்…?
வளராமல் இருந்திருந்தால் எப்போதும் அம்மாவின் கைச்சோற்றில் எத்தனை சுகமாய்..
கனவாய்ப் போயிற்றென்றும் சொல்ல முடியாமல் நினைவுகளாய் நிலைத்துவிட்டதென்றும் நிற்கமாட்டாமல்…
அம்மா..!
தூக்குக் கயிற்றில் ஒருநாள் இவன் அம்மா தொங்கிக்கொண்டிருந்தாள்.
„என்னைக் காப்பாத்தாட்டிலும் பரவாயில்லை..கொள்ளிபோட்டாலும் போதும்..!“
அம்மாவுக்குக் கொள்ளிபோட்டபோது இவனுக்கு வயது இருபது.
இவன் கொள்ளிதான் போட்டான்.
அம்மாவுக்கு இவன் போட்ட கொள்ளிக்குபொறியாய் இருந்தது இவனது காதல்.
ஏன் வளர்ந்தேன்..ஏன் வாலிபனானேன்?
பாடசாலைப் படிப்பு பாதியில நின்று போயிற்று.
மனத்துள் கள்ளம் புகுந்துகொண்டது.
மேலுதட்டின்மீது மீசை துளிர்த்து நீ பெரியவன் என்றது.
இவன் வயதில் சிலபேர் பீடி புகைத்தார்கள்…
சிகரட்புகைத்தார்கள்.. கள்ளுக் குடித்தார்கள்.. சண்டித்தனம் செய்தார்கள்.. தெருவில் ஒருவரோடொருவர் புரண்டெழுந்தார்கள்…
காயம்பட்டு ஆஸ்பத்திரிக் கட்டில்களில் கிடந்தார்கள்…
அதெல்லாம் ஆண்மை வீரம் என்று சொல்லிக் கொண்டார்கள்.
இவனுக்கு இதெல்லாம் பழக்கமில்லை..
ஆனாலும் நான் ஆண்பிள்ளை என்ற அவனுக்குள் அடிக்கடி ஏதோ சொல்லிற்று..
கனவுகள் கனவுகள்..
திடீரென்று விழித்துக்கொள்வான்.
தூக்கம்தொடரமறுக்கும்
„என்ன ராசா?“ என்பாள் அம்மா.
„மகன் இப்ப முந்தினமாதிரி இல்லை.. இராத்திரியிலை திடுக்கிட்டு முழிக்கிறான் என்னத்தயோ கண்டு பயந்தவன்மாதிரி.. சரியாய்ச்சாப்பிடுகிறதில்லை.. நித்திரை கொள்ளுறதில்லை.. என்னெண்டு எனக்கு விளங்கேல்லை..“
பக்கத்துவீட்டுப் பெண்களிடம் ஆலோசனை கேட்டாள் அம்மா.
„ஆராவது சாமியாரிட்டைக் காட்டு!“ என்றார்கள்.
ஒரு மந்திரவாதி வந்தான்
கையில் மண்டையோடு வைத்திரந்தான் குடுகுடுப்பைக்காரன்மாதிரி உடுத்தியிருந்தான்..
அவனுக்கு முன்னால் இவனை உட்காரவைத்தாள் அம்மா..
இவன் எதிர்க்கவில்லை.
அம்மாவின் காரியங்கள் எதுவும் பிழைக்காது..
பார்க்கலாம் இந்த மந்திரவாதி என்ன செய்கிறான்..?
ஒரு தட்டு நிறைய அரிசியும் தேங்காயும் வெற்றிலை பாக்கு பழம் இவைகளோடு பத்துரூபாய் காசும் கொஞ்சம் சில்லறையம் வாங்கிக்கொண்டு மண்டையோட்டை அவைகளின்மீது வைத்துவிட்டு மந்திரவாதி கண்களை மூடிக்கொண்டான். அவனது கறுத்துத் தடித்த உதடுகள் ஏதோ முணுமுணுத்தன.. சற்றுநேரத்துக்கெல்லாம் ஏதோ சாம்பலை அள்ளி
இவன் முகத்தில் ஊதினான்…
„தம்பிக்கு மோகினி பிடிச்சிட்டுது!“ என்றான்.
அம்மா மிரண்டாள்..
„மோகினியா?“
„அடுத்தகிழமை எல்லாம் சரியாய்ப் போயிடும்!“ என்றான் மந்திரவாதி.
போய்விட்டான்.
மோகினியாமே.. என்ன அது..?
வெண்ணிற ஆடை உடுத்தி, கையில் விளக்கேந்தி, காற்றில் கூந்தலைப்பரப்பி, மெதுவாய் அசைந்து அருகில் வந்து அழகாய்ச் சிரித்து சட்டென மறைந்துபோகுமே அதுவா..?
அதுதான்!
ஒருநாள் அதிகாலைப்பொழுதில் வெள்ளைநிற „யுனிபோம்“ அணிந்து கையில் புத்தகங்களை மார்போடு அணைத்துக்கொண்டு தெருவில் இவனைக் கடந்துபோனவள் மெள்ளத்திரும்பி இவனைப்பார்த்து எழிலாய்ச்சிரிக்க மனத்தில் தீப்பற்றிக்கொண்டது.
அந்தப் பார்வை.. அந்தச்சிரிப்பு.. அந்த முகம்…
திரும்பத்திரும்ப மனத்தில் அவளே!
திரும்பத் திரும்ப சந்திப்புக்காய் மனம் அலைந்தது.
காத்துக்கிடந்த பொழுதுகள் கருணையில்லாமல் மறைந்துபோக ஒருநாள் இருவரும் கதைத்துக் கொண்டார்கள்.
அவள் தயங்கித்தயங்கிப் பேசினாள்.
அப்போதுதான் இவனுக்குள் ஒரு உற்சாகம் வந்தது.
நான் ஆண்பிள்ளை!
தைரியமாகப் பேசினான்:
„மனம்விட்டுச் சொல்கிறன் உன்னைப் பார்க்காமல் உன்னோடை பேசாமல் உன்னோடை பழகாமல் இருக்க என்னாலை முடியேல்லை.. முடியாது..! உன்னை நான் நேசிக்கிறன்.. உயிருக்குயிராய்..உயிருக்கும் மேலாய்.. நீ இல்லாட்டில் எனக்கு இந்த உலகமே வேணாம்.. வாழ்க்கை வேணாம்.. எதுகும் வேணாம்!“
அவளது மூச்சு இவனது மார்பில் பட்டபோதுதான் உணர்ச்சிவசப்பட்டு தான் அவளை நெருங்கியிருப்பதை உணர்ந்தான்.
அவள் அண்ணாந்து இவனது முகத்தைப் பார்த்தபோது அந்தக்கண்களில் இவனுக்கு ஒரு புது உலகம் தெரிந்தது.
என்றோ பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்க் கூடிக்கலந்திருந்த ஆத்துமாக்கள் இரண்டறக் கலந்ததுபோல்…
உதடுகள் ஒட்டிக்கொண்டன.
வீட்டில் அம்மா அலறி அடித்துக்கொண்டிருந்தாள்..
„ஆசையாப் பெத்தனே.. இப்படி மோசம்போயிற்றனே.. ஊரெல்லாம் என்னைப்பார்த்துச் சிரிக்குதே..“
„என்னம்மா..?“ என்றான் இவன் புரியாமல்.
„தொடாதை… என்னைத்தொடாதை.. தொடக் கூடாதவளைத் தொட்ட கையாலை என்னைத் தொடாதை.. வறுமைப்பட்டு வாழ்ந்தாலும் மானத்தோடை வாழ்ந்தன்.. இப்பிடி மானம் கெட்டு வந்து நிற்கிறியே.. நீ என்ர மகன்தானா?“
„இப்ப என்ன நடந்திட்டுது..ஏன் இப்பிடி ஒப்பாரி வைக்கிறை..?“
-இவன் சீற்றத்துடன் சீறினான்..
ஒருநாளும் இல்லாத சீற்றம் அம்மாவை ஒப்பாரி பாடவைத்தது…
„ஐயோ இவனை இப்பிடி மாத்திப்போட்டாளே.. தன்ரை சாதிப்புத்தியைக் காட்டிப்போட்டாளே..!“
„சாதி..?“
-இவன்மனம்கொதித்தது
உலகத்தில் இரண்டு சாதி.. ஆண்சாதி பெண்சாதி… இதிலை என்ன இன்னொரு சாதி..?
-மனம் கசந்தது.
ஆனால் அம்மாவைச் சினக்கமுடியவில்லை.. அவள்மீது கோபப்பட முடியவில்லை.. பத்துமாதம் சுமந்துபெற்றவள் பகலிரவாய் அவளைப் பாடுபட்டுப் பாதுகாத்தவள்.. அவளை வேதனைப்படுத்த வேண்டாமே..
காதல் தீயைத் தணித்தான்..
கண்ணீரோடு காதலியைத் தேடிப்போனான்.
„உன்னை நான் நேசித்தது உண்மை.. நீ இல்லாமல் என்னாலை வாழமுடியாது எண்டதும் உண்மை.. ஆனால் மன்னிச்சுக்கொள்.. என்ரை அம்மாவுக்காக நான் இழக்கக்கூடியது என்ரை உயிரைமட்டும்தான்.. இப்ப என்ரை உயிருக்குச் சமமான காதலை நான் இழக்கிறன்.. சாதியின்ரை பேரைச் சொல்லியோ சமூகத்துக்குப் பயந்தோ நான் இந்த முடிவை எடுக்கேல்லை.. நீ என்ரை சாதிக்காரியாய் இருந்தாலும் என்ரை அம்மாவுக்குப் பிடிக்காட்டில் நான் எடுக்கக்கூடிய ஒரே முடிவு இதுதான்…“
-அவள் கண்கலங்க இவனைப் பார்த்தாள்.
„எல்லா மனிசரும் இந்த உலகத்திலை வாழ்கிறது ஒருமுறைதான் அந்தவாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கவேணும். உங்களைப்போலத்தான் நானும்…! உங்களைப் பிரிஞ்சு என்னாலை வாழமுடியாது.. ஆனால் உங்கடை அம்மாவுக்காக உங்கடை காதலை நீங்கள் தியாகம் செய்கிறபேர்து உங்கடை நிம்மதிக்காக நான் அதைச் செய்யக்கூடாதா..? எனக்கு இதிலை வருத்தமில்லை.. கவலைப்படாமல் இருங்கோ…!“
-அவளையே வைத்தவிழி வாங்காமல் பார்த்தான் இவன்.
காதல் மனிதர்களை வளம்படுத்துகிறதா? காதல் உயரிய தியாகங்களைச்செய்ய மனிதர்களை உற்சாகப்படுத்துகிறதா?
காதல் மனிதருக்குள்ளிருக்கும் ஆத்மநேயத்தை வெளிப்படுத்தி நிற்கிறதா?
அவளது தலையப் பரிவோடு தடவி கண்கள் கலங்க இவன் அவளிடமிருந்து விடைபெற்ற நேரத்தில் வீட்டில் இவன் அம்மா தூக்குக் கயிற்றில் தன் தலையை நுழைத்துவிட்டிருந்தாள்.
பல நாட்கள் பலவாரங்கள் பலமாதங்கள்..
யாரையும் பார்க்கப் பிடிக்காமல் பேசப்பிடிக்காமல் பழகப்பிடிக்காமல் இவன் ஒரு பைத்தியக்காரனைப் போல அலைந்தான்…
அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழ்வதில் அர்த்தம் என்ன..
ஆனாலும் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடியாதபடி இவனுள் ஏதோ ஒன்று தடுத்தது.
அம்மா தற்கொலை செய்துகொண்டாள் அந்த அளவுக்கு அவளைத் தூண்டியத எது..?
எதுவென்று சரியாகத் தெரியவில்லை.
ஆனால் தற்கொலை செய்வது பாவம் என்றுமட்டும் இவன் உணர்ந்தான்.
இன்னொரு உயிரைக்கொல்வது பாவம் என்று சொல்லிக்கொள்ளும் அம்மா தன்னுயிரை கொன்று கொண்டதுமட்டும் தர்மமாகிவிடாதே.
மரணம் பொதுவான சங்கதி..
எல்லோருக்கும் ஏதோ ஒருநாள் மரணம் என்பது விதி.. எனக்கும்கூட.
நான் ஏன் அவசரப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்?
அது வருகிறபோது வரட்டும்.
அவன் வெளிநாட்டுக்கு வந்து பலவருடங்களாகி விட்டன.
அது ஒரு கனவு போலவே..
உலகத்தைப்பற்றி அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் சொந்தக் கவலைகளைத் தாரத்தில் வைத்திருந்தான்..
அம்மாவைப்பற்றி அவ்வப்போதுமட்டும் நினைத்துக் கொள்வான்.
இப்போது அம்மாவின் நினைப்பு அதிகமாகவே வந்தது.
„நேற்று நடந்த வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இரண்டு தமிழர்களும் அடங்குவர்!“
-செய்திப்பத்திரிக்கைகளில் இவனது பேர் வரவில்லை.
அந்த இரண்டு தமிழர்களில் இவனும் ஒருவன் என்பது தெரிந்தவர்களுக்குத் தெரிந்திருந்தது.
கடுமையான இரத்தப்போக்கு
நிலைமை கவலைக்கிடம்
எப்போதும்போல் இவன் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது.
மொட்டையர்களின் வடிவத்தில் வந்த இயமதூதர்கள் ஆயத வலைகளை வீசினார்கள்..
இவன் அகப்பட்டுக்கொண்டான்..
ஊரில் சாதி இவன் காதலைப்பறிக்க, நிறத்துவேஷம் இங்கே இவன் உயிர் பறிக்கக் காத்திருந்தது…
அம்மா இவன் அருகில் இப்போது மிகநெருங்கி நிற்பதாய் இவன் உணர்ந்தான்..
„பார்த்தையா ராசா…! சாதி இனம் மதம்எண்டு எத்தினைவிதமாய் மனிசர் அலைகிறாங்கள்.. ஒண்டைவிட்டு ஒண்டாய்ச் சேர்ந்தாலும் இன்னொண்டு வந்து மனிசனைக் கொல்லும்…“
„இதுகளெல்லாம் ஏனம்மா..?“ என்றான் இவன்..
„வாழ்வுக்கும் சாவுக்கும் ஒரு அர்த்தம் வேணாமா? அதுக்காகத்தான்“ என்றாள் அம்மா.
இவன் அம்மாவைத்தேடினான்..
அம்மாவின் முகத்தைக் காணமுடியாமல் இருள்.
பிறகு சற்றைக்கெல்லாம் முற்றிலும் இருள்.
(பிரசுரம்: பூவரசு 1992 .
(புதியவன் என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதை)